தமிழ்நாடு காவல்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் மற்றும் காவலர் போட்டி தேர்வுகளுக்கு படித்த இளைஞர்களை தயார் செய்யும் நோக்கில் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் போட்டி தேர்வுக்கான பயிற்சி முகாம் மாற்றத்தை தேடி என்ற தலைப்பில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் நடத்தப்படுகிறது.
இதற்கான அறிமுக கூட்டம் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரை பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் தலைமையில் இன்று நடந்தது.
இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் பேசுகையில், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஸ்ரீவைகுண்டத்தில் 75 நாட்கள் நடைபெறும். இந்த பயிற்சி வகுப்பில் அனைத்து உபகரணங்களையும் இலவசமாக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இளைஞர்கள் தங்களை தேர்விற்காக தயார் செய்து கொள்ள வேண்டும். இங்கு கலந்து கொண்ட இளைஞர்கள் அனைவரும் காவல்துறை தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பதவியில் சேர வேண்டும் என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், ஆழ்வார்திருநகரி சப் இன்ஸ்பெக்டர்கள் செல்வம், இசக்கிபாண்டி, பயிற்சியாளர் திலகர், தென்திருப்பேரை பேரூராட்சி கவுன்சிலர் ஆனந்த், மகர பூசனம், தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


