ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி பத்ரகாளி அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு கொதிக்கும் நீரில் வேட்டை பானை போடும் திருவிழா சிறப்பாக நடந்தது. இந்த திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் புன்னக்காயல் தாமிரபரணி சங்குமுகத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. அதன் பின் மலை குடியழைப்புடன் திருவிழா நடந்தது. அதன்பின் வில்லிசை நடந்தது. இரண்டாம் நாள் முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் கோயிலில் இருந்து பால் குடம் எடுத்து ஊர் சுற்றி வந்தனர். அதன் பின் பால்குடம் கோயிலை வந்தடைந்தது. அங்கு பத்ரகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிசேகமும் தொடர்ந்து அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து மதிய கொடை நடந்தது. இந்த விழாவில் மிகவும் விசேசமாக கருதப்படும் வேட்டை பானை போடும் நிகழ்ச்சி நடந்தது. கொதிக்கும் நீரில் அரிசி சமையல் செய்து, அதன் பின் கொதிக்கும் நீரை சாமியாடிகள் தலையில் ஊற்றி அருளாசி சொல்லும் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முத்தாலங்குறிச்சி பத்ரகாளி அம்மன் கோயில் கொடை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


