மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று (26-ந் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமமும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. இதையொட்டி காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பகல் 12 மணிக்கு புஷ்ப அலங்கார உச்சிகால சிறப்பு பூஜையும், இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலில் வலம் வருதலும் நடக்கிறது. திருவிழாவின் 10 நாட்களும் இரவு 8 மணிக்கு சிறப்பு கலை நிகழ்ச்சிகளும், இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலில் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதனைத்தொடர்ந்து விழாவின் 6-ம் நாளான 31-ந்தேதி பகல் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 10-ம் நாளான வருகிற 4-ம் தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.
இதையொட்டி காலை 8.30 மணிக்கு ஹோமமும், 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு மேல் பங்குனி உத்திர கும்பாபிஷேகமும் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு சுவாமி அம்பாள்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் ஆத்திக்கண் நாடார், அகோபால் நாடார், உதயகுமார் நாடார், தினேஷ் நாடார், செந்தில் நாடார், நாராயணராம் நாடார், கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


