நெல்லை -திருச்செந்தூரில் மிகவும் முக்கிய ரயில் நிலையமாக கருதப்படும் செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படுமா? என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்துங்கநல்லூர் ரயில் நிலையம், நெல்லை திருச்செந்தூர் வழித்தடத்தில் மிக முக்கிய ரயில் நிலையமாகும். இந்த நிலையத்தின் அருகில் இரண்டு பெரிய கல்வி நிறுவனங்கள் உள்ளன. கருங்குளம் யூனியன் அலுவலகம், சுமார் 42 கிராம மக்கள் கூடும் பராம்பரிய மிக்க வாரசந்தை, போஸ்ட் ஆபிஸ், கல்வி நிலையங்கள், கால்நடை ஆஸ்பத்திரி உள்பட அலுவலங்கள் இவ்வூரில் பல உள்ளன. செய்துங்கநல்லூரை சுற்றி தென் திருப்பதி என கருத்தப்படும் கருங்குளம் வெங்கடசலாபதி கோயில், தென் சிதம்பரம் என போற்றப்படும் செய்துங்கநல்லூர் பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் கோயில், தென் திருவரங்கம் எனப்படும் ரெங்கராஜ பெருமாள் கோயில், தென் சீர்காழி எனப்படும் கொங்கராயகுறிச்சி சிவன் கோயில், தென் காசி எனப்படும் முறப்பநாடு சிவன் கோயில், நவலிங்கபுரங்களான வல்லநாடு, கொங்கராயகுறிச்சி, தெற்குகாரசேரி சிவன் கோயில்கள் உள்பட பல்வேறு சிறப்பு மிக்க ஆன்மிக தலங்கள் உள்ளன.

மேற்கண்ட கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் இறங்கி தான் இங்கிருந்து செல்ல வேண்டியது உள்ளது. வேளாங்கண்ணிக்கு செல்லும் கிறிஸ்தவ பக்தர்கள் ஆயித்துக்கும் மேற்பட்டோர் இந்த பகுதியில் வசிக்கிறார்கள். இவர்கள் வேளாங்கண்ணி செல்ல செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தினை பயன்படுத்துகிறார்கள். சனிக்கிழமை தோறும் கச்சனா விளை சென்று வனத்திருப்பதி செல்வோரும், குரும்பூரில் இறங்கி நாலுமாவடி ஜெபக்கூட்டத்துக்கு செல்வோரும் மிக அதிகமாக இந்த ரயில் நிலையத்தினை பயன்படுத்துகிறார்கள்.
செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் மூன்று பிளாட்பார்ம் கொண்டது. இதில் இரண்டு பிளார்ட் பார்ம் இரயில் நின்று செல்ல பயன்படுத்துப்படுகிறது. மூன்றாவது வழித்தடத்தில் ரயில் பாதைகளை ஒழுங்குப்படுத்தி இயந்திர எஞ்சின்கள் எப்போதுமே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் நிலையத்தில் தினமும் மூன்று முறை கிராசிங் ரயில் நின்று செல்கிறது. ஆனால் முதல் பிளாட்பார்மில் இருப்பது போல இரண்டாவது பிளாட் பார்மில் எந்தவொரு வசதியும் இல்லை. பிளாட்பார்ம் முழுவதும் புல் முளைத்து கிடக்கிறது. இந்த புல்லில் முள்செடிகளும் வளர்ந்து காணப்படுகிறது. இறங்கும் குழந்தைகள் காலை இந்த முற்கள் பதம் பார்த்து விடும். மேலும் இந்த பிளாட் பார்மில் விளக்கு இல்லை. எனவே இரவு நேரத்தில் இறங்கும்போது கூ இருட்டாக உள்ளது. எனவே பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை. அதுமட்டுமல்லாமல் நிற்கும் ரயிலில் இறங்கும் மக்களுக்கு குடிதண்ணீர் வசதி இல்லை. காத்திருக்கும் பயணிகளுக்கு கழிவறை வசதியும் இல்லை. இந்த ரயில் நிலையத்தின் எதிர் பக்கத்தில் உள்ள கல்லூரி மற்றும் சுந்தரபாண்டிய சாஸ்தா கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்களும் மாணவ மாணவிகளும் வந்து செல்கின்றனர். இவர்கள் முற்காலத்தில் ரயிலைத்தான் பயன்படுத்தி வந்தனர். தற்போது ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாத காரணத்தினால் இவர்கள் ரயிலை பயன்படுத்தாமல் 2 கிலோ மீட்டர் நடந்து வந்து பஸ் போக்குவரத்தினை பயன்படுத்துகிறார்கள். அதற்கு காரணம் இந்த ரயில் நிலையத்தில் கிராசிங் நேரத்தில் எதிர் பிளாட்பார்ம் போவதற்கு ஓவர் பிரிட்ஜ் வசதி இல்லை. எனவே ரயிலை பல சமயங்களில் விட்டு விடும் அவல நிலை உள்ளது. எனவே செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் ஓவர் பிரிட்ச் இருந்தால் மக்கள் ஏறி மறு பிளாட்பார்ம் செல்ல ஏதுவாக இருக்கும்.
வருங்காலத்தில் பிளாட் பார்மை உயர்த்த ஏற்பாடு நடைபெற உள்ளதாக தெரிகிறது. செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தினை தரம் உயர்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. அந்த சமயத்தில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது, செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் மிக முக்கிய ரயில் நிலையமாக மாறி விட்டது. குறிப்பாக ரயில் மின் மயமாக மாறி விட்ட பிறகு இங்கு மின்சார சப் ஸ்டேஷன் உள்பட, ரயில்வே கிராசிங் போன்ற வசதி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் பேருந்து நிலையம் அருகில் இருந்து அருமையான சாலை வசதியும் உள்ளது. எனவே ரயில் நிலையத்துக்கு மக்கள் வர வசதியாக உள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்ட கே.டி.சி நகர் உள்பட வளர்ந்து வரும் நகரத்தில் இருந்து கூட பயணிகள் நெல்லை சந்திப்பு ரயிலில் இரயில் நிலையத்துக்கு சென்று முன்பதிவு செய்வதை விட, செய்துங்கநல்லூர் வருகை தந்து பதிவு செய்வதையே விரும்பி வருகின்றனர். இதனால் தினமும் 10 ஆயிரத்துக்கு மேல் செய்துங்கநல்லூரில் வசூல் நடைபெறுகிறது. அடிப்படை வசதி இல்லாமலேயே ரயில் நிலையம் வசூல் செய்யும் போது நல்ல வசதிகள் இருந்தால் மேலும் வசூல் நடைபெற ஏதுவாக இருக்கும். செய்துங்கநல்லூரில் உள்ள இரண்டாவது பிளாட்பார்மில் அடிக்கடி ரயில் நிற்கிறது. அங்கு விளக்கு வசதி, பிளாட்பார்ம் இல்லாமல் முள் முளைத்து கிடக்கிறது. எனவே இரவில் இறங்கி நிற்கும் போது பாம்பு போன்ற விஷசந்துகள் தீண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மழையின் நனையாமல் பயணிகள் நின்று பயணிக்க நிழற்குடை வசதி எதுவும் இல்லை. எதிர்பக்கத்தில் கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. ஆனால் பிளாட்பார்மை கடந்து செல்ல ஓவர் பரிட்ஜ் அமைத்து தர வேண்டும். தென்னக ரயில்வேயில் திருச்செந்தூர் ரயில் பாதை வசூலில் 10 வது இடத்துக்குள் உள்ளது. அதுபோலவே செய்துங்கநல்லூர் ரயில் நிலையமும் வசூலில் முன்னணி வகித்து வருகிறது. ஆன்மிகத்தலங்கள் செய்துங்கநல்லூர் நிலையத்தினை சுற்றி இருந்தும் கூட, ஆன்மிகத்திற்காக திருச்செந்தூர் & பழனியை இணைக்க உருவாக்கப்பட்ட பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் செய்துங்கநல்லூரில் நின்று செல்வது இல்லை. எனவே அடிப்படை வசதியை செய்து, பாலக்காடு ரயிலை செய்துங்கநல்லூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தற்போது ஒலிபெருக்கி மூலம் ரயில் வரும் நேரத்தினை அறிவிக்கும் வசதி, மின்சார ரயிலுக்காக செய்துங்கநல்லூரில் துணை மின் நிலையம் என பல்வேறு வசதி இருந்தும் கூட பாலக்காடு ரயில் நிற்காமல் செல்வதும், அடிப்படை வசதி இல்லாமல் இந்த ரயில் நிலையம் இருப்பதும், இந்த பகுதி பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே பாலக்காடு ரயிலை இந்த கிராசிங் ரயில் நிலையத்தில் நிறுத்தி, அடிப்படை வசதியை மேம் படுத்தி தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலெக்டர் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
செய்துங்கநல்லூர் திருச்செந்தூர் பழனி ரயில் ஆரம்ப காலத்தில் செய்துங்கநல்லூரில் நின்று தான் சென்றது. அதன் பிறகு கொரோனா காலத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டு விட்டது. கொரோனா காலத்திற்கு பிறகு அனைத்து ரயிலும் எக்ஸ்பிரசாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டது. அப்போது செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரயில்களும் செய்துங்கநல்லூரில் நின்று சென்றது. இதற்கிடையில் பழனி & ரயில் பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. அந்த சமயத்தில் இருந்து தான் செய்துங்கநல்லூரில் இந்த ரயில் நிற்கவில்லை. எனவே செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமையில் போராட்டம் நடந்தது. செய்துங்கநல்லூர் போஸ்ட் ஆபிஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ், கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஒரு காலகட்டத்தில் இந்த போராட்டம் முற்றுகை போராட்டமாக உருவெடுத்தது. எனவே போராட்டத்தில் ஈடுபடுவர்களை செய்துங்கநல்லூர் போலிசார் கைது செய்ய திட்டமிட்டனர். அப்போது பொதுமக்களுக்கும் , போலிசுக்கும் பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி செந்தில்ராஜ் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், வியாபாரிகள் சங்கத்தினர், முஸ்லிம் அமைப்புகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. வெங்கடேஷ் உடன் இருந்தார். பேச்சுவார்த்தை முடிவில் மாவட்ட ஆட்சி தலைவர் தலையீட்டு செய்துங்கநல்லூரில் இரயில் நின்று செல்ல ஏற்பாடு செய்வதாக கூறினார். அதற்கான முயற்சியும் எடுத்தார். ஆனால் தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில் தொடர்ந்து செய்துங்கநல்லூர் மக்கள் ரயில்வே நிர்வாகத்துக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புதல், தங்களுடைய போனில் ஸ்டேஸ் வைத்தல் என போரட்டம் நடத்தினர். இந்த வேளையில் மீண்டும் மதுரை ரயில்வே மேலாளருக்கு மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி செந்தில்ராஜ் ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் செய்துங்கநல்லூரில் மக்கள் நலன் கருதி ரயிலை நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். கடந்த வாரம் இந்த கடிதம் மதுரை தென்னக ரயில்வேக்கு அனுப்ப பட்டுள்ளது. எனவே விரைவில் செய்துங்கநல்லூரில் பாலக்காடு ரயில் நின்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


