மும்பை – தூத்துக்குடி இடையே வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
மும்பையில் இருந்து சிறப்பு ரயில் (வண்டி எண்: 01143) வெள்ளிக்கிழமை தோறும் 07.07.2023 முதல் 28.07.2023 வரை 13.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் 23.00 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில் (வண்டி எண்:01144) ஞாயிற்றுக்கிழமை 09.07.2023 முதல் 30.07.2023 வரை மாலை 4.00 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 15.40 மணிக்கு மும்பை வந்தடையும்.
தாதர், கல்யாண், லோனாவாலா, புனே, டவுண்ட், சோலாப்பூர், கலபுர்கி, வாடி, ராய்ச்சூர், குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, திருத்தணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோனம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் கோவில்பட்டி ஆகிய ஊர்களில் நின்று செல்லும்.
ஏசி 2-அடுக்கு, ஏசி 3-அடுக்கு, 10 ஸ்லீப்பர் வகுப்பு, 04 பொது இரண்டாம் வகுப்பு மற்றும் 01 லக்கேஜ் கம் கார்டு பிரேக் வேன்கள் மற்றும் ஒரு ஜெனரேட்டர் வேன் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு 05.07.2023 அன்று அனைத்து கணினி மயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களிலும் www.irctc.co.in என்ற இணையதளத்திலும் சிறப்புக் கட்டணத்தில் திறக்கப்படும்.
மும்பை மற்றும் தூத்துக்குடி இடையே வாராந்திர ரயில்களை இயக்க மத்திய ரயில்வேக்கு பயணிகள் நலச்சங்கம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது. தற்போது மத்திய ரயில்வே நிர்வாகம் வாராந்திர ரயிலை அறிவித்துள்ளதற்கு அச்சங்கத்தின் செயலாளர் பிரம்மநாயகம் நன்றி தெரிவித்துள்ளார்.


