இளையராஜா பிறப்பு: சூன் 2, 1943) இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு, இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான, பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
இளையராஜாவுக்கு, இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 25 சனவரி 2018 அன்று, இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில், புலமையும், முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.
இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர். 2022 சூலை 6 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் இவரை நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமித்தார்.
இளையராஜாவின் இயற்பெயர் “ஞானதேசிகன்” என்பதாகும். அவர் ஆரம்ப காலத்தில் பல மேடை கச்சேரிகளில் தனது சகோதரர்களுடன் சேர்ந்து இசையமைத்த போது பொதுவான கிராமிய பெயராக ராசய்யா என்று மாற்று பெயரை வைத்து கொண்டார்.
இவர் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் இராமசாமி–சின்னத்தாய் இணையாருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
இவரது மூத்த அண்ணன் பாவலர் வரதராஜன், தாவீது டேனியல் பாஸ்கர் (ஆர். டி. பாஸ்கர்), கங்கை அமரன் என்ற அமர் சிங் ஆகிய மூவரும் இவரது உடன்பிறந்தவர்கள் ஆவார்.
இவருடைய மனைவியின் பெயர் ஜீவா இவர்களுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் பவதாரிணி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இவருடைய தமையனார்கள் பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும் அமர் சிங் எனப்படும் கங்கை அமரன், இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா), யுவன் ஷங்கர் (யுவன் சங்கர் ராஜா), பவதாரிணி ஆகியோரும் திரைப்பட இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும், நாடகங்களிலும் பங்கு கொண்டார்.
பின்பு 1969 ஆம் ஆண்டு தன் 26ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கித்தார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.
பிறகு 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய “மச்சானைப் பாத்தீங்களா..” என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதைத் தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினைப் பெற்றன.
நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில், இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில், பத்ரகாளி திரைப்படத்தில் “கண்ணன் ஒரு கைக்குழந்தை”, மற்றும் ரீதி கௌளை ராகத்தில் கவிக்குயில் திரைப்படத்தில் “சின்னக் கண்ணன் அழைக்கிறான்” போன்றன இவருக்கு மேலும் புகழினைத் தேடித்தந்தன. முதன் முறையாகத் தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் “ப்ரியா” எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தார்.
இராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படுகின்றார்.
இளையராஜா புதிதாக ‘இசை ஓடிடி’ என்ற பிரத்தியேக இணையம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.


