எட்டயபுரத்தில் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்துவிழுந்து 5 மாணவிகள் காயமடைந்தது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள எட்டயபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கிய நிலையில் அருகில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இப்பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் எட்டயபுரம் அருகில் உள்ள படர்ந்த புளி கிராமத்தை சார்ந்த மாணவிகளும் தேர்வு எழுதவந்துள்ளனர்.
தேர்வு துவங்கும் முன் மாணவிகள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு கழிவறைக்கு சென்றுள்ளனர்.கழிவரைக்கு சென்று திரும்பும்போது திடீரென கழிவறை சுவர் இடிந்துவிழுந்ததில் இசக்கி மாரியம்மாள் உள்பட 5 மாணவிகளுக்கு கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக மாணவிகள் அங்குள்ள ஆசிரியர்களிடம் உடல் வலி இருப்பதாக தெரிவித்தபோது தேர்வு முடிந்தபின் பார்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ளனர். இது மாணவியர் மத்தியில் பெரும் குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.
பின் காயங்களுடனே தேர்வு எழுதியுள்ளனர். அதன்பின் எட்டயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றதாகவும் அங்கு மருத்துவர் இல்லாததால் அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து கோவில்பட்டி வட்டாட்சியர் மகாலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த மாணவிகளை நேரில் சந்தித்ததோடு விபத்து குறித்து விசாரனை நடத்தி வருகிறார் தேர்வு துவங்கிய முதல்நாளே இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததால் அப்பகுதியில் அர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


