தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு, குலசேகரப்பட்டினம், குளத்தூர், சிவகளை மற்றும் கொட்டங்காடு பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு தனியார் பங்களிப்புடன் சுமார் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த பணிகள் துவக்கநிகழ்ச்சி இன்று ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக குழு துணை தலைவருமான கனிமொழி, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி இந்த பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பொற்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ஆதிச்சநல்லூரில் முதல் முறையாக நடந்த அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள் வெளிநாடுகளில் உள்ளது. இதனை மீட்க தமிழக முதல்வர், அமைச்சரிடம் கலந்தாலோசித்து நிச்சயம் பாராளுமன்றத்தில் பேசி ஆதிச்சநல்லூர் பொருட்களை மீட்டு வர நடவடிக்கை எடுப்பேன். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் உள்ள கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.


