தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவகத்துக்குள் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் என்பவர் கடந்த 25-ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில் குற்றவாளிகள் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் முறப்பநாடு காவல்துறையினர் மீது பல்வேறு குற்றசாட்டுகள் தொடர்ந்து எழுந்த நிலையில் இந்த வழக்கை மற்றொரு அதிகாரி விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து தென் மண்டல ஐஜி (தெற்கு மண்டலம்) அஸ்ரா கர்க் இந்த கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று இரவு தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் முறப்பநாடு காவல்நிலையத்திற்கு நேரில் வருகை தந்தார். அவர் கிராம நிர்வாக அலுவலர் சம்பந்தப்பட்ட கோப்புகளை பார்வையிட்டு போலீசாரிடம் விபரங்கள் கேட்டறிந்தார். தொடர்ந்து தேவைப்படும் சமயங்களில் குற்றவாளிகளை மேலும் விசாரணை நடத்த அனுமதி பெறப்பட்டு குற்றவாளிகளை நேரில் அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.


