அன்றைக்கு கொடை பார்த்த கலக்கத்தில் நன்றாக தூங்கி கொண்டிருந்தாள் ஆச்சி. ராசுக்குட்டிக்கோ கதை கேட்கவேண்டும். எனவே என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டே இருந்தான்.
ஆச்சி மறுநாள் இரவுதான் எழுந்தாள். கொடை பார்த்த அலுப்பு. ஆனாலும் மாடுகளுக்கு புல் கொண்டு போடவேண்டும். வாயில்லாத ஜீவ ராசிகள் அல்லவா?. அவர்களை கவனிக்கவேண்டுமல்லவா?. அதன் பின் தான் தானும் சாப்பிட்டாள். “ஏன்னலே ராசுக்குட்டி சாப்பிட்டியா?” என கேள்வியும் கேட்டுக்கொண்டாள். அதன் பின் இரவு மொட்டை மாடிக்கு கிளம்பினாள். பின்னாலேயே ராசுக்குட்டியும் கிளம்பினான்.
“ஆச்சி இன்னைக்கு ஒரு கதை சொல்லு”. எங்கே கதை சொல்லப்போகிறாள் என நினைத்தப்படியே கேட்டான்.
“சொல்லுதேன் உனக்கு என்ன கதை வேணும். சொல்லுதேன்”. என்றாள்.
“எனக்கு என்ன கதை கேட்டாலும் சொல்லுவீயா?”. அதட்டியபடி கேட்டான்.
“ஆமாம் எம் பிள்ளைக்கு இல்லாததா? கண்டிப்பா சொல்லுவேன்”. ஆச்சி சிரித்தாள்.
“அப்புனா நம்ம ஊருக்கு வருற வழியிலே ஒரு பெரிய அம்மன் படுத்துகிடக்குமே அதைபத்தி சொல்லேன்”. வண்டி மறிச்சி அம்மனை பற்றி கேட்டான்.
“ஓ. நீ. வண்டி மறிச்சி அம்மனை பத்தி சொல்லுதியா?”.
“ஆமாம். எதுக்கு அந்த அம்மன் அவ்வளவு பெரிசா பிரமாண்டமா இருக்கு”.
ஆச்சரியமாக கேட்டான் ராசுக்குட்டி.
“சொல்லுதேன் கேளு”.
ஆச்சி சொன்ன கதையை கேட்க தயாரானான் ராசுக்குட்டி.
அது பெரிய புராண கதை. சரி ஆச்சி என்ன சொல்கிறாள் என கேட்போம்.
“ஒருநாள் துரியோதனன் அமைத்த அரசு மாளிகையில் நயவஞ்சகமாகப் பாண்டவர்கள் சிக்கிக் கொண்டாவ. இவுக தீயில் இருந்து தப்பி வெளியே வர முயற்சி செய்தாவ. உயிர் தப்பி அங்கிருந்து அஸ்தினாபுரத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்துக்கு போய் சேர்ந்தாவ பாண்டவர்கள். ஏற்கனவே நொந்து போய் உயிர் தப்பித்து வந்த அவர்களுக்கு அந்த ஊரிலேயும் ஒரு சோகக் கதைக் காத்திருந்தது. பாவம் எங்கு போனாலும் அவுகளை சோகம் விடாமல் துரத்தியது”.
பெரும் மூச்சு விட்டாள் ஆச்சி.
ராசுக்குட்டி அமைதியாக கேட்க ஆரம்பித்த்£ன்.
“அந்த ஊருல கணவனை இழந்த பிராமணப் பெண் ஒருத்தி இருந்தா. அவத்தான் பாண்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தா . அவளுக்கு மிகப்பெரிய பிரச்சனை இருந்தது. ஆனா அதை வெளிக்காட்டாமேயே இவுகளுக்கு உதவிககிட்டு இருந்தா, அந்த பிரமணத்தி”.
ஆச்சி கதையை தொடர்ந்தாள்.
“இந்தக் கிராமத்துக்கு பக்கத்துல பகாசூரவனம் இருந்துச்சு. அந்த இடத்தில் பகாசூரன் மற்றும் பகாசூரவல்லி என்னும் அசுர குல புருசன் பொண்டாட்டி வாழ்ந்த காடு இருந்துச்சு. அசுரனுக்குப் பசி எடுத்ததா அவ்வளவு தான், கிராமத்துக்குள் நுழைந்து கண்ணில் பட்டவுக எல்லோரையும் கொன்று தின்பான். இதனால் பயந்து போன மக்கள் அந்த அசுரனுடன் கூட உடன்படிக்கை போட்டு கிட்டாவ. அதன் படி மக்கள் அவனிடம் நீ கேட்டதை நாங்களே தந்து புடுதோம். அதை வாங்கிக் கிட்டு எங்களைத் துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் என்று பகாசூரனிடம் சொல்லிட்டாவ. அவனும் எனக்குத் தினமும் மது, மாமிசத்துடன் ஒரு வண்டி நிறையச் சோறு அனுப்பனும். அது மட்டுமல்லாமல் தினமும் ஒரு ஆண் மகனை எனக்கு சாப்பிட அந்த வண்டியோடு அனுப்பி வைக்கனும். அப்படின்னு சொல்லிட்டான். கிராம மக்களும் அவன் சொன்னத்துக்கு சரின்னு ஒப்புக் கொண்டனர். அப்படியே வீட்டுக்கு வீடு முறை வைத்து அவன் கேட்டதைப் போலவே ஆண் மகனையும், ஒரு வண்டி நிறைய சோறும், மதுவும், மாமிசமும், அனுப்பி வைத்தனர்”.
“அடப்பாவமே. தினமுமா?” வேதனையோடு கேட்டான் ராசுக்குட்டி.
Ê “கடைசியிலே பாண்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பிராமண பெண்ணோட முறை வந்தது. அவளுக்கு கவலை அடக்க முடியலை. அந்தப் பெண்மணி துக்கம் தாளாமல் அழுதாள். இதைப் பார்த்த பாண்டவரின் தாயார் குந்திதேவி அந்தப் பெண்ணிடம் ஏன் அழுகிறாய் என விசாரித்தார். அசூரனின் கதையைச் சொன்னாள் அந்த பெண். அவ அழுது க்கொண்டே சொன்னவள், என் பிள்ளை வண்டி ஓட்டிச் செல்ல வேண்டிய நாள் இன்னைக்குத்தான் என்றாள். எனக்கோ இருக்கும் ஒரே ஆதரவு அவன் தான். அவனையும் அசுரனுக்குப் பலி கொடுக்கப் போறேனே என்று கதறி அழுனாள். குந்தி தேவி மனது ரொம்ப கஷ்டப்பட்டார். கவலைப் படாதே எனக்கு ஐந்து மகனுவ இருக்கானுவ. அவுனவளுல ஒருவனை இன்று வண்டியோடு அனுப்பி வைக்கிறேன்னு சொல்லிட்டா?. யாருக்குத்தான் கஷ்டம் இருக்காது. பிராணப்பெண்ணுக்கு மனசுக்கு கஷ்டமாகத்தான் இருந்துச்சு. நம்ம புள்ளையை காப்பாத்த இன்னொரு பிள்ளையை பலிக்கொடுக்கனுமா? அதுவும் சோறு போட்ட பிள்ளையை என அழுதா அந்த பிரமாணத்தி. ஆனாலும் கவலைப்படாத என் மவன் பீமன் பொல்லாத ஆளு அந்த அரக்கனை உண்டு இல்லைன்னு ஆக்கி புடுவான்னு தைரியம் சொன்னாவ குந்தி தேவி”.
மிகவும் சிரீஸாக கதைக்கேட்டான் ராசுக்குட்டி.
“அன்னைக்கு ராத்திரி பீமன் அசுரனுக்கு உணவு படைக்க காட்டுக்குள்ள போனான். வண்டியை ஒரு இடத்தில் நிப்பாட்டினான். அப்புறமா தான் கொண்டு போனா உணவுகளைத் தானே சாப்பிட்டு காலி செய்தான் பீமன். பின் வண்டியை ஒரு இடத்தில் போட்டுவிட்டு அயர்ந்து தூங்கினான். உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டல்லவா..? இந்த நிலையில் பசித் தாளாமல் கோபம் கொண்ட சூரன் வண்டியைத் தேடி ஊரை நோக்கி வந்தான். அவனுக்கு கோபம் வந்தது. வந்த வழியில வண்டி கிடந்தது சோற்றைத் தனி ஒருவனாகச் சாப்பிட்டு விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த பீமனைக் கண்டு கோபமடைந்தான். உடனே வேகமாக போய் பீமனைத் தாக்க ஆரம்பிச்சிட்டான். உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்து பார்த்தான் பீமன். சூரனைப் பார்த்தவுடன் அதிர்ந்தான். ஆனா அவனை பாத்து பயப்படலை. அவன் கூட சண்டை போட்டான். இந்தச் சண்டை பல மணி நேரம் நடந்துச்சு. இரண்டு பேரும் பெரும் பலசாலி. சண்டைக்கு கேட்டகவா வேணும். இதிலு யாரு பலசாலின்னு தெரிஞ்சுக்கவே சண்டை நடந்துச்சு. காடே அதிர்ந்து போச்சு. மிருகம் எல்லாம் பயந்து பீறிட்டு ஒடிட்டு. பறவைகள் படபடன்னு சிறகடிச்சு காட்டை விட்டே பறந்துட்டு. தண்ணீக்குள்ள கிடக்க மீனு கூட இவுக சண்டையில யாரு ஜெயிப்பான்னு கரை பக்கம் வந்து நின்னு எட்டி பார்த்துச்சு. ஊர் மக்க எல்லோரும் பயத்தோட நின்னாவ. அய்யோ பீமன் தோத்து, அசுரன் ஜெயிச்சா நம்மளை விட்டு வைக்க மாட்டானே என அதிர்ச்சி அடைஞ்சாவ. ஆனா அவுக ஐயப்பட்ட மாறி நடக்கலை”.
ராசுக்குட்டியும் சந்தோசமடைந்தான். ஆச்சி தொடர்ந்து கதை சொல்ல ஆரம்பித்தாள்.
“பீமன் விடலை . கடைசியில அடிச்ச ஒரு அடியில மயங்கி விழுந்தான் சூரன். அதுக்கப்புறம் அவனை ஒரு உதை விட்டான் பீமன். மறுநிமிடம் அசுரன் செத்து விழுந்தான். கேள்வி பட்ட அவன் மனைவி ஓடியே வந்தா. பீமனை அழிக்க முயற்சி பண்ணினா. அவ்வளவு தான் பீமன் கோபத்தோடு திரும்பவும் ஒரு அடி கொடுத்தான். ஒரே அடியில சூரன் மனைவி அங்கிருந்து ஓடி போயிட்டா. அந்த ஊருக்கே வந்த பிரச்சனை தீர்ந்து போயிட்டு. ஆனால் சூரன் மனைவி விடலை”.
ஆச்சி சொன்னது கன்னீத்தீவு கதை போலத்தொடர்ந்தது.
“என்ன ஆச்சி சொல்ற?” ராசுக்குட்டி ஆர்வத்துடன் கேட்டாள்.
“ பகாசூரன் செத்து போயிட்டான்னு கேள்வி பட்டு அந்த ஊரே மகிழ்ந்து போயிட்டு. அதே நேரம் மணாளன் மாண்ட செய்திக் கேட்டு ஆற்றங்கரைக்கு ஓடி வந்தாள் பகாசூரவல்லி. தவ வலிமை மிக்க அவள் தன் கணவனின் உயிரை மீட்டுத் தருமாறு சிவபெருமானை நோக்கித் தவமிருந்தாள். தவமுன்னா தவம் அப்படியரு தவம். அவ பலியா தவம் கிடக்கதை பாத்து சிவபெருமான் அவளது வேண்டுதலை ஏற்றார். சூரனுக்கு உயிர் வர வைச்சாரு. ஊர் மக்கள் அய்யோ இவுக எவ்வளவு பெரிய கொடுமை காரவிய அவுகளுக்கு உயிர் கொடுத்திட்டீயளேன்னு வாப்பாருனாவ. அதுக்கு சிவபெருமான் இரண்டு பேரையும் கூப்பிட்டு நீங்க இனிமே இந்த இடத்தில இருக்க கூடாது யாருக்கும் தீங்கு செய்ய கூடாதுன்னு தெக்க பாத்து அனுப்பி வைச்சாரு”.
ஆச்சி நிறுத்தி பேசினாள்.
“இவுக இரண்டு பேரும் தெக்கப்பாத்து வந்தாவ. பிறவி குணம் விடுமா என்ன?”
“அதான சும்மா இருப்பாவளா?” ராசுககுட்டி கதையோடு ஒன்றியே போய் விட்டான்.
“வரும் வழியில் சாலை ஓரத்தில் மலைப்பான இவர்கள் தோற்றத்தினைக் காட்டி வண்டிகளை மறிச்சாவ. இதைக் கண்டு பயந்து போனாவ மக்க. இவுகளுக்கு நிலையம் போட்டு வணங்க ஆரம்பிச்சாவ. அவுகளை வண்டி மலையன், வண்டிமலைச்சி அம்மனாக வழிபட ஆரம்பிச்சாவ. ஆனாலும் வண்டி மலையனுக்குப் போதுமான படையலைக் கொடுக்க அவுகளால முடியலை. இதனால் இரண்டுபேரும் அங்கிருக்க பிடிக்காம ஒவ்வொரு இடமா கிளம்பினாவ. கடைசியல தாமிரபரணி ஓடும் நெல்லை சீமைக்கு வந்தாவ. அங்கேயும் பல இடங்களுல அலைஞ்சாவ. சில இடங்களுல தங்கினாவ. ஆனாலும் அவுகளுககு திருப்தி இல்லாதக் காரணத்தினால் கடைசியில அம்பாசமுத்திரத்திற்கு வந்தாவ.”
ஆச்சி நிறுத்தினாள். “நம்ம அம்பாசமுத்திரத்துக்கா?” ராசுக்குட்டி ஆர்வத்துடன் கேட்டான்.
“ஆமாம். இங்கு வந்தும் கூட இவுக சும்மா இருக்கலை. அம்பாசமுத்திரத்தில் வடக்கு எல்லையில் மலை போல் வந்து நின்னாவ. வண்டி மலையனும், வண்டிமலைச்சியும், அப்போது அந்த வழியாகச் சந்தைக்குச் போற வார வண்டிகளை மறிச்சு காய்கனிகளை வாங்கி தின்னாவ. சில பொருட்களை நாசப்படுத்தினாவ. இதனால் பயந்த ஊர் மக்கள் தங்கள் குல தெய்வமான முனியப்பனிடம் போய் சொல்லியிருக்காவ”.
“முனியப்ப சாமி கோபக்காரர் ஆச்சே” ராசுக்குட்டி கேட்டான்.
“இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண நினைத்த முனியப்பன் அந்த இடத்துக்கு வந்தாரு. இரண்டு பேரையும் கீழே தள்ளினாரு. பின்னால அவுக இரண்டு பேர் தலை முடியைப் பிடித்து பூமியில திணிச்சாரு. இதனால் அவர்கள் இருவருடைய உடலும் பூமிக்குள்ள பதிஞ்சு போச்சு. மல்லாந்து வீழ்ந்த வண்டி மலையனும், வண்டிமலைச்சியும், அந்த வழியாக போன வண்டிகள் கண்ணில் படவில்லை. இதனால் ஊர் மக்களும் பயமின்றி சந்தோஷமாகச் சந்தைக்குச் சென்று வந்தனர். இருந்தாலும் வண்டி மலையனுக்கும், வண்டி மலைச்சிக்கும், மல்லாந்து விழுந்த இடத்தில் திறந்த வெளி ஆலயம் அமைத்து வழிபாடும் செய்தனர். இதுவே தற்போது வண்டிமறிச்ச(மலைச்சி) அம்மன் கோவிலா இருக்கு. இப்போதும் இந்தக் கோவில் மேற்கூரையில்லாமல் தான் இருக்கு. கோவில் உள்ளே வண்டி மலைச்சியம்மனும், வண்டி மலையனும், மல்லாந்து படுத்த நிலையில் தான் இருப்பாவ”.
ராசுக்குட்டி சந்தோசமாக சொன்னான். “ஆமாம் நானும் பாத்து இருக்கேன். நிறைய இடத்தில் வண்டி மலையான், வண்டி மலைச்சி கோயில் இருக்கு. நான் விட்டிலாபுரத்தில கூட பாத்து இருக்கேன்” என்றான்.
“விட்டிலாபுரம் வண்டிமறிச்சியம்மன் கதையை வேறுமாதிரியாகச் சொல்லுதாவ. இந்தக் கோவிலில் அண்ணனும் தங்கையுமாக வண்டி மலையான், வண்டி மலைச்சி அம்மன் என்ற பேரில் இருக்காவ. அந்தக் காலத்தில் மாட்டு வண்டியில் வருபவர்களை மறித்து இவர்கள் நிற்பார்களாம். திடீரென்று வண்டி முன்பு மலைப்பான தோற்றத்தினை ஏற்படுத்தி வண்டியை மறிப்பதால் இவுகளுக்கு வண்டி மலையான் மற்றும் வண்டிமலைச்சி என்ற பெயரும் உண்டுன்னு சொல்வாவ”.
“ம்”. கொட்டினான் ராசுக்குட்டி.
“ஒரு காலத்தில் இவர்கள் வண்டியை மறிப்பவர்களாகக் காட்சி தந்தாலும் அதன்பிறகு முனிவர் ஒருவரின் ஆலோசனை பேரில் மக்களைக் காவல் காக்கும் தெய்வமாக இவர்கள் மாறிவிட்டார்கள். அவர்களின் காவலால் பலர் இந்தத் தெய்வத்துக்கு அடிமையாகிவிட்டனர்.
அந்த கதையை இமை கொட்டாமல் கேட்டுக்கொண்டிருந்தான் ராசுக்குட்டி.
(தொடர்ந்து ஆச்சி கதை சொல்லுவாள்)


