கோடை வெயில் சுட்டெரிக்கிறது. தாமிரபரணியில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் குடிதண்ணீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். தாமிரபரணி வற்றிய காரணத்தினால் சாக்கடை நீராக மாறி விட்டது. இதற்கிடையில் அக்னி நட்சத்திரத்தில் சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பல்வேறு கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.
தாமிரபரணி தோன்றும் பொதிகை மலையில் உள்ள அகத்திய பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 6200 அடி உயரத்தில் உள்ள பொதிகை மலைக்கு மூன்று நாள் கரடு முரடான பாதை வழியாக நடந்து, மிருகங்கள் பயங்களில் இருந்து தப்பித்து மேக கூட்டத்துக்கு மேலே நடந்து சென்று, வழு க்கு பாறை, முட்டு ஏத்தம் வழியாக, இரண்டு இடத்தில் கயிறு கட்டி மேலே ஏறி அங்குள்ள பொதிகை அகத்தியருக்கு பூஜை செய்ய உள்ளனர். இந்த பூஜைக்கு உச்சிமகாளி தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் செய்துங்கநல்லூரில் இருந்து இன்று 26 ந்தேதி இரவு 8 மணிக்கு கிளம்பினர். இந்த குழுவில் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், பஞ்சாயத்து கிளார்க் சங்கரபாண்டியன், தூத்துக்குடி வினோத் உள்பட 20 பேர் கலந்துகொண்டனர். இந்த பயண குழுவினர் செய்துங்கநல்லூரில் அகத்திய பெருமானுக்கு சிறப்பு பூஜை செய்து அங்கிருந்து கிளம்பினார்கள். இவர்களை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட தாமிரபரணி விசுவாசிகள் வழி அனுப்பி வைத்தனர். தாமிரபரணி வற்றாமல் இருக்க வேண்டும் என கடினமான பயணம் செய்யும் அகத்தியரின் பக்தர்கள் ஆசை நிறைவேறி விரைவில் மழை பொழிய வேண்டும் என்பதே தாமிரபரணி விசுவாசிகளின் ஆசையாக உள்ளது.


