தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே மூலக்கரை பஞ்சாயத்துட்பட்ட வீரன்சுந்தரலிங்கம் நகரில் இருந்து சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 7 கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
ஆனால் வீரன் சுந்தரலிங்கம் நகரில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சீரான குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீரன் சுந்தரலிங்கம் நகருக்கு முறையான குடிநீர் வழங்க கோரி இன்றைய தினம் நாம் தமிழர் கட்சி ஒன்றிய தலைவர் மணி, தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துசெல்வன் தலைமையில் வீரன்சுந்தரலிங்கம் நகரை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் தூத்துக்குடி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், எஸ்ஐ சேவியர் பிராங்கிளின், பஞ்சாயத்து தலைவர் சாதிக்அலி, செயலர் பரமசிவன் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பத்து நாட்களுக்குள் புதிய போர்வெல் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


