தூத்துக்குடி பனிமய மாதா ஆலய தங்கத் தோ்த் திருவிழாவை முன்னிட்டு சென்னை – தூத்துக்குடி இடையே கூடுதல் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அவா்கள் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். கடிதத்தில் ஆகஸ்ட் 3, 5 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கும், தூத்துக்குடியிலிருந்து ஆகஸ்ட் 4,6 ஆகிய தேதிகளில் சென்னைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
விழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்கேற்ப தெற்கு ரயில்வே நிர்வாகம் 2 சிறப்பு ரயில்களை மட்டும் இயக்குவதாக தற்போது அறிவித்துள்ளது. சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 3ம் தேதி வியாழக்கிழமை மாலை 4.15 மணிக்கு (வண்டி எண்:06005) புறப்பட்டு மறுநாள் 4ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 2.25 மணிக்கு தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் வந்தடைகிறது. தூத்துக்குடியிலிருந்து 4ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 2.45 மணிக்கு (வண்டி எண்:06006) புறப்பட்டு சனிக்கிழமை மாலை 2.45 மணிக்கு சென்னை எக்மோர் சென்றடைகிறது.
இதுகுறித்து பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரம்ம நாயகம் கூறுகையில், உலக புகழ்பெற்ற பனிமயமாதா ஆலய விழாவிற்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். தற்போது 2 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பக்தர்களின் நலன் கருதி ஆக.4ஆம் தேதி சென்னையில் இருந்தும், 6ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என தெரிவித்தார்.


