புளியம்பட்டி அருகே கையை துண்டித்து பெண்ணை கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகில் உள்ள கீழப்புவானி கிராமத்தில் ரத்தக் காயங்களுடன் ஒரு பெண் சடலம் கிடப்பதாக புளியம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், அங்கு ஒரு பெண் இடது கை துண்டிக்கப்பட்ட நிலையில், உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதையடுத்து போலீசார் அவரது உடலை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணுக்கு சுமார் 50 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கீழே பூவானி கிராம நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


