சுப்பராயபுரம் தடுப்பணையில் 3 அடி தண்ணீர் மட்டும் தேக்கி வைப்பது எனவும், அதற்கிடையே மணல்வாரி தடுப்பணை அமைத்து இரு ஷட்டர் வைப்பது என விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சாத்தான்குளம் அருகே சுப்பராயபுரத்தில் கடந்த 15ஆண்டுகளுக்கு அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையில் கருமேனி ஆற்றுப்படுகையில் தடுப்பணை அமைக்கப்பட்டது. இதில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று விவசாயத்துக்கு பெரிதும் உதவின. இந்நிலையில் இந்த தடுப்பணையில் 6 அடி தண்ணீர் தேக்கி வைப்பதாலும், அதன் கரைகள் வலுவிழந்து உள்ளதாலும் மழை காலத்தில் இதில் தேக்கி வைக்கப்படும் நீர் அருகில் உள்ள தோட்டங்களில் புகுந்து விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது என விவசாயிகள் மத்தியில் புகார் தெரிவிக்கப்பட்டு அதனை விவசாயிகள் பாதிக்காதவண்ணம் மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் இதனை மாற்றி அமைப்பதற்கான விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்துக்கு சாத்தான்குளம் வட்டாட்சியர் ரதிகலா தலைமை வகித்தார். இதில் தாமிரவருணி வடிகால் கோட்ட உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம், மருதூர் மேலகால்வாய் உதவி பொறியாளர் நவீன்பிரபு ஆகியோர் விவசாயிகளிடம் கருத்து கேட்டு பதிவு செய்தனர்.
அதில் சுப்பராயபுரம் தடுப்பணையை அடுத்து மணல்வாரி தடுப்பணை அமைத்து இரு ஷட்டர் அமைப்பது. இந்த தடுப்பணையில் 3அடி மட்டுமே தண்ணீர் தேங்கும் வகையில் அமைக்க வேண்டும். அதற்கு மேல் தண்ணீர் இருந்தால் கருமேனி ஆற்று படுகையில் வழியாக திறந்து விட வேண்டும். குலசை ரஸ்தா செல்லும் பாதையை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்வது, தடுப்பணை கரைகளை வலுபடுத்தி அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள் ஒப்புதல் தெரிவித்தனர். மேலும் இதனை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து திட்ட மதிப்பீடு தயார் செய்து சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் சுப்பராயபுரம் ஊராட்சித் தலைவர் சுயம்புதுரை, சாஸ்தாவிநல்லூர் விவசாயிகள் நலச்சங்க செயலர் லூர்துமணி, வட்டார மனித நேய நல்லிணக்க பெருமன்ற செயலர் மகா.பால்துரை, ஒய்வு பெற்ற பொறியாளர் கனகராஜ், மண்டல துணை வட்டாட்சியர் தாஹிர் முகம்மது, வருவாய் ஆய்வாளர் பாலா, கிராம நிர்வாக அலுவலர் முத்துராமலிங்கம் , சர்வேயர் முருகேசன் உள்ளிட்ட அப்பகுதி விவசாயிகள், உடன்குடி விவசாயிகள் கலந்து கொண்டனர்


