ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது. இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பில் உள்ள ஏ, பி, சி ஆகிய மூன்று சைட்களில் பணிநடந்து வருகிறது. மேலும் அருங்காட்சியம் அமைக்கும் இடத்திலும் ஆரம்ப கால கட்ட பணி நடந்து வருகிறது. இதில் பி சைட்டில் கண்ணாடி அமைத்து, அதன் வழியாக ஆதிச்சநல்லூரில் உள்ள முதுமக்கள் தாழிகள் உள்ளது உள்ளபடியே அமைந்திருக்கும் இடங்களை காட்சி படுத்தும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே ஆதிச்சநல்லூருக்கு பல்வேறு பகுதியில் இருந்து பார்வையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கடந்த வாரம் சுவிசர்லாந்தை சேர்ந்த ஒருவர் ஆதிச்சநல்லூரை பார்வையிட வந்தார். தொடர்ந்து வடமாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த இடத்துக்கு குழந்தை எழுத்தாளர் சூடாமணி வருகை தந்தார். அவர் ஆதிச்சநல்லூரில் உள்ள பி மற்றும் சி சைட்டில் உள்ள முதுமக்கள் தாழிகள் மற்றும் பொருள்களை பார்வையிட்டார். அவருக்கு தொல்லியல் ஆய்வாளர் எத்தீஸ்குமார் விளக்கமளித்தார். அவருடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் வந்தனர்.


