முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் மீட்கப்பட்ட நந்தி, பெண் சிலைகள் ராட்சத இயந்திரம் மூலம் நெல்லை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. கடந்த வருடம் 2 வருடங்களுக்கு முன்பு ஜுன் மாதம் 20 ந்தேதி முத்தாலங்குறிச்சியை சேர்ந்த வள்ளிநாதன் என்பவர், பூந்தலை உடையார் சாஸ்தா கோயில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சிலை ஒன்று தென்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் கந்தசுப்பு, வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு வந்தனர்.

உள்ளூர் இளைஞர்களின் உதவியுடன் சுமார் 60 கிலோ எடை கொண்ட பெண் சிலை மீட்கப் பட்டது. இதுபோல், முத்தாலங்குறிச்சி காமராஜர் தெருவில் ஆற்றில் கிடந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட நந்தி சிலையும் ராட்சத இயந்திரம் மூலம் மீட்கப்பட்டது. ஆற்றுக்குள் இருந்து ராட்சத இயந்திரம் மூலமாக தூக்கி வரப்பட்டு, மற்றொரு இயந்திரம் மூலமாக மினி லாரி மூலம் ஸ்ரீவைகுண்டம் தாலூகா அலுவலகத்திற்கு அனுப்ப பட்டன.


இரண்டு சிலைகளும் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற்று இந்த சிலைகள் திருநெல்வேலி அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என வருவாய்த்துறை யினர் தெரிவித்தனர். இதில் நந்தி சிலை 400 வருடம் பழமையானது என்றும், பெண் சிலை 500 வருடம் பழமையானது எனவும் தெரியவந்தது.
கடந்த 2 வருட காலமாக இந்த சிலைகள் நெல்லை அருங்காட்சிகயத்துக்கு அனுப்ப இயலவில்லை. இதற்கிடையில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி .செந்தில்ராஜ் அவர்களிடம் மனு கொடுத்தார். அதன் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சி தலைவர் நேரடியாக தலையிட்டு இரண்டு சிலைகளையும் முறைப்படி அனுமதி அளித்து நெல்லை அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர் சிவசக்தி வள்ளியிடம் ஒப்படைத்தார். அப்போது சார் ஆட்சியர் கௌரவ் குமார், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் உடனிருந்தனர்.

இதற்கிடையில் நெல்லை அருங்காட்சியத்தில் 1 டன் நந்தி சிலையை வைப்பதற்கு பீடம் அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் சிலையை வைக்க ராட்சத இயந்திரங்கள் அருங்காட்சியகம் உள்ளே வர இயலாது எனவே அருங்காட்சியகம் வெளியே இருந்தே பீடத்தில் நந்தி சிலையை தூக்கி வைக்க ஏற்பாடு செய்தனர். இன்று காலை ராட்சத விஞ்ச் இயந்திரம் மூலம் நந்தி சிலையை தூக்கி பீடத்தில் வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கவிஞர் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர். சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை அண்ணாமலை சேகர் செய்திருந்தார்.
இந்த சிலையை அரசு அருங்காட்சியகத்தில் வைக்க ஏற்பாடு செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி. செந்தில்ராஜ், காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி ஆகியோருக்கு முத்தாலங்குறிச்சி ஊர் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


