தூத்துக்குடி உப்பாத்து ஓடையில் ரூ.5 கோடி மதிப்பில் சிறுபாலங்கள், உள்வாங்கிகள் கட்டுதல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பார்வையிட்டார்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் ஆறு, உப்பார் ஓடை என்னும் பெயரில் கடம்பூர் அருகே மலைப்பட்டி என்னும் கிராமத்தில் சிறு சிறு காட்டோடைகள் இணைந்து ஆராக உருவெடுத்து ஒட்டப்பிடாரம், தட்டப்பாறை வழியாக புதுக்கோட்டை அருகே சமார் 32கிமீ தூரம் பயணித்து கோரம்பள்ளம் குளாத்தில்’ வந்தடைகிறது. பின்பு கோரம்பள்ளம் குளம் மறுகால் 24 கண் மதகு வழியாக உப்பாத்து ஒடை என்னும் பெயரில் சுமார் 12கிமீ தூரம் பயணித்து தூத்துக்குடி துறைமுகம் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
கடந்த 2015-ம் ஆண்டு உப்பார் ஓடை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் கோரம்பள்ளம் குளம் திடீரென அதிக அளவு வெள்ளம் ஏற்பட்டது. திடீர் வெள்ளம் காரணமாக கோரம்பள்ளம் குளம் அதிகபட்ச நீர்மட்டத்தை எட்டியதால் உபரி நீர் போக்கியில் உள்ள 24 மதகுகள் மூலம் 30,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. திடீர் நீர்வரத்து காரணமாக கோரம்பள்ளம் குளம் உபரிநீர் போக்கியில் (உப்பாத்து ஓடை) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டது. அனைத்து உடைப்புகளும் போர்கால அடிப்படையில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன.
இக்காட்டாற்று வெள்ளத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதி, மறவன்மடம், அந்தோணியார் புரம். சுப்பிரமணிய புரம், பெரியநாயகி புரம். வி.க நகர், எஸ்.எஸ்.நகர், காலாங்கரை, அத்திமரபட்டி, வீரநாயகத்தட்டு, முத்துநகர், முத்தையாபுரம், கோவில்பிள்ளை நகர் ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டன.
மேற்கூறிய பாதிப்புகள் வருங்காலத்தில் வராமல் தடுக்க இம்மதிபீடு தயாரிக்கப்பட்டு கோரம்பள்ளம் குளம் உபரிநீர் போக்கியில் ( உப்பாத்து ஓடை) சிறுபாலங்கள், உள்வாங்கிகள் சேதமடைந்துள்ளதால் அதனை புணரமைத்தல் அந்திமரப்பட்டி மற்றும் ஜே.எஸ். நகர் குடியிருப்புகளில் வெள்ளப் பெருக்கை தடுக்க கூடுதல் உள்வாங்கி கட்டுதல் மற்றும் வெள்ளப் பாதுகாப்பு சுவர் கட்டும் பணிகள் மதிப்பீட்டில் சேர்க்கப்ப்பட்டுள்ளது. மேலும் பருவ மழை காலத்தில் உப்பாத்து ஓடையில் உள்வாங்கிகள் மற்றும் சிறுபாலங்கள் வழியாக வெள்ள நீர் குடியிருப்புகளில் உட்புகுவதைத் தடுக்கும் வகையில் வடிகால் பணிகளுக்கு ஷட்டர் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் கனமழையின் போது உப்பாத்து ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படும். உப்பாது ஓடை கரையின் இரு புறமும் உள்ள 2200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதுகாகப்படும். கரையின் இரு புறமும் உள்ள உப்பளங்கள் பாதுகாக்கப்படும். சுமார் 10 கிராமங்கள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மண்டலம் வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கப்படும். நகரை வெள்ளதில் இருந்து பாதுகாப்பதற்காக அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமை தவிர்க்கப்படும். வெள்ளம் ஏற்படுவதற்கான காரணங்கள் அறியப்பட்டு அவற்றை சரி செய்வதற்கும், மேலும் இனி வரும் காலங்களில் இவ்வாறு வெள்ளம் ஏற்படுவதை தடுப்பதற்கும் இப்பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார் .ஆய்வின் போது பொது பணித்துறை (நீர் வளம்) செயற் பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் சுபாஷ், உதவி பொறியாளர் ரத்தினகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


