கௌதம் வாசுதேவ் மேனன் பிறப்பு: 25 பெப்ரவரி 1973) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். தனது தமிழ்ப் படங்களின் மறு ஆக்கங்களாக தெலுங்கு மற்றும் இந்திப் படங்களையும் இயக்கியுள்ளார். இவரது பெரும்பாலான திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றுள்ளன. முக்கியமாக காதல் திரைப்படங்களான மின்னலே (2001), வாரணம் ஆயிரம் (2008), விண்ணைத்தாண்டி வருவாயா (2010), மற்றும் த்ரில்லர்களான காக்க காக்க (2003), வேட்டையாடு விளையாடு (2006), மற்றும் என்னை அறிந்தால் (2015). இதில் வாரணம் ஆயிரம் திரைப்படமானது சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. கௌதம் தனது ஃபோட்டான் கதாசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பான தங்க மீன்கள் (2013) திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது.


