“ஆச்சி ராஜா கதை நல்லாத்தான் இருக்கு. இன்னும் நிறைய சொல்லேன்”. ராசுக்குட்டிக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.
“ஏலேய் ராசுக்குட்டி நம்ம ஊருல உள்ள ராஜா கதை சொல்லுதேன்”. சிரித்துக்கொண்டே ஆச்சி கூறினார்.
“சொல்லு ஆச்சி”. ஆச்சி தொடர்ந்தாள்.
“ஒரு விசயம் தெரியுமா? நாம அம்பாசமுத்திரம் போவுமே நினைவு இருக்கா?”.
“ஆமா ஆச்சி நல்ல நினைவு இருக்கு. சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு தானே-“
“நல்ல ஞாபகம் வச்சிருக்கியே”.
“அங்க போற வழியில ஒரு கால்வாய் இருக்கு”.
“அங் கன்னடியன் கால்வாய். கல்லிடைககுறிச்சி ஊருக்கிட்ட நீ காட்டியிருக்க”.
“நல்லா ஞாயபகம் வச்சிருக்க. ஆமா கல்லிடைகுறிச்சி எதுக்கு பேமசு தெரியுமா?”
“தெரியுமே நீ தான் சொல்லியிருக்கீயே. அப்பளம்”
“சரியா சொன்ன. சரி அந்த ஊரு கொல்லை புறத்திலத்தான் கன்னடியான் கால்வாய் ஓடி வருது”
“ஆமா ஆச்சி. பஸ்ல இருந்து பாக்கும் போதே தெரியும். வீட்டு பின்னால படித்துறை இருக்கும். அந்த இடத்தில இந்த கால்வாய் நம்ம ஆறு போலவே ஓடிவரும்”
“ஆங். அந்த கால்வாய் தோன்றிய கதையை தான் சொல்லப்போறேன்”.
“அச்சு குண்டு. ஆச்சின்னா ஆச்சி தான் என் அச்சு குண்டு ஆச்சி. சொல்லு ஆச்சி. நல்லா இருக்கும்”.
“ஏலே கல்லிடைக்குறிச்சி அப்பளமா நல்லா இருக்க?” சிரித்தாள் ஆச்சி. தொடர்ந்து கதை சொல்ல ஆரம்பித்தாள்.
“600 வருசத்துக்கு முன்னால கேரள ராஜா ஒருத்தர் இருந்தாரு. அவரு ஆட்சி நம்ம ஊரு வரைக்கு இருந்து இருக்கு. மனுசன் நல்லாத்தான் இருந்தாரு. செல்வ செழிப்பு அதிகம். பொன்னும் பொருள் கேட்டவியளுக்கு அள்ளி அள்ளி கொடுத்தாரு. ஆனா அவுக உடம்புல தீராத பிரச்சனை இருந்துச்சு”. பெரும் மூச்சி விட்டாள் ஆச்சி.
“ என்னது ஆச்சி”. ஆர்வமாய் கேட்டான் ராசுக்குட்டி.
“அதுதான் அவுகளுக்கு தீராத வயிற்றுவலி ஏற்பட்டுச்சி. பல வைத்தியம் செஞ்சி பாத்தாவ. ராஜ வைத்தியம் எல்லாம் பாத்தாவ. ஆனா வலி தீரலை”.
“அடப்பாவமே”.
“அதான் ராஜா கோயில் குளமா போய் வந்தாவ. பகவான் கிட்ட நெடுஞ்சான் கிடையாய் கிடந்து வணங்குனாவ. ஆனாலும் பிரச்சனை தீரலை”.
ஆச்சி தொடர்ந்து கதை சொன்னாள்.
“ஒரு நாள் அவுக கோயில் குளமெல்லாம் போயிட்டு வந்து ராத்திரி தூங்குனாவ. அவுகளுக்கு கனவு வந்துச்சு. அந்த கனவுல வானத்துக்கும், பூமிக்குமா மிக பெரிய உருவம் ஒன்னு தோன்றிச்சி. ராஜா பயந்தே போனாவ. வந்த உருவம் ராசா “பயப்படாத உனக்கு நல்லது செய்யத்தான் வந்து இருக்கேன்னு” சொல்லிச்சு.
“அடப்பாவமே. நீ சொல்லும் போதே எனக்கு பயமா இருக்கு. ராஜா பயந்துல்லா போயிருப்பாவ”.
“பொறவு நடுராத்திரியில உருவம் வந்தா பயம் வராமலா இருக்கும். ஆனாலும் அந்த உருவம் ராஜாவுக்கு நல்லதுதான் செஞ்சுது”.
“என்ன செஞ்சுது ஆச்சி”
“ராஜா கிட்ட, Ôராசாவே உனக்கு ஏற்பட்டுள்ள இந்த வியாதி கர்ம வியாதி. நீ முன் ஜென்மத்தில் செய்த பாவம். அது இன்னும் தீராம இருக்கு. ஜென்மம் தீரணுமுன்னா, நீ வலி யை அனுபவிச்சே தீரணுமுன்னு சொன்னது அந்த உருவம்”.
“ஆக ராசாவுக்கு ஒன்றும் ஓடலை. கஷ்டத்தோட அன்னைக்கு படுத்து தூங்கிட்டாரு. மறுநா எத்திரிச்சு காடு மேடுன்னு அலைஞ்சாரு. இதுக்கு எதுவும் பரிகாரம் உண்டான்னு பல சாமியார் கிட்டே கேட்டாரு. கோயில் குளமா போயி தீர்வு கேட்டாரு. கிடைக்கலை. மறுநாள் ராத்திரி கனவுல வந்த உருவமே. நீயாவது இதுக்கு பரிகாரம் சொல்லு. என் வலியை போக்கு . நான் பட்ட ரணம் போதுமுன்னு கதறி அழுதுட்டு படுத்திருக்காரு ராஜா. அப்ப கனவில் தோன்றிய அதே உருவம் திரும்பவும் வந்துச்சு. Ôமன்னா நீ உன் சொத்துல பெரும்பகுதியை பிரம்மச்சாரி பிராமணனுக்குத் தானமாக கொடு. உன் ரணம் தீருமுன்னுÕ சொல்லிட்டு மறைஞ்சு போச்சு. ராத்திரி புறாவும் முழிச்சே இருந்தாரு ராஜா. யாருக்கிட்டேயும் ஒண்ணும் பேசலை. எப்போ விடியுமுன்னு காத்துக்கிட்டு இருந்தாரு”.
“மறுநாளு தனது பாவத்தைப் போக்க ராஜா பொன்னையும், பொருளையும் மூட்டை கட்டி வைச்சாரு. அதை வாங்கி கிட்டு பிரம்மச்சாரி பிராமணர் வரணுமுன்னு தண்டரோ போட ஏற்பாடு பண்ணினாரு. தண்டரோ போட்டு எல்லா ஊரிலேயும் சொன்னாரு. ஆனா இவரு பாவத்தை வாங்கிக்க எந்த பிராமணரும் வரலை”.
“ஏன் ஆச்சி. பணம் தான் கொடுக்காரே பாவத்தை யும் பணத்தையும் வாங்க வேண்டியது தானே”.
“அது எப்படி பிரமாணரு அவரு தவ வலிமையால பல புண்ணியத்தை சேத்து வைச்சிருப்பாரு. பாழாப் போன பணத்துக்காக புண்ணியத்தை விட்டுக்கொடுப்பாவுளா?”.
“சரி. உள்ளூருல பிராமாணரு கிடைச்சாவுளா?”
“எங்க கிடைச்சாவ. இனிமே உள்ளூர் பிராமணர்களை நம்பி எந்த பிரயோசனமும் இல்லை. எனவே வெளியூர் பிராமணர்களுக்குத் தண்டரோ போடனுமுன்னு திட்டம் போட்டாரு ராஜா. கேரள நாட்டு ராசா பிரச்சினை கடைசியில கர்நாடக நாட்டுக்கு போயிட்டு. ஆனாலும் நோய் தீர்ந்த பாடில்லை. கேரள மன்னன் நோய் வலி தாங்க முடியாம, தண்டரோ போட்டு பிராமணர் வராத காரணத்தால மன வேதனை அதிகரிச்சிருச்சு”
“அய்யோ பாவமே . அதுக்கப்புறம் ஆள் கிடைச்சுதா?”
“அந்த நேரத்தில கன்னட நாட்டில் நல்ல மந்திர சக்தி கொண்ட, தைரியம் மிக்க கன்னட பிரம்மச்சாரி பிராமணர் ஒருத்தர் தண்டரோவைக் கேட்டாரு. உடனே கேரளா ராஜாவிடம் தானம் பெற தயாரானாரு. இதுக்காக இவரு கேரள அரசனைப் பார்க்க கன்னட நாட்டுல இருந்து கிளம்பினாரு”.
“இவரு வாரத் தகவல் கேரள அரசருக்கு தெரிஞ்சுது. ராசாவுக்குச் சந்தோசம் தாங்க முடியலை. கன்னட பிரம்மச்சாரியை எதிர்நோக்கி காத்து இருந்தாரு. பிரம்மசாரியும் ராஜாவை பாத்தாரு. ராஜா வயித்த வலி தாங்காம குன்னி குனிஞ்சு போய் இருந்தாவ. அவருக்கு பாவமா இருந்துச்சு. ஆனாலும் தனது புண்ணியத்தை பறி கொடுத்து ராஜா பாவத்தை வாங்கவான்னு யோசனை பண்ணினாரு, ராஜாவை பாத்தாரு, அவரு முழிகக முழி ரொம்ப மோசமா இருந்துச்சு. அதனால என்ன செய்யன்னு தெரியமா பிராமணரும் முழிச்சாரு”
“ராஜா பாவத்தை வாங்கினாரா? அந்த அய்யரு”.
“ வாங்குனாரு. அதுக்காக ராஜா பாவ மூட்டையை கொண்டு பெரிய எள்ளுப் பொம்மை ஒன்னை தயார் செய்தார். அந்த பாவ மூட்டையை பிரம்மச்சாரிக்கு வழங்கினாரு. ஆனா அந்த பாவ மூட்டைக்கு உயிர் வந்துட்டு, அது பிரம்மசாரி கூட போவ மருத்துட்டு, அவரு தன்னோட மந்திர சக்தியால பாவத்தை தன் கூட வர கேட்டாரு. ஆனால் அந்த பொம்மை தன்னோட கட்டை விரல் இரண்டையும் மடிச்சி மூன்று விரலை காட்டிச்சி. பிரச்சாரிக்கு கோபம் வந்துட்டு அவரு முடியாதுன்னு தலையாட்டி மறுத்தாரு. அதனால் அந்த பொம்மை இரண்டு விரலை காட்டிச்சி. திரும்பவும் பிரம்மசாரி முடியாதுன்னு சொல்லிட்டாரு. ராஜாவுக்கு ஒண்ணும் ஓடலை . இங்க என்ன நடக்கு. பொம்மைக்கு உயிர் வந்துட்டு, பிரம்மசாரி முடியாதுன்னு தலையாட்டுறாரு. கடைசியில நம்மளை திரட்டுல விட்டுருவாரோன்னு நினைச்சாரு. கடைசியில பொம்மை ஒரு விரலை காட்டிச்சி சரின்னு பிரம்மசாரி சொல்லிட்டாரு. கடையியில அந்த பொம்மை அவர் காலுல விழுந்து வணங்கிட்டு நின்னுச்சு”.
“என்ன சொன்னாரு ஆச்சி. எனக்கு ஒண்ணுமே புரியலையே?”
“உனக்கு மட்டுமா ஒண்ணும் புரியலை. ராஜாவுக்கும் ஒண்ணும் புரியலை. இது பத்தி ஒண்ணுமே தெரியலையேன்னு, பரக்க பரக்க முழிச்சாரு ராஜா. இங்க என்னடே நடக்கு நம்மள விட்டு பாவம் போவுமா? என மனசுக்குள்ளே கஷ்டப்பட்டாரு. கடைசியில பிரம்மசாரிக்கிட்ட விளக்கம் கேட்டாரு ராஜா”.
சிரிச்சுக்கிடடே பிரம்மசாரியும் பதில் சொன்னாரு.
“அந்த உருவம் என்ன சொல்லிச்சு தெரியுமா? . Ôஉனக்கு என்னுடைய மந்திரத்தில் எவ்வளவு பலன் கொடுத்தால் நீ என்னைப் பாதிக்காமல் போவாய் என்று உனது பாவமூட்டையான பொம்மை வடிவில் உள்ள பிம்பத்திடம் கேட்டேன். அது ஒரு நாளில் திரிகால பூஜையில் கிடைக்கும் பலனைத் தா என்றது. நான் முடியாது என்று கூறினேன். அப்படியென்றால் மூன்று காலத்தில் இரண்டில் கிடைக்கும் பலனைக் கொடு என்று கேட்டது. அதையும் நான் முடியாது என்றேன். முடிவில் ஒரு கால பூஜை பலனைப் பெற்றுக் கொண்டு உனது பாவ மூட்டை என்னைத் தாக்காமல் விட்டு விட்டுப் போய்விட்டதுÕ என்றார் பிரம்மச்சாரி”.
அவ்வளவு தான் கேரள அரசனுக்கு வேர்த்து விறுவிறுத்துபோய் விட்டான். முறைப்படி காயத்ரி செய்தால் அதற்கு இவ்வளவு விசேஷமா? எனப் பிரமித்து போனாரு ராஜா.
அதுக்கு அப்புறம் ராஜா பாவம் தொலைஞ்சிட்டு. பாவத்தினால் அரசனின் நோயும் தீர்ந்து போயிட்டு. அப்போது கேரள ராஜா ஆட்சி எல்கைக்கு உட்பட்ட பொதுமக்கள் எல்லோரும் ராஜாவுக்காக பிரம்மசாரியை கொண்டாடினார்கள். ராஜா வலி தீர்த்த பெரிய பண்டிதருன்னு பெருமையா பேசுனாவ. ஆனால் பிரம்மச்சாரித்தான் நொந்தே போயிட்டாரு.
Ôதனது வறுமை காரணமாக இப்படி புத்தியில்லாமல் செஞ்சிட்டேனே. பிரம்மச்சாரியான எனக்கு இது தேவையா? இப்படி பொருளைத் தானமா வாங்கிட்டு, பாவ தோஷத்தை அல்லவா வாங்கிட்டோம். நம்ம புண்ணியம் புறாவும் போச்சே. இப்போ பெரிய பாவ மூட்டை நம்மை மேலே ஏறிட்டேன்னு வாப்பாருனாரு”.
“இந்தப் பாவ மூட்டையை நாம் வைத்துக் கொள்வதை விட, இதை நல்ல வழியில் செலவழிச்சி விடணும். அதை எப்படி செலவு செய்யலாமுன்னு யோசிக்க ஆரம்பிச்சாரு. இவருக்கு ராஜாவோட பாவத்தைப் போக்கத் தெரிஞ்சுது. ஆனால் தன் பாவத்தைப் போக்க தெரியலை. இதனால கன்னட பிரம்மச்சாரிக்கு பயித்தியம் பிடிச்ச மாறி ஆயிட்டு. இதுக்கு யாருக்கிட்ட போயி தீர்வு கேட்கன்னு நினைச்சாரு”.
“குள்ள முனியாம் குரு முனி அகத்தியர். இவரு கயிலாய மலையில் சிவசக்தி திருமணம் நடந்த போது முனிவர்களும், சித்தர்களும் காணக் கயிலாயம் போயிட்டாவ. இதனால வடக்க சரிஞ்சிட்டு, தெற்கு உயர்ந்துட்டு. இதனால உலகைச் சமன்படுத்த தென்திசை நோக்கி வந்தவர் அகத்தியர். விந்திய மலை கர்வத்தைத் தலையில் தட்டி அடக்கியவரு. மகா சமுத்திரத்தைத் தனது உள்ளங்கையில் அடக்கியவரு.
“அகத்திய மகரிஷி தென்நாடு வந்த போது அவரது கமண்டலத்தில் உள்ள நீரைக் குடகு மலையில் வைத்து விட்டு சிவனைப் பெருமானை நோக்கி ஜெபம் செஞ்சாரு. அப்போ இந்திரன் வளர்த்த யாகத்திற்குத் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது. அவன் விநாயகரை நோக்கி தண்ணீர் கேட்டான். விநாயகர் காகம் ரூபத்துல வந்து அகத்தியரின் கமண்டலத்தினைத் தட்டிவிட உருவானது காவிரி. இந்தக் காவிரி கன்னட நாட்டில் தான் உருவாகுது. எனவே கன்னட நாட்டில் அந்தணர்கள் அகத்தி மாமுனியைத் தங்களது குல தெய்வமாகவே வணங்குறாவ. அப்படிப்பட்ட குடும்பத்தில் வந்த கன்னட பிரம்மச்சாரி தனது பாவம் தீர அகத்திய மாமுனியைத் தேடிச் செல்ல முடிவு செஞ்சாரு.
அகத்தியரை கண்டு பிடிககிறது சாதரண விசயமா?”
ஆச்சி சொல்லும் போதே ஆர்வம் மேலிட ராசுக்குட்டி கேட்டான். “அப்புறம் ஆச்சி”
அப்புறம் இன்னைக்கு குப்புற படு. இனி நாளைக்குத்தான். என்று சொல்லிவிட்டு ஆச்சி தூங்க ஆரம்பித்தாள்.
சே. ஆச்சி கதையை முடிச்சிருக்கலாம். என நினைத்த ராசுக்குட்டியும் தூங்கியே போனான்.
ஆனால் அவன் மனதில் கன்னட பிரம்மசாரி, அகத்தியரை கண்டாரா? இல்லையா? என நினைத்துக்கொண்டே இருந்தது.
(தொடர்ந்து ஆச்சி கதை சொல்லுவாள்)


