தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கு நில எடுப்பு பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 75 கி.மீ. தூரத்திற்கு நீர்வரத்து கால்வாய்கள் கொண்டு வரப்படுகிறது. இதில் 67 கி.மீ. திருநெல்வேலி மாவட்டத்திலும், 8 கி.மீ. தூத்துக்குடி மாவட்டத்திலும் கால்வாய் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர், நடுவக்குறிச்சி ஆகிய கிராமங்களில் நில எடுப்பு பணிகள் நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் இந்த பணிகளுக்காக 50 மீட்டர் அகலத்தில் இந்த கால்வாய்கள் தோண்டப்பட்டு வருகிறது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அதிகமாக வரும்போது 3500 கனஅடி தண்ணீர் அங்கிருந்து எடுக்கப்பட்டு கருமேனியாறு நம்பியாற்றினை இணைத்து கடைசியாக இருக்கின்ற கிராமங்களுக்கு 500 கன அடி தண்ணீர் வரும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 8 கி.மீ. கால்வாய் பணிகளுக்கு 6.7 கி.மீ. தூரத்திற்கு நில எடுப்பு செய்யப்பட்டு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1.3 கி.மீ. தூரத்திற்கு நடுவக்குறிச்சி கிராமத்தில் நில எடுப்பு பணிகள் 11 பட்டாதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் நடைபெறாமல் உள்ளது.
இந்த நிலையில் அந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று அந்த இடத்திற்கு நேரில் வருகை தந்தார். அவர் இதுதொடர்பான அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் பட்டாதாரர்களிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இதுகுறித்து நில நிர்வாக ஆணையர் மற்றும் பொதுப்பணித்துறை செயலர் ஆகியோரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர் தெரிவித்தார்.


