குலதெய்வம் தரிசனம் புன்னிய தரிசனம். குலதெய்வத்தினை விட்டு விட்டு யாரை வணங்கினாலும் எண்ணியது கிடைக்காது. இழந்தை மீட்டெடுக்க முடியாது. குலதெய்வத்தினை வணங்கும் புண்ணிய திருவிழாவாகத்தான் உத்திர திருவிழா. பெரும்பாலுமே தென் மாவட்டத்தில் தான் இந்த விழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. தாங்கள் தொழிலுக்காக பல்வேறு ஊர்களில் பஞ்சம் பிழைக்க சென்றாலும் இந்நாளில் ஊருக்கு வந்து தனது குல தெயவத்தினை வணங்கினால் மட்டுமே நமது வாழ்வில் புண்ணியம் தேட முடியும். விருத்தி என்பது வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று. தொழில் விருத்தி, குலம் விருத்தி, கல்வி விருத்தி, செல்வம் விருத்தி, சகல சௌபாக்கியமும் விருத்தி என்பது மனிதனுக்கு அத்தியவாசியம். இந்த விருத்திகளையெல்லாம் விருத்தமாக விளங்குவத குலதெய்வம் வழிபாடு. நமது தாய் தந்தையர்கள் நமக்கு எப்படி பொன்னையும் பொருளையும் அள்ளித்தருவார்களோ, எப்படி நன்மையை மட்டுமே நமக்கு செய்ய வேண்டும் என்று எண்ணுவார்களோ, அதுபோலவே நமது குலதெய்வம் நமக்கு எல்லா அருளையும் செல்வத்தினையும் நன்மையையும் குறைவின்றி அள்ளி அள்ளி தரவல்லது. பங்குனி உத்திரம் என்றாலே குல தெய்வ வழிபாடுதான். தங்களது குலதெய்வங்களை தேடி குழந்தைகள் குட்டிகளை தங்கள் தோளில் சுமந்தபடியே தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த கிராமங்களை நோக்கி ஓடுகிறார்கள் பக்தர்கள்.
அங்கேயே தங்கி, சாஸ்தாவை கண் குளிர பார்த்து, தனது சொந்தங்கள், உறவுகள் சூழ பொங்கிலிட்டு, குழந்தைகளுக்கு மொட்டை போட்டு, காது-குத்தி அழகு பார்த்து ஒரு நாள் பொழுதை கழிக்கிறார்கள். ஆகா. இதுவல்லவோ காண கிடைக்காத ஆனந்தம் என சந்தோசப்படுகிறார்கள்.
நீண்ட வரிசையில் நின்று தேங்காய் பழத்தட்டுடன் மலர் மாலையை வைத்துக்கொண்டு சாஸ்தாவை பார்க்க கால் கடுக்க காத்து கிடக்கிறார்கள். சாஸ்தாவை பார்த்துவுடன் காணக்கிடைக்காத ஒன்று தங்களுக்கு கிடைத்து விட்டது என பெருமை கொள்கிறார்கள். இதனால் தான் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து தென்னகத்தினை நோக்கி செல்லும் ரயில்களும் பேருந்துகளும் நிரம்பி வழிகின்றன. தீபாவளி பொங்கல் திருவிழாக்கள் என்றால் அந்த சமயத்தில் ஊருக்கு சென்று நமது நெருங்கிய உறவுகளை மட்டுமே காண்கிறோம். ஆனால் பங்குனி உத்திரத்தில் உலகமெங்கும் சிதறி கிடக்கும் குடும்ப உறவுகளை கண்டுகளிப்பதோடு மட்டுமல்லாமல் ஆணி வேரில் ஆரம்பித்து ஆலமரமாய் விரிந்து கிடக்கும் சொந்தபந்தங்களையெல்லாம் காணுகிறோம். என்ன மகிழ்ச்சி இது. யாருக்குமே கிட்டாத மகிழ்ச்சியல்லவா? . நன்மைகளோடு உறவுகளும் அல்லவா புதுப்பிக்கப்படுகிறது.
தெய்வ வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு என்பது அவரவர்களுடைய முன்னோர்கள் பல தலைமுறைகளாய் வழிபட்டு வந்த தெய்வமாகும். குல தெய்வ வழிபாடு ஏழு தலைமுறைகளைக் காக்கும். குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குலதெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோளாகும். குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் நீங்கள் வாழும் வாழ்க்கையில் திருப்தி இருக்காது. பூஜை அறையில் உங்களின் குறைகளை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டுங்கள் அனைத்து குறைகளையும் அந்த குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும். பங்குனி உத்தரத்துக்கு ஊருக்கு சென்று வந்தால் குலதெய்வம் உங்கள் கூடவே வரும். குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும் என்பதை பல ஆன்மீக வழிகளில் முயற்சி செய்து பார்த்து, சொல்லும் மகான்களின் வாக்கு ஆகும்.
நாம் அனுபவிக்கும் எல்லா பலன்களும் நாமும், நம் முன்னோர்களும் செய்த புண்ணியத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது. ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் பித்ரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் காவல் தெய்வங்களான உங்கள் குலதெய்வம் தீர்க்கும். ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குலதெய்வ ஆராதனையும், பித்ருக்களின் ஆசியும் மிக முக்கியம். பல தெய்வங்களை வழிபாடு செய்து வரலாம். ஆனால், அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்ததுதான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும். உங்களின் தெய்வம் அசைவம் வைத்து படைக்கும் தெய்வமாக இருந்தால் தாராளமாக அதனை செய்யுங்கள். நமது முன்னோர்களின் வழியை நாம் மாற்ற வேண்டாம். குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியமானதாகும். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்கு செய்யவேண்டியதை செய்து வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
குலதெய்வம் தெரியாதவர்கள் கூட அருகில் உள்ள குலதெய்வத்தினை காண தவறுவதில்லை. பங்குனி உத்திரம் அன்று காணுமிடங்கள் எல்லாம் வாகனங்களில் குலதெய்வம் தேடிச்செல்லும் மக்களின் எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் கூடிக்கொண்டே செல்கிறதே தவிர. குறையவில்லை.
இது என்ன மாயம்? குல தெய்வம் என்றால் அவ்வளவு பாசமா? அதைப்பற்றி அலசி பார்ப்போம்.
பெரும் பாலுமே தென் தமிழ் நாட்டில் தான் இது போன்ற தெய்வ வழிபாடுகள் அதிகமாக உள்ளது. தங்கள் குலதெய்வமே தெரியாவிட்டால் என்ன? சொரிமுத்து அய்யனாரை தரிசிக்க வாருங்கள் எல்லாவற்றிற்கு மூல ஆதாரமே இவர் தான் என்கிறார்கள். அது உண்மை என்பது போலவே அங்கேயும் கூட்டம் அலை மோதுகிறது.
பச்சை பசேல் என கம்பளம் விரித்தது போல் இருக்கும் வனத்தின் மீது கறுமையான நிறத்தில் பீதாம்பரம் விரித்தார் போல விளங்கும் தார்ச்சாலை வழியாக ஊசி வளைவு மலை முகட்டு வழியாகவும் வாகனத்தில் சொரிமுத்து அய்யனாரை தேடி போவோர் அதிகம் பேர். அங்கு சென்று தாமிரபரணி ஆற்றில் குளியல் போட்டு விட்டு அங்குள்ள தெய்வங்களை தரிசனம் செய்து விட்டு கீழிறங்கி வருகிறார்கள். வனத்துறை கிடக்கி பிடி போட்டு மக்களை தடுத்தாலும், வாகனங்கள் செல்ல கூடாது என மறித்தாலும் மிக கடினமான பயணமாக கால்நடையாக சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்கள் குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட பல இடங்களில் சாஸ்தாவும், ஐயனாரும் அவதரித்தனர். கலியுகத்தில் ஐயப்பன் அவதாரம் எடுத்து கேரள மாநிலம் பந்தள மன்னர் அரண்மனையில் வாழ்ந்து, பின்னர் அரக்கனை வதம் பண்ணி சாஸ்தாவாக உருவானதாக வரலாறு.
சாஸ்தாவின் அம்சமாக கருதப்படும் ஐயப்பன் எங்கிருந்தார். அவர் எந்த பகுதியில் திரிந்தார். இளவயதில் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள காரையாரில் அவர் வீர விளையாட்டுகளை கற்றதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அங்கு முதன் முதலில் சாஸ்தா கோயில் எழுந்ததாகவும், அக்கோயிலே சொரிமுத்து ஐயனார் கோயில் என்றும், அதுவே ஐயப்பனின் மூல ஆதாரம் எனவும் அழைக்கிறார்கள். இக்கோயில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. சாதி, சமய வேறுபாடின்றி குலம் மற்றும் குடும்பத்தை காக்க அவதரித்த தெய்வமாக இவர் கருதப்படுகிறார். இக்கோயிலில் சாதி மறுப்பு தலைவனான பட்டவராயனுக்கும் பொம்மக்கா , திம்மக்காவுடன் சன்னதி உண்டு.
திருவனந்தபுரம் மகாராஜாவுக்கு எதிராக போர் மூண்டபோது அவர்களுக்கு உதவச்சென்ற இடத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தார் இறந்தார். அதற்கு பரிகாரமாக என்ன வேண்டும் என மகாராஜா கேட்டபோது “சுள்ளி ஒடிக்க கொஞ்சம் காடு வேண்டும்” என்று ஜமீன்தாருடன் சென்றவர்கள் சொன்னார்கள். உடனே மகாராஜா 80 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை பரிசாக கொடுத்தார். அதில் சொரிமுத்து ஐயனார் கோயிலும் அடங்கும். தற்போது இக்கோயிலை சிங்கம்பட்டி ஜமீன் வாரிசான முருகதாஸ் தீர்த்தபதி ராஜா வாரிசு நிர்வகித்து வருகிறார். சாஸ்தா கோயில் எது என்று முன்னோர்கள் தனது வாரிசுதாரர்களுக்கு சொல்லாமல் விட்டதால், தாங்களுக்கு எந்த சாஸ்தா என்றே தெரியாதவர்கள் உலகின் முதல் சாஸ்தாவாக கருதப்படும் காரையார் சொரிமுத்து ஐயனார் கோயிலை மூலசாஸ்தா என்றும், குலதெய்வம் என்றும் கருதி வழிபடுகின்றனர். இங்கு வந்து சென்றாலே குலதெய்வ வழிபாடு பூர்த்தியாகிவிடும் என்பது ஆன்றோர்களில் வாக்கு.
அகத்தியர் அருள் ஞானதிருஷ்டியில் உருவான கோயில் இது. இங்கு சொரிமுத்து அய்யனாரோடு, சங்கலி பூதத்தார், பிரம்மராட்சசி அம்மன், பட்டவராயன் உள்பட காவல் தெய்வங்கள் அருள் புரிகிறார்கள். தாமிரபரணி ஆற்றில்நீராடி அய்யனை வணங்கினால் வேண்டும் வரம் கிடைககிறது.
இங்கு பங்குனி உத்திரதிருவிழா மட்டுமில்லாமல், ஆடி அமாவாசை, தை அமாவாசை திருநாளும் விமர்சையாக நடக்கும். பங்குனி உத்திரத்தன்றும், ஆடி அமாவாசையன்றும் லட்சகணக்கான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து முகாமிட்டு வழிபடுவர். இதுமட்டுமல்ல திருமணம் முடிந்த புதுமண தம்பதிகள், குழந்தைகளுக்கு முடிஎடுத்து காதணி விழா, தொழில் மற்றும் குடும்ப விருத்திக்காக கிடா விருந்து உள்ளிட்ட நேர்த்திகடன் பூஜையும் சாஸ்தாவிற்கு நடத்துகின்றனர்.
திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு முதல் பத்திரிக்கையும், அழைப்பும் சாஸ்தாவிற்குதான். ஆடிமாதத்தில் அடிக்கும் சாரலில் நனைந்த படி, வாடையில்வாடியே படியே குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு பல கிலோ மீட்டர் நடந்து வந்தே சொரிமுத்து ஐயனாரை வணங்கி நிற்போர் பலர். இப்படி சாஸ்தா வழிபாடு தொடர்ந்தது.
தற்போது நமது குல தெய்வ சாஸ்தா எது என்று கண்டுபிடித்து, அதை எப்படியாவது வணங்க வேண்டும் என்று மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பு வந்துள்ளது. எனவே தான் அனைவரும் தங்கள் குலதெய்வமான சாஸ்தாவை தேடி அலைகிறார்கள். பிரசன்னம் பார்க்கிறார்கள். அவர் சொல்லும் அங்க அடையாளங்களை வைத்து சாஸ்தாவை கண்டுபிடித்து வணங்குகிறார்கள்.
தென்பாண்டிச்சீமையிலே குறிஞ்சி ,முல்லை, மருதம் நிலத்தினை போலவே தேரி எனும் பாலை நிலத்திலும் சாஸ்தா வழிப்பாடு மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. கிராமங்கள் தோறும் அருள்தரும் அபூர்வ ஆலயங்களாக சொல்ல சொல்ல இனிக்கும் அற்புத நாமத்துடன் திகழ்கிறார்கள் சாஸ்தாக்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தினை பொறுத்தவரை மிகவும் விசேசமான சாஸ்தா மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் , மற்றும் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார்.
சிவப்பு மணற்பரப்புடன் காணப்படும் தேரிக்குடியிருப்பு கிராமத்தின் மேற்கு எல்லையில்தான் கற்குவேல் ஐயனாரின் ராஜாங்கம் நடக்கிறது. பாண்டிய மன்னனிடம் மனித உருவில் வந்து கைகட்டி சேவகம் பார்த்தவர் கற்குவேல் அய்யனார்.
விதவைப் பெண்ணே மாங்கனியைத் திருடியதாக முடிவு செய்து அவளுக்கு மொட்டையடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அவளைச் சுண்ணாம்புக் காளவாயில் வைத்து எரிக்குமாறு உத்தரவிட்டான். தடுத்தார் அய்யனார். மன்னன் மறுத்துவிட்டான், தண்டனையை உடனடியாக நிறைவேற்றும்படி கட்டளையிட்டான்.
. விதவைப்பெண் . கோட்டை வாசலில் மண்ணை அள்ளித் தூவினாள், “நின்று நிலைத்து நீதி கேட்காத இந்த பூமி தீ காற்றுக்கும், தீ மழைக்கும் இரையாகக் கடவது!” என்று சாபமிட்டாள். பத்தினி சாபம் உடனே பலித்தது. தேரிகுடியிருப்பு கோட்டையும் அதைச் சுற்றியிருந்த குடிகளும் தீப்பிழம்புகளால் சூழப்பட்டு பஸ்பமாகி விட்டது. தப்பியோடிய அய்யனார் மட்டும் தன் தெய்வசக்தியால் எதிரே தென்பட்ட “கற்குவா” என்கிற மரத்தைப் பிளந்து அதற்குள் ஐக்கியமானார்.
காலச் சக்கரம் சுழன்றது. அய்யனார் ஐக்கியமாயிருந்த கற்குவா மரத்தைத் தேடிக் குடியிருப்பு வாசிகளின் பொதிமாடுகள் கடக்க முயன்றனர். அந்த மரத்தின் வேர்தட்டி மாடுகள் கீழே விழுந்தன. சிலர், மரத்தின் வேர்களை வெட்டினர். அப்போது அந்த வேரிலிருந்து இரத்தம் பீய்ச்சியடித்தது. இதனால் மிரண்டுபோன ஊர்க்காரர்கள் . அப்போது அசரீரியாக ஒலித்து தனது பூர்வீகத்தை ஊருக்கு உணர்த்தினார் அய்யனார்.
அன்றிலிருந்து ஊர் மக்கள் அந்த இடத்தை கோயிலாக நினைத்து வழிபட ஆரம்பித்தனர். கற்குவா மரத்துக்குள் அய்யனார் அடக்கமாகி இருந்ததால், அவருக்கு “கற்குவேல்கையனார்” என்று பெயர் வந்தது. அதாவது கையனார் என்பதே அய்யனாரின் கடந்த கால பெயர். அந்தப் பெயரால் தான் கற்குவேல்கையனார் என்று பெயர் பெற்றது. காலப்போக்கில் அதுவே கற்குவேல் அய்யனாராக மருவியது.
கார்த்திகை மாதத்தின் கடைசி மூன்று நாட்கள் இந்தத் திருத்தலத்தில் கள்ளர் வெட்டு திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழாவின்போது லட்சம் பேருக்கு மேல் கோயிலில் கூடுகிறார்கள்.
கோயிலில் முக்கிய பூஜை முடிந்து இளநீருடன், கயிறால் கட்டப்பட்ட கள்ளர்சாமியாடியையும் அழைத்துக்கொண்டு கோயிலுக்கு மேற்கு உள்ள தேரிமேட்டுப் பகுதிக்குச் செல்வர். அங்கு கொள்ளையனை, வன்னியராஜா சிரச்சேதம் செய்ததாகச் சொல்லப்படும் இடத்தில் கள்ளர் சாமியாடியைப் படுக்க வைத்து அவர் நெற்றியில் இளநீரை வைப்பர். வன்னிராஜா சாமியாடி அருள்வந்து அரிவாளால், ஓரே வெட்டில் இளநீரை இரண்டு துண்டாக வெட்டுவார். அப்போது இளநீர் செம்மணல் பூமியில் சிந்தி, அந்த இடத்தைச் சுற்றிலும் குருதி கொட்டியது போன்றதொரு தோற்றம் தென்படும். அங்கிருந்து மணல் எடுத்து வந்து வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும். வயலில் போட்டால் விளைச்சல் பெருகும். இந்த இடத்தில் இரண்டு துண்டாக விழும் இளநீர் துண்டுகளை எடுப்பவர்கள் சகல சௌபாக்கியத்துடன் இருக்கலாம். இந்த நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருவதால் புனித மண் எடுக்கவும், இளநீர்த் துண்டுகள் எடுக்கவும் கள்ளர் வெட்டு திருவிழாவில் மக்கள் மகிழ்ச்சியுடன் கூடுவர்.
மனமுருக வேண்டி வந்தால் எந்தக் குறையையும் நீக்கிவிடுவார் கற்குவேல் ஐயனார். பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் இங்குள்ள பேச்சியம்மனுக்கு மரத்தொட்டில் கட்டி, மரப்பாச்சி வாங்கிப் போட்டால் அடுத்த வருடமே வீட்டில் குழந்தையின் அழுகுரல் கேட்கும். பில்லி, சூன்யம், பேய் பிடித்தவர்களை வன்னியராஜா சந்நிதியில் நிறுத்திப் புளியவிளாறால் விளாசினால் பேய்த்தொல்லை நீங்கும்.
இதுபோலவே அருஞ்சுனை காத்த அய்யனாரும் சிறப்பானவர்.
மாங்கனியை களவு செய்ததாக நியாயவதி கனகமணியைப் பிடித்து தண்டனை நிறைவேற்ற தூணில் கட்டி தீமூட்டினர். கனகமணி கதறி அழுதாள். சிறிது நேரத்தில் தீ அணைந்து கருகி போய் இருந்தாள். அவள் “தண்ணீர் தண்ணீர்” என்று புலம்பினாள். முனிவர் வடிவில் வந்த குட்டி தெய்வங்கள் பேசாமல் இருந்தபோது உண்மை பேசிய அம்மனும், அவளது அண்ணன் ஐயனாரும் அவ்விடத்திற்கு வந்தனர். கனகமணியின் கூக்குரலைக் கேட்டு தனது சூலாயுதத்தால் ஓங்கி பூமியில் குத்தினார் ஐயனார். அதிலிருந்து நீர் பாய்ச்சி அடித்தது. கனகமணி நீர் பருகினாள். உடனே “வலி, வலி” என கதறினாள். உடனடியாக ஐயனார் கனகமணியின் உடலில் உள்ள தீக்காயங்களில் எல்லாம் வெண்ணெய் பூசினார். அவளது உள்ளமும் உடலும் குளிர்ந்தது. அப்போது கனகமணி தனது மரண வாயிலில் நின்றுக் கொண்டு இருந்தாள். எனக்காக உண்மை பேசிய அம்மனும், என் தாகத்திற்கு நீர் தந்த ஐயனும் எங்குபோய் அமர்ந்தாலும் “இப்போது எனது மனமும், உடலும் குளிர்வது போல என் இதயமும் ஒரு சுனையாகி, அவர்கள் இருக்கும் இடத்தைக் குளிரச் செய்வேன். எந்த ஒரு பாலைவனத்தில் போய் அவர்கள் அமர்ந்தாலும், அந்த இடம் ஒரு பாலைவனச் சோலையாக உருவாகும். அவர்களுக்கு அரணாகத் தாழையும், அருள்பாலிக்க லட்சுமியும், சரஸ்வதியும் சுனை நீரில் தாமரையாக வீற்றிருப்பார்கள். இவர்களை வழிபடுபவர்கள்” என்று கூறினாள். அதுபோல் உருவான இடமே அருஞ்சுனை காத்த அய்யனார். மேலும் கல்வியும், செல்வமும் வந்துவிட்டது. மனவலிமை என்ற வீரமகா சக்தியின் சார்பில் நானும் வந்துவிட்டேன். மூன்று சக்தியும் சேர்ந்து விளங்கும் ஸ்தலமாக இது இருக்கும்” என்று கூறி அவர்களை வணங்கி அவர்களைச் சுற்றி அருஞ்சுனையாக வளர்ந்தாள். உண்மை பேசிய அம்மன், “ஐயனே நாம் அமரும் இத் திருத்தலத்தில் அருஞ்சுனை உருவாகி உள்ளது. அதனைக் காக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளதால் இன்று முதல் இத்திருத்தலம் அருஞ்சுணை காத்த ஐயனார் கோவில் ”என்று அழைக்கப்படும் என்றார். ஐயனார் கூறும்போது, “பங்குனி திங்கள் உத்தரத் திருநாளில் நாம் அமர்வதால் அன்று திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்படும். இத்தலம் அமைய முக்கிய காரணமாக இருந்த உண்மை பேசிய அம்மனுக்கு எனக்கு அடுத்த முதல்பூஜை நடைபெறும் என்றார்.
உண்மையான பக்தர்களுக்கு எப்போதும் அருள் பாலிக்கும் திருத்தலமாக நமது இருப்பிடம் விளங்கும்” என்று கூறி கற்சிலை ஆனார்கள். உடனடியாக அந்த இடம் பசுஞ்சோலையாக மாறியது.
இழந்த பொருளை மீட்கவும், நாள் பட்ட நோய் நீக்கவும், அனைத்து நோய்களும் தீரவும் இங்கு வந்து வணங்கி நிற்கலாம். பங்குனி உத்திரமன்று இககோயிலில் அய்யனார் வந்து அமர்ந்த காரணத்தினாலும் இவ்விடம் பங்குனி உத்தரத்துக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.
காரையார், புதுக்குடி அருஞ்சுனைகாத்த அய்யனார். கற்குவேல் அய்யனார் இவர்களை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் சாஸ்தா என்றும், மதுரை, விருதுநகர், திருச்சி, சேலம், தஞ்சை மாவட்டங்களில் ஐயனார் என்றும் பல கோயில்கள் உருவாயின. இங்குள்ள சாஸ்தா, ஐயனார் ராஜாவாகவும், காவல் தெய்வமாக விளங்கும் சங்கிலிபூதத்தார், கருப்பண்ணன், கருப்பன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் சேனாதிபதியாகவும் அழைக்கப்படுகின்றனர். சங்கலிபூதத்தார் ஆழி எனவும் அழைக்கப்படுகிறார். சாஸ்தா கோயில் முன்பு இந்த ஆழி மிக பிரமாண்டமாக உருட்டும் விழியுடனும், முறுக்கிய மீசையுடனும் பிரமாண்டமான தோற்றத்துடன் நம்மை பயமுறுத்தும். அதே நேரம் கேட்ட வரமும் தரும்.
பங்குனி உத்திரம் என்பது சாஸ்தாவுக்கு மட்டுமல்ல, இத்தினத்தில் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது.
இளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது.
பங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமாக முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும்.
சிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.
இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர்.
பங்குனி மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார்.
தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்.
தமிழக மக்களின் வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிப்பது சாஸ்தா வழிபாடாகும். குடும்பம் மற்றும் குல விருத்திக்காக இவ்விழா கொண்டாடப்படுகிறது. சாதி, சமய வேறுபாடின்றி குலதெய்வமான சாஸ்தா கோவில்களுக்கு பங்குனி உத்திர திருநாளில் குடும்பத்தோடு சென்று வழிபடுகிறார்கள். இந்த வழிபாடு பரம்பரையாக தொடர்கிறது.
சாஸ்தாவை வணங்க பங்குனி உத்திரத்தினை முன்னிட்டு பக்தர்கள் கடந்த காலங்களில் மாட்டு வண்டி கட்டி செல்வர். பலர் நடந்தே குலதெய்வத்தினை அடைவர். சிலர் காத்து கிடந்து பஸ் ஏறி சாஸ்தா கோயிலை அடைவர். தற்போது தங்களுக்கு சொந்தமான காரிலும், வாடகை கார் ஆட்டோ அல்லது இருசக்கர வாகனத்தில் மிகச்சிறப்பாக செல்கிறார்கள். நவீனம் மாறினாலும் வழிபாட்டில் மற்றும் குறைவில்லை.
முற்காலத்தில் தங்கள் குழந்தைகளோடு மாவட்டு வண்டியின் அடிவாரத்தில் தொட்டில் கட்டி பாய் விரித்து படுத்த படியே வானத்தை அன்னாந்து பார்த்து நிற்பர். மேகங்கள் திரளவேண்டும். மழை பொழிய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் ஐயனே வேண்டிய வரம்வேண்டும் என சாஸ்தாவை வேண்டி நிற்பர். இரவு முழுவதும் வேடிக்கை பார்த்தபடியே, குழந்தைகளை ராட்டினத்தில் ஆட விட்டு மகிழ்வர். சர்பத், சேமியா பாயசத்தினை கலர் கலராக கண்ணாடி டம்ளரில் வாங்கி குடிப்பர். வகைவகையாக திண்பண்டங்களை வாங்கி கொடுத்து பெருமை படுவர். பெண் குழந்தைகளை கூட்டிச்சென்று பாசி மணிகள் வாங்கி கொடுத்து வளையல் உள்பட பொருள்களை டிசைன் டிசைனாக மணிக்கணக்கில் பார்த்து தேர்வு செய்வர்.
இரவு முழுவதும் ஐயப்பன் வில்லுபாட்டை கேட்ட படியே ராத்திரி சாமக்கொடையை ரசித்துக்கொண்டே இருப்பர். சில இடங்களில் வன்னிராஜன் போன்ற காவல் தெய்வங்கள் வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும். அதிகாலை சிலர் காவல்தெய்வங்களுக்கு கிடாய் வெட்டி, அதை தங்களது மாட்டு வண்டி கூரையில்போட்ட படி, அங்கு விற்கும் ஏணி மிட்டாய் (சீனி மிட்டாய்), காரச்சேவு, மிக்சர் போன்றவற்றை ஓலைப்பெட்டியில் வாங்கி வந்து உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்வர். எத்தனை ஆனந்தம். குடும்பமே குதுகலிக்கும். பௌர்ணமி வெளிச்சத்தில் அக்கம் பக்கத்தில் வந்த உறவு காரர் கும்பலில் நல்லபெண் மாப்பிள்ளை இருக்கிறார்களா என ஒருஅலசு அலசி விடுவார்கள். பெண் மாப்பிள்ளை பிடித்திருந்தால் திருமணத்துக்கு அச்சாரமும் இட்டு கொள்வார்கள்.
மொத்தத்தில் சாஸ்தா என்னும் குலதெய்வ வழிபாடு மட்டும் இல்லையென்றால் உறவுகள் மேலும் வலுப்பட மற்றுமொரு திருவிழா கிடைக்குமா? என்பது கூட சந்தேகமே. இந்த விழா என்றும் உறவுகள் மேன்படும் விழாவாக அமையவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாகும். பங்குனி உத்திரம் அன்று குலதெய்வத்தினை வழிபட குடும்பத்தோடு செல்லுவோம். இழந்த பொருள்களை மீட்டெடுப்போம்.
&&&


