தூத்துக்குடியில் உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகளின் ஆதார் எண் இணைக்கும் பணி தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (03.03.2023) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் ஆதார் எண் இணைக்கும் பணி குறித்த கூட்டத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமை வகித்து தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாதம் ரூ.2000 உதவித்தொகை பெற்று வரும் மனவளர்ச்சி குன்றிய, கடும் ஊனமுற்ற, தொழுநோய் பாதிப்பு, தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண், தேசிய அடையாள அட்டை எண், தொலைபேசி எண் இவற்றை இணைக்காத நபர்களுக்கு ஜனவரி 2023க்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படவில்லை.
எனவே இவ்விவரங்களை இன்று வரை அளிக்காத 2100 நபர்களை கள ஆய்வு செய்து விபரங்களை சேகரிக்க சமூக நலத்துறை அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே உடனடியாக இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


