ஆச்சி அன்றைக்கு மிகவும் சுறுசுறுப்பாக இருந்தாள், எங்கேயோ வேகமாக கிளம்பி கொண்டிருந்தாள்.
ஆட்டுக்கு புல் அறுக்க வேண்டும். அதன் பின் வயற்காட்டில் உரம் கொண்டு போட வேண்டும். இப்படி பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தாள் ஆச்சி. ஆகவே ராசுக்குட்டி அவளிடம் பேச இயலவில்லை.
ஆனாலும் ஆச்சியிடம் பேசாவிட்டால் ராசுக்குட்டிக்கு தூக்கம் வராதே.
ஆகவே ஆச்சி பின்னால் ஓடினான்.
மாட்டு தொழுவத்தில் போய் சாணியை அள்ளி பெரிய ஓலை பெட்டியில் போட்டு , “யய்யா செத்த பிடி” என பக்கத்து வீட்டு மாரியப்பனிடம் சொல்லி அவன் பெட்டையை தூக்கி விட சாணி பெட்டியுடன் நடக்க ஆரம்பித்தாள் ஆச்சி. பின்னாலே ஓடிச்சென்றான் ராசுக்குட்டி.
“ஆச்சி இன்னைக்கு எனக்கு ஒரு கதை சொல்லுவியா ஆச்சி”.
“ம். கூம். ஆச்சிக்கு நிறைய வேலை இருக்குடே. இன்னைக்கு லீவு” என்றாள்.
“ம். கூம். எனக்கு எப்படியாவது கதை சொல்லணும் ஆமா” என்று ராசுக்குட்டி ஆணையிட்டான்.
ஆச்சி சிரித்துக்கொண்டே சென்றாள்.
ஆச்சிக்கு விவசாயம் என்றால் உயிர். அதுவும் இயற்கை விவசாயம் ரொம்ப பிடிக்கும். மாட்டு சாணத்தை வயல்வெளியில் போட்டு, அப்படியே தொழி அடிச்சி. பூவரசம்பூ தழை குழையாக போட்டு மரம் அடிச்சி. அதுக்கு மேலே நாற்று நடவும். எந்த காரணத்தை கொண்டும் பூச்சி மருந்து அடிக்கவே கூடான்னு இருப்பாள். மஞ்சள், வேம்பு போன்ற இயற்கை பூச்சி கொல்லி மருந்துதான் தெளிப்பாள்.
“ஏலே அந்த இழவெடுத்தவன் பரமசிவன் இருக்கானே, அறிவு கெட்டவன் , ஆக்கங்கெட்ட மூதி. நம்ம கொழந்தை மாரி இருக்க விவசாய நிலத்தில பூச்சி மருந்து அடிக்கான். பொசங்கெட்டவன்.” என்றாள்.
தூரத்தில் சென்று கொண்டிருந்த ராசுக்குட்டிக்கு அந்த சொல் கேட்டது. “அது என்ன ஆக்கங் கெட்ட மூதி. சேய் கெட்ட வார்த்தை மாதிரிலே இருக்கு. இந்த ஆச்சி கெட்ட வார்த்தை பேசுதா. இவளும் மத்திவயிய மாரி விளங்காதவளா போயிட்டாளே”.
மனதுக்குள் நினைத்தாலும் “அது என்ன ஆக்கங்கெட்ட மூதின்னு சொல்லுதா? ஆச்சி. கேட்டே ஆகணும்” என நினைத்தான்.
ஒரு வழியாக பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தான்.
ஆக்கங் கெட்ட மூதி பத்தி விளக்கம் கேட்கணும். அவனால் மனது கொண்டு பாடத்தினை கவனிக்க முடியவில்லை.
அமைதியாக உட்கார்ந்தான்.
டீச்சர் சொன்ன எதுவும் இவன் காதில் விழவில்லை. இதில் வேறு கொட்டாவி வந்தது. வாயை திறந்து சத்தமாக கொட்டாவி விட ஆரம்பித்தான்.
“ஏலே மூதேவி. மூதேவி காலங்காத்தாலே கொட்டாவி விடுதீயே. நீ யெல்லாம் படிக்க வந்தீயா? இல்லை தூங்க வந்தியா? இழவெடுத்தவனே”. டீச்சர் பிரம்பை எடுத்துக்கொண்டு அடிக்க வந்தார்.
சுளீர் என்று கோவம் வந்தது ராசுக்குட்டிக்கு “என்ன இந்த டீச்சர் இப்படி திட்டுது”. கோபம் வந்தது. ஆனாலும் அடக்கி கொண்டான். இன்னைக்கு என்ன தொடர்ந்து கெட்ட கெட்ட வார்த்தையாக எல்லோரும் பேசுறாங்க.
“மூதேவி. ஆக்கங்கெட்ட மூதி”. குழம்பி போய் விட்டான்.
Êமாலை 4 மணி ஆனது. பள்ளிகூடம் மணி அடித்த வுடன் வீட்டுக்கு ஓடினான். ஆற்று மணலுக்கு ஓட்டம். ஆற்றுமணல் மேலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். இரவு வந்தது. வீட்டுக்கு ஓடி வந்தான். தொடர்ந்து Êசாப்பாடு. அடுத்த நிமிடம் மாடிக்கு ஓடினான். “ஆச்சி ஓடியா. கதை சொல்ல வா. காலையிலே சொன்னியே அந்த மூதி கதையை சொல்லு வா. ஓடியா ஓடியா” என கூறினான்.
ஆச்சி சிரித்துக்கொண்டே வந்தாள்.
“ஏலே அவசரம். என்ன அவசரமுலே”.
சிரித்தான் ஆச்சி. “நீ என்னென்னா பரமசிவன் அண்ணாச்சியை பாத்து ஆக்கங்கெட்ட மூதி என்கிற. எங்க டீச்சரு. என்னை மூதேவின்னு திட்டுதாவ. எனக்கு கோபம் கோபமா வருது”.
ஆச்சி சிரித்த படியே பேச ஆரம்பித்தாள்.
“ஏலே மூதியும் மூதேவியும் ஒருத்தி தான். அந்த காலத்தில பெரியவிய சொல்லுவாவ மூதேவியை மாமுகடி, தவ்வை, காக்கைக் கொடியோள், பழையோள் இப்படின்னு 14 பேருல கூப்பிடுவாவ. பல்லவ ராஜா ஆண்ட காலத்தில நம்ம தமிழ் மக்களோட தாய்த் தெய்வமாக மூதேவி யைத்தான் கும்பிட்டு இருக்காவ. நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம். சேர சோழ பாண்டியரும் இவளை வணங்கி இருக்காவ.
திருக்குறள் எழுத்துனாவுலே திருவள்ளுவர், அவுக கூட சோம்பேறியிடம் மூதேவி தங்குவாள்; சோம்பல் இல்லாதவனிடம் சீதேவி தங்குவாளுன்னு சொல்லியிருக்காவ.
அழுக்கு, நாற்றம், துன்பம், புலம்பல், அடிக்கடி கொட்டாவி விடுதல், தலைவிரித்து போடுதல், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், அலங்கோலமாக இருத்தல், எதிர் மறையான எண்ணங்கள், தீராத மனக்கஷ்டம் இவை எல்லாம் மூதேவியோட குணம். இந்த குணத்தில ஏதாவது உள்ள வந்தா, வரிசையாக எல்லாமே நம்ம உடலுக்குள்ள வந்திடும்”.
“இந்த மூதேவியை பத்திசொல்லுதேன் கேளு”. ன்னு ஆச்சி. ஒரு புராண கதையையே சொல்ல ஆரம்பித்தாள்.
“. அந்த காலத்தில திருபாற்கடலை கடஞ்சி அமிர்த்தம் எடுத்துகிட்டு இருந்தாவ. அதில இருந்து வந்த ஆலகால நஞ்சினை சிவபெருமான் குடித்ததும் பாற்கடல் அமைதியாயிட்டு. திரும்பவும் பாற்கடலைத் தேவர்களும், அசுரர்களும் கடைய ஆரம்பிச்சாவ. இந்த நஞ்சினைத் தொடர்ந்து உச்சை சிரவம் என்னும் வெண்குதிரை தோன்றிச்சு. அதை அசுரர்கள் தங்கள் வசமாக்கிக் கொண்டாவ. அசுரர்களின் அரசான பலிராஜா வெண்குதிரையை தனது வாகனமாக ஆக்கிக்கிட்டாரு. அடுத்து காமதேனு வெளிப்பட்டாள். அவளை ரிஷிகள் தங்களோட வைச்சிக்கிட்டாவ. காமதேனுவைத் தொடர்ந்து ஐராவதம் என்னும் வெள்ளை யானை வந்துச்சு. அதை இந்திரன் தன்னோட வசம் ஆக்கிக் கிட்டாரு. பின்பு கௌஸ்துபமணி என்ற பிரகாசமான இரத்தினமாலை வந்தது. அதைத் திருமால் தனது மார்பில் தாங்கிக் கொண்டார். அதைத் தொடர்ந்து கேட்டதைத் தரும் பாரிஜாதம் என்னும் மரமும் அப்சரஸ் சும் தோன்றியது. அதைக் கைப்பற்றிய அசுரர்கள் இதனால் பிரயோஜனம் இல்லை என்று விட்டு கொடுக்க அதைத் தேவர்கள் தன் வசமாக்கிக் கொண்டாவ.
அடுத்து கருமையான நிறத்துடனும் துர்வாடையுடனும், பெருத்த மார்புடனும், சிவந்த கண்களுடனும் அவலட்சணமாய் மூதேவி தோன்றினாள். அவளை யாருமே ஏற்றுக் கொள்ள முன்வரலை. இதனால அகங்காரத்தோட மூதேவி அங்கேயே நின்னுக்கிட்டு இருந்தா. அவளுக்கு பின்னால அழகு சுந்தரியான மகாலெட்சுமி தோன்றினா. அவளைச் சொந்தம் கொண்டாட நான், நீ ன்னு தேவர்களும், அசுரர்களும் போட்டிப் போட்டாவ. அந்தச் சண்டைக்குப் பின் எல்லாரும் ஒப்பந்தம் போட்டாவ. நாம எல்லோரும் வரிசையில் நிற்போம். மகாலெட்சுமி யாருக்கு மாலை போடுகிறாரோ அவர், அவளை மணந்து கொள்ளட்டுமுன்னு முடிவு பண்ணினாவ. ஆனால் இந்த வரிசையில் நிற்காமல் தனியே நின்ற திருமாலைக் கண்டு மயங்கிட்டாவ மகாலெட்சுமி. ஓடிப்போய் திருமால் கழுத்தில மாலையிடச் ஓடினாவ. அப்போது அந்த அமங்கல குரல் கேட்டுச்சி. “திருமணத்தை நிறுத்து” ன்னு மூதேவி கத்தினாவ. ஏன்னு காரணம் கேட்டாவ, நான் தான் மூத்தவ, நான் இருக்கும் போது இளையவளுக்கு எப்படி திருமணம் செய்யலாமுன்னு கேட்டா.
மூதேவியின் நியாயத்தைப் புரிஞ்சு கிட்டாரு திருமாலு. எப்போ மூதேவிக்குத் திருமணம் நடக்கோ, அப்புறம் தான் எனக்குத் திருமணமுன்னு சொல்லிட்டாவ. யாருமே மூதேவியைக் கைப்பிடிக்க முன்வரவில்லை. இவளை மணந்தாள் அழுக்கு, அசுத்தம், இருள், அறியாமை, தோல்வியே ஏற்படுமுன்னு எல்லோரும் ஒதுங்கி நின்னாவ”. ஆச்சி மூச்சி விட்டாள்.
ராசுக்குட்டி முகம் சுழித்தான், “உண்மைத்தானே இப்படி அழுககோட இருந்தா யாரு கல்யாணம் முடிப்பா?” ஆச்சி தொடர்ந்தாள்.
“முனிவரான உத்தாலகர் நான் மூதேவியை கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னாவ. எல்லோரும் அதிர்ந்து போயிட்டாவ. உத்தாலகர் திருமால் புகழை மட்டுமே பாடிக் கிட்டு இருக்கும் பிரம்மச்சாரி. அவுக திடீரென்று திருமணம் வேண்டுமுன்னு சொல்றதும், அதுவும் அவல நிலையில் உள்ள மூதேவியை மணக்க போவதாக சொன்னது. எல்லாத்துக்கும் ஆச்சரியமா இருந்துச்சு. இதை பத்தி புரிஞ்சு போன திருமால், உத்தாலகரிடம் “முனிவரே, ஏன் இந்த விபரீத முடிவு?Õ ன்னு கேட்டாவ. அதற்கு அவரு Ôஇறைவா உங்கள் திருமணத்தை நான் கண்குளிரக் காணணும். அதுக்காக என்ன இடைஞ்சல் வந்தாலும் தாங்கிக்குவேன்னு” சொன்னாரு.
“உத்தாலகரே, நீர் தான் என்னோட உண்மையான பக்தருய்யா. உம்ம தவவலிமையை மூதேவிக்கு வழங்குமய்யா. அவளும் நல்ல பிறவியாக மாறிபோவான்னு” திருமால் சொன்னாவ. முனிவர் தவ வலிமையை மூதேவிக்கு கொடுத்தவ, அவலெட்சண உருவம் மறைஞ்சு போய் அழகாய் மாறினாள்.
உத்தாலகர் விட்டாரா. அங்க இருந்தவர்களை பாத்து சொன்னாவ, “இவ பார்வை தவறு செய்பவர்கள் மேல பட்டால் அவுக தண்டனை பெறுவாவ. நல்லவருக்கு இவளால் எந்தத் தீங்கும் நேராது” ன்னு சொன்னாவ. அப்புறமா மூதேவியின் கரத்தினை முனிவர் பிடிச்சாவ. அப்புறம் தான் திருமால் சீதேவியின் கரத்தினைப் பிடிச்சாரு. அன்று முதல் நல்லதைச் செய்யச் சீதேவியும், தவற்றைத் தட்டிக் கேட்க மூதேவியும் வலம் வர ஆரம்பிச்சாவ.”.
கண்கொட்டாம கதை கேட்டுக்கொண்டே இருந்தான் ராசுக்குட்டி. ஆச்சி தொடர்ந்தாள்.
மூதேவி என்பது தூக்கம். ஒருவன் கொட்டாவி விட்டு விட்டால் அவனைப் பார்த்து இதோ மூதேவி வந்து விட்டாளுன்னு சொல்லுதோம். உன்னை கூட டீச்சர் சொன்னவளே . ஞாபகம் இருக்கா. ஒருவன் பொன், பொருள் (சீதேவி) இல்லாமல் இவ்வுலகில் வாழ்ந்து விடலாம். ஆனால் மூதேவி அதுதான் தூக்கம் இல்லாமல் வாழ முடியுமா? அப்படி தூக்கம் இல்லாமல் வாழ்ந்து வந்தால் பைத்தியம் பிடிச்சிரும். என சொல்லி சிரித்தாள் ஆச்சி.
உண்மைதானே. ஸ்ரீதேவி மக்களுக்கு தேவையான செல்வத்தை கொடுப்பதற்குப் படைக்கப்பட்டதாகவும், மூதேவி வீட்டிலிருக்கும் வறுமையை அடித்து விரட்டுவதற்கு படைக்கப்பட்டதாகவும் நம் முன்னோர்களால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப் பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஒரு வீட்டில் இருப்பவர்கள் சோம்பேறித்தனமாக உள்ளார்கள். வாழ்க்கையில் முன்னேறு வதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. இந்த வீட்டில் மூதேவி குடி இருப்பார்கள் என்பது நம் அனைவரது கருத்தாகும். ஆனால் இப்படி சோம்பேறித்தனமாக கெட்ட எண்ணத்தோடு வாழ்பவர்களுடைய வீட்டில் மூதேவி குடியேறி, அவர்களுக்கு வாழ்க்கையில் கஷ்டங்களைக் கொடுத்து, வாழ்க்கையில் எது நல்லது கெட்டது என்பதை புரிய வைத்து அந்த வீட்டிலிருக்கும் தரித்திரத்தை மூதேவி தன்னுடனே வெளியே எடுத்துச் சென்று விடுவாள். இந்த மூதேவி வெளியே சென்ற பிறகு, மூதேவியின் தங்கை ஸ்ரீதேவி அந்த வீட்டுக்குள் நுழைவாள். பீடை பிடித்த தரித்திரம் பிடித்த வீட்டில் மூதேவி குடி கொள்வாள். அந்த வீட்டில் இருக்கும் தரித்திரத்தை விரட்டி அடிக்கக்கூடிய வேலையைதான் இந்த மூதேவி பார்த்துக்கொள்வாள். மனிதர்களின் மனதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யக்கூடிய வேலையை இந்த மூதேவி செய்கின்றாள். ஆனால் காலப்போக்கில் மூதேவி என்ற பெயரைக் கேட்டாலே வீட்டில் தரித்திரம் பிடிக்கும், வறுமை வரும் என்ற எண்ணம் நமக்கு வந்ததற்கு காரணம் தான் என்ன?. நெற்கதிர்கள் ஸ்ரீதேவி என்றும் நெற்கதிர்கள் விளைவதற்கு கருப்பு நிறத்தில் உரமாக இருக்கக் கூடியதை மூதேவி என்றும் அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். அதாவது அழுக்கு படிந்த கருப்பான உரத்தை மூதேவிக்கு இணையாக சொன்னதால், மூதேவி அழுக்குப் படிந்த சுத்தம் இல்லாத ஒரு தெய்வம் என்று மக்களுடைய மனதில் பதிய தொடங்கியது. காலப்போக்கில் அதுவே இந்த மூத்த தேவியை மூதேவி ஆக மாற்றுவதற்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது. மூத்த தேவியாக பட்டவள் என்றைக்குமே நமக்கு கஷ்டங்களை கொடுப்பவள் அல்ல.
ஆச்சியும் அதே கருத்தைதான் சொன்னாள், மூதி என்றாலோ, மூதேவி என்றாலோ இரண்டும் ஒண்ணுத்தான். நம்மிடத்தில் இருக்கும் கெடுதலை நம்மிடத்தில் இருந்து வெளியே விரட்டி அடிப்பவள் மூதேவி. இனி யாரையாவது பார்த்து மூதேவி என்று திட்டும் போது கொஞ்சம் ஆச்சி சொன்னதை சிந்தித்து பாருங்க.
ராசுக்குட்டிககு ஆச்சரியமாக இருந்தது. சே. மூதேவியை தப்பா நினைச்சுட்டுமோ என குறைப்பட்டு கொண்டான்.
( ஆத்தோரக்கதைகளை ஆச்சி தொடர்ந்து சொல்லுவாள்)


