ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த சைட் மியூசியம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை திருச்சி மண்டல மத்தியதொல்லியல் துறை இயக்குனர் முனைவர் அருண்ராஜ் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர் யதீஸ்குமார் மற்றும் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது பொருநை நாகரீகம் 5 ஆயிரம் வருடம் பழமையானது என சிவகளையில் எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியை வைத்து முனைவர் ராஜன் உலக தமிழ் மாநாட்டில் அறிக்கை சமர்பித்துள்ளார். இதனால் ஆதிச்சநல்லூர், சிவகளை,கொற்கை மீது மாணவர்கள் கவனம் திரும்பியுள்ளது. ஆதிச்சநல்லூருக்கு தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளியை சேர்ந்த 150 மாணவர்கள் வந்தனர். மாணவ ஒருங்கிணைப்பாளர் மங்கள காயதிரி இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தொல்லியல் ஆர்வலர் யதீஸ்குமார் மாணவ மாணவிகளிடம் விளக்கமளித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆய்வாளர் குமரேசன் ராணி அண்ணா கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் ரிதிகா, ஆழ்வார் குறிச்சி பரம கல்யாணி கல்லூரி மாணவி ரூபாதேவி உள்பட பலர் உடன் வந்தனர்.


