திருநெல்வேலி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் 35 பேர் திருநெல்வேலி அரசு அருங்காட்சியக வளாகத்தில் இருந்து கிளம்பி ஒரு நாள் மரபு நடை பயணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் தொடங்கி தேரி குடியிருப்பு வரைக்கும் பல்வேறு தொல்லியல் தளங்களுக்கு சென்று வந்தனர்.
இந்த பயணத்தை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி தலைமை தாங்கி நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளத்திற்கு வந்த அவர்களை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார்.
அங்கு இப்பொழுது தொல்லியல் ஆய்வுகள் நடந்து அதன் முடிவுகளை பதிவு செய்யும் பணி நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று தொடர்ந்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வின் வரலாறு, எப்படி இங்கே ஆய்வுகள் தொடங்கியது அதன் முடிவுகள் என்னவாக இருக்கிறது இன்னும் இங்கு என்ன மாதிரியான ஆய்வுகள் நடக்க இருக்கிறது அங்கு அமையவிருக்கும் சர்வதேச அளவிலான அருங்காட்சியகம் போன்றவற்றைப் பற்றி விளக்கிக் கூறினார். அவர்களோடு மத்திய தொல்லியல் துறையை சேர்ந்த வினீத் மற்றும் அருண் ஆகிய ஆய்வாளர்களும் இணைந்து விளக்கங்களை கொடுத்தனர்.
தொடர்ந்து இன்னொரு முக்கியமான தொல்லியல் தளமான சிவகளை சென்றனர். அங்கு ஆசிரியர் மாணிக்கம் மக்களோடு இணைந்து சிவகளைப் பற்றிய முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். பின்னர் கொற்கை, அம்மன்புரம், தேரி குடியிருப்பு ஆகிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று அந்தப்பகுதிகளின் தொல்லியல் முக்கியத்துவத்தையும் தமிழர்களின் பாரம்பரிய மற்றும் வாழ்வியல் முறைகள் பற்றியும் பல்வேறு வரலாற்று தகவல்களோடு விளக்கி சொன்னார்.
70 வயது பாட்டி முதல் ஐந்து வயது சிறுமி வரை பல்வேறு வயதினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தமிழகத் தொல்லியல் தளங்களை பார்வையிட்டதோடு அவற்றில் பல விஷயங்களை தெரிந்து கொண்ட ஆர்வத்தோடு கிளம்பினர்.
இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளை நல்லதை பகிர்வது நம் கடமை சுற்றுலாக் குழுவைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் மு.வெ.ரா, உறுப்பினர்கள் சுரேஷ், சிவநடராஜ் மற்றும் விஜயலெட்சுமி உள்பட பலர் இணைந்து செய்திருந்தனர்.
இந்த தொல்லியல் சுற்றுலா பயணத்திற்கு முத்தமிழ் பப்ளிக் பள்ளி நிர்வாகத்தினர் அவர்களின் பள்ளி பேருந்து இலவசமாக அளித்து சுற்றுலா சிறப்பாக நடத்த உதவி புரிந்தனர்.


