திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 5-ஆம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி, அம்மனுக்கு குடைவரைவாயில் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு நேற்று (புதன்கிழமை) மாலை மேலக்கோயிலில் சுவாமி குமரவிடங்க பெருமானும், தெய்வானை அம்மனும் தனித்தனி தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளினா். இரவு 7.30 மணியளவில் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது.
அப்போது எதிா்சேவையாக தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய ஸ்ரீ ஜெயந்திநாதருக்கும் தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். தொடா்ந்து சுவாமி, அம்மன் வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். ஆறாம் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கோ ரதம், இரவில் வெள்ளி ரதம் வீதி உலா நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


