தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் கைதி ஒருவர் கையை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையை சேர்ந்தவர் ஆதி பரமசிவன். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆதி பரமசிவன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அப்போது ஆதிபரமசிவன் அங்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மதுரையில் இருந்து அவரை தூத்துக்குடியில் உள்ள பேரூரணி சிறைச்சாலைக்கு காவல்துறையினர் மாற்றம் செய்திருந்தனர். இந்தநிலையில் ஆதி பரமசிவனுக்கு நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று காலை பேருரணி சிறையில் இருந்து காவலர்கள் பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.
அப்போது ஆதி பரமசிவன் தனது கையில் மறைத்து வைத்திருந்த தகரத்தால் இடது கையில் பல்வேறு இடங்களில் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனே பாதுகாப்புக்காக அவருடன் வந்த போலீஸார் அதை தடுத்து உள்ளனர். ஏற்கெனவே, கால் முறிவு ஏற்பட்ட நிலையில், வாக்கர் உதவியுடன் மருத்துவனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்களை பார்த்து ஆதி பரமசிவன் கூறுகையில், “காவல்துறையினர் தன்னை தனிமை சிறையில் அடைத்து தொந்தரவு கொடுப்பதாகவும், உணவு உள்ளிட்டவை சரியாக வழங்கவில்லை என்றும், தன்னை சிறையிலேயே கொல்ல முயற்சி நடக்கிறது” என்றும் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தி சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது ஆதி பரமசிவன் அடிக்கடி தற்கொலை முயற்சி செய்து கொண்டு போலீஸாரை மிரட்டி வருவது வழக்கமாக ஒன்றுதான் என தெரிவித்தனர். இந்த சம்பவம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


