திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் வருகிற 8ஆம் தேதி பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு “உயர்வுக்கு படி” மற்றும் “கல்லூரி கனவு” வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு “உயர்வுக்கு படி” மற்றும் “கல்லூரி கனவு” வழிகாட்டல் நிகழ்ச்சி தூத்துக்குடியில் 27.06.2023 அன்றும் 04.07.2023 அன்று கோவில்பட்டியிலும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 08.07.2023 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த வழிகாட்டல், கல்விக்கடன், உதவித்தொகை, முதல் பட்டதாரி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் விடுதியில் தங்கி படித்தல் போன்ற உதவிகள் செய்து தரப்படவுள்ளது. எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பிற பள்ளிகளில் பிளஸ் 2 பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்” என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


