ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோயிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் மாசி திருவிழா கடந்த மார்ச் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் தினமும் மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதி உலா நடந்தது. மார்ச் ஐந்தாம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு கருட வாகனத்தில் சுவாமி பொழிந்துநின்ற பிரானும், ஹம்ச வாகனத்தில் சுவாமி நம்மாழ்வாரும் எழுந்தருளும் வீதி உலா நடந்தது.
மார்ச் ஒன்பதாம் தேதியான இன்று ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடந்தது. இதற்காக அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு நம்மாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 7 மணிக்கு மேல் உற்சவர் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 9 மணிக்கு திருத்தேரில் உற்சவர் நம்மாழ்வாருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன்பின்னர் திருத்தேரை கோவிந்தா கோபாலா என கோஷம் முழங்க பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் கீழரதவீதி, தெற்கு ரதவீதி, மேலரதவீதி மற்றும் வடக்கு ரத வீதிகள் வழியாக மீண்டும் நிலை வந்தடைந்தது. தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு சுவாமி நம்மாழ்வாரின் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் செய்துள்ளனர்.


