பங்குனி உத்திரம் என்றாலே குல தெய்வ வழிபாடுதான். தங்களது குலதெய்வங்களை தேடி குழந்தைகள் குட்டிகளை தங்கள் தோளில் சுமந்தபடியே தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த கிராமங்களை நோக்கி சென்று தரிசனம் செய்தனர். எனவே அதிகாலை முதலே கோயில்களில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அங்கேயே தங்கி, சாஸ்தாவை கண் குளிர பார்த்து, தனது சொந்தங்கள், உறவுகள் சூழ பொங்கிலிட்டு, குழந்தைகளுக்கு மொட்டை போட்டு, காது-குத்தி அழகு பார்த்து ஒரு நாள் பொழுதை கழித்தனர்.
நீண்ட வரிசையில் நின்று தேங்காய் பழத்தட்டுடன் மலர் மாலையை வைத்துக்கொண்டு சாஸ்தாவை பார்க்க கால் கடுக்க காத்து கிடந்தனர். சாஸ்தாவை பார்த்து காணக்கிடைக்காத ஒன்று தங்களுக்கு கிடைத்து விட்டது என சந்தோசப்படுகிறார்கள். இதனால் அலங்கரிக்கப்பட்ட சாஸ்தா கோயில்கள் நடை காலை முதலே திறக்கப்பட்டிருந்தது.
குலதெய்வம் தெரியாதவர்கள் கூட அருகில் உள்ள குலதெய்வத்தினை காண தவறுவதில்லை. பங்குனி உத்திரம் அன்று காணுமிடங்கள் எல்லாம் வாகனங்களில் குலதெய்வம் தேடிச்செல்லும் மக்களின் எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் கூடிக்கொண்டே செல்கிறதை, அங்காங்கே முக்கிய நகரங்களில் ஏற்பட்ட வாகன நெரிசல்கள் சுட்டி காட்டின..
பங்குனி உத்திரம் என்பது சாஸ்தாவுக்கு மட்டுமல்ல, இத்தினத்தில் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது.

இளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது.
எனவே அனைத்து சிவன்கோயில்கள், விஷ்ணு கோயில்கள் முருகன்கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
நெல்லை, தூத்துககுடி , தென்காசி மாவட்டத்தில் அனைத்து சாஸ்தாகோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
சொரிமுத்து அய்யனார், பொட்டல் பாடலிங்க சாஸ்தா, செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா, பிராஞ்சேரி கரையடி மாடன், கோபாலசமுத்திரம் பசுங்கிளி, ஆழிகுடி குருந்துடையார், கால்வாய் பொய் சொல்ல மெய்யன் சாஸ்தா, கால்வாய் நம்பி சாஸ்தா, வல்லகுளம் சின்னதம்பி சாஸ்தா, தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார், அருஞ்சுனை காத்த அய்யனார், கிருஷ்ணாபுரம் அல்லல் தீர்த்த அய்யனார், ஆதிச்சநல்லூர் மலையரசி அம்மன் அய்யனார் சாஸ்தா, மருகால் தலை பூலுடையார் சாஸ்தா, விட்டிலாபுரம் இளங்கா மணி சாஸ்தா, முத்தாலங்குறிச்சி பூந்தலையுடையார் சாஸ்தா, அனவரதநல்லூர் வேம்படி மாடன் தென்னம்பாண்டி சாஸ்தா, மணக்கரை புங்க முடையார், அழகர் சாஸ்தா, ஸ்ரீவைகுண்டம் பரியேறும் பெருமாள் சாஸ்தா, காருக்குறிச்சி களக்கோடி தர்மசாஸ்தா, சாந்தி நகர் நடுக்காடுடையார் சாஸ்தா, திருநெல்வேலி மேலிங்க சாஸ்தா, குளத்தூர் சாஸ்தா, படப்பக்குறிச்சி குளத்துபுழை தர்மசாஸ்தா, சி.என் கிராமம் ஆனையப்ப சாஸ்தா, இராஜவல்லிபுரம் நல்லதம்பி சாஸ்தா, தடிவீரன் சாஸ்தா, ஏரல் இருவப்பபுரம் பெரும்புடையார் சாஸ்தா, குலசேகர நத்தம் கரும்புளி சாஸ்தா, நெல்லை நகரம் முருகையடி சாஸ்தா, செப்பு குடி சாஸ்தா உள்பட பல்வேறு சாஸ்தாகள் சிறப்பு பெற்றவை.
குலதெய்வ வழிபாடுகளை நிறைவேற்ற சென்னை ,கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தென் தமிழகத்துக்கு அதிகமான மககள் வந்த காரணத்தினால் ரயில்கள் மற்றும் பஸ்களில் கூட்டம் அலை மோதியது.


