புன்னக்காயல் பெண் பஞ்சாயத்து தலைவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள புன்னக்காயல் கிராமத்தை சேர்ந்தவர் ஆல்வின். இவரது மனைவி சோபியா(50). இவர் புன்னக்காயல் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் புன்னக்காயல் கிராமத்திற்கு குடிதண்ணீர் செல்லும் குழாயை, புன்னக்காயல் மறக்குடி தெருவை சேர்ந்த சசின்டோ என்பவர் உடைத்து தன்னுடைய வீட்டு வேலைக்கு அந்த தண்ணீரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சோபியா, குடி தண்ணீர் குழாயை சேதப்படுத்திய புன்னக்காயல் மறக்குடி தெருவை சேர்ந்த சசின்டோ வீட்டிற்கு சென்று கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சசின்டோ, அவரது சகோதரர் ரமேஷ், நண்பர் தாசன் மகன் கிறிஸ்டியன் ஆகியோர் சோபியாவை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சோபியா அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோ் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்டியனை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சசின்டோ, அவரது தம்பி ரமேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். பஞ்சாயத்து தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் புன்னக்காயல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


