தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே மீனாட்சிப்பட்டியில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த டிஜிட்டல் போர்டை நேற்று அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து காலையில் அதை பார்த்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போர்டை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மூலம் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் பெட்ரோல் குண்டுகளை வீசும் காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதில் 4 பைக்குகளில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் சமுதாய போர்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி அங்கிருந்து தப்பிச் செல்கின்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் இரு தரப்பைச் சேர்ந்த 9 பேரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
கடந்த 2 தினங்களுக்கு முன்பு மீனாட்சி பட்டி அருகே உள்ள அனியாபரநல்லூர் பகுதியில் நடந்த சுபநிகழ்ச்சிக்கு இளைஞர்கள் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது மீனாட்சிபட்டியைச் சேர்ந்த சிலர் போதையில் அவர்களை வழிமறித்து தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் வந்த பைக்கையும் பறிமுதல் செய்து வைத்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் மீண்டும் அவர்களிடம் பைக்கை கேட்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர் நேற்று அதிகாலை பெட்ரோல் குண்டுகளை வீசி இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெட்ரோல் குண்டு வீசிய தரப்பில் 6 பேரையும், மற்றொரு தரப்பில் 3 பேர் என மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


