தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் உட்பட 1,123 பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்பி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1,123 பயனாளிகளுக்கு ரூ.1கோடியே 63 லட்சத்து 49 ஆயிரத்து 426 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வழங்கி தெரிவித்ததாவது: கலைஞர் , இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக ஒரு துறையை உருவாக்கி தனது நேரடி பார்வையில் வைத்து அத்தனை கோரிக்கையையும் நிறைவேற்றி தந்தார்கள். கலைஞர் அவர்களின் வழியில் வந்;த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாற்றுத்திறனாளிகளின் அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் , மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தி வழங்கியுள்ளார்கள். தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறையுள்ள ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 60 நபர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பார்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் 153 நபர்களுக்கு திறன்பேசி, 10 நபர்களுக்கு மடக்கு சக்கர நாற்காலிகள், 05 நபர்;களுக்கு மூன்று சக்கர வண்டிகள், 20 நபர்களுக்கு காதொலி கருவிகள், 13 ஆவாஸ் சிறப்பு பள்ளிகளுக்கு உதவித்தொகை, 600 நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை என மொத்தம் 891 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,11,71,380/- மதிப்பிலும், பிரெய்லர் கிட், மூளை முடக்குவாத குழந்தைகளுக்கான சக்கர நாற்காலி என 10 வகையான உதவி உபகரணங்கள் 224 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11,18,046/- மதிப்பிலும் வழங்கப்பட உள்ளது.
மேலும், பட்டு வளர்ச்சித்துறை மூலம் சிறந்த பட்டு விவசாயிகளாக தேர்வு செய்யப்பட்ட கோவில்பட்டி வட்டம் லிங்கம்பட்டியை சேர்ந்த லூ.சிங்கராயர் என்பவருக்கு முதல் பரிசு ரூ.25,000/-, கோவில்பட்டி வட்டம் லட்சுமியம்மாள்புரத்தை சேர்ந்த கோ.செல்வராஜ் என்பவருக்கு இரண்டாவது பரிசு ரூ.20,000/-, கோவில்பட்டி வட்டம் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த அ.பிரான்சிஸ் என்பவருக்கு மூன்றாவது பரிசு ரூ.15,000/- வழங்கப்பட உள்ளது. வருவாய்த்துறை மூலம் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை 01 நபருக்கு வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ள சிற்றூர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கிராமத்திற்கான வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்திடும் வகையில் பரிசுத்தொகை வழங்குதல் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கீழமுடிமண் ஊராட்சி, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் குளத்தூர் ஊராட்சி மற்றும் பூசனூர் ஊராட்சி ஆகிய 3 ஊராட்சிகளுக்கும் தலா ரூ.10 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.10 இலட்சம் வழங்கப்பட உள்ளது. மேலும் தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கிராமமான கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் உருளைக்குடி ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு ஊராட்சியில்உரிய வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ரூ.10 இலட்சத்திற்கான காசோலை உருளைக்குடி ஊராட்சி தலைவரிடம் வழங்கப்படுகிறது.
மனிதர்கள் அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்க வேண்டும். பெரியார், அண்ணா, கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் ஆகிய அத்தனை பேரின் கனவும் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான். சாதி என்பது ஒரு கற்பனைதான். இடுகாடு, கோயில், சாலை உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்ற நிலையை உருவாக்கிய ஊராட்சி தலைவர்களுக்கு வாழ்த்துக்கள், வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.10 இலட்சம் இன்று வழங்கப்படுகிறது. மனிதர்களை மனிதர்களாக பார்க்கக்கூடிய சமூகத்தினை உருவாக்க வேண்டும் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து காயல்பட்டினம் நகராட்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது சேவை மைய கட்டிடத்தினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்து நபார்டு வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய நிலையான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார்.
பின்னர், உடன்குடி ஊராட்சி ஒன்றியம் குலசேகரன்பட்டினத்தில் ரூ.10.93 இலட்சம் மதிப்பிலும், சிறுநாடார்குடியிருப்பில் ரூ.11.78 லட்சம் மதிப்பிலும் மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் சேரகுளத்தில் ரூ.11.78 லட்சம் மதிப்பிலும் செய்துங்கநல்லூரில் ரூ.10.93 லட்சம் மதிப்பிலும், விட்டிலாபுரத்தில் ரூ.10.19 லட்சம் மதிப்பிலும் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ்குமார், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வீரபத்திரன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சுரேஷ்குமார், காயல்பட்டியனம் நகராட்சி ஆணையாளர் குமார்சிங், திருச்செந்தூர்; நகராட்சி துணைத்தலைவர் ஏ.பி.ஆர்.ரமேஷ், உடன்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பாலசிங் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


