செய்துங்கநல்லூரில் உள்ள மிகவும் பழமையான பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயத்தில் ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்று பக்தர்களிடம் பல வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சிவராத்திரியை முன்னிட்டு செய்துங்கநல்லூர், வி.கோவில்பத்து, ஊர் மக்கள மற்றும் ஆன்மீக பக்தப் பேரரவை சார்பில் முதலமைச்சருக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கும் வண்ணமாக பக்தர்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது. தென்னகத்தில் 1000 வருடம் பழமையான ஆலயம் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிர பாதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் தென் தில்லை என்று போற்றப்படுகிறது. இக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் உள்ளது. இதன் மூலம் இவ்வூர் செய்துங்க நாட்டு சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்படுவது தெரியவருகிறது. இந்த கோயிலில் தற்போது திருப்பணி முடிந்து திருவிழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிதம்பரம் செல்ல முடியாதவர்கள் கூட இந்த கோயிலுக்கு வந்து செல்கிறார்கள். எனவே ஊர் மக்களும் பக்தக் கோடிகளும் இணைந்து இந்த கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளோம். எனவே தாங்கள் தயவு கூர்ந்து இந்த கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட அனுமதியும், உதவியும் செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம். என்று கூறிப்பிட்டு இருந்தார்கள். இந்த மனுவின் நகலை, அறநிலைத்துறை அமைச்சர், கால்நடைத்துறை அமைச்சர், தூத்துக்குடி மாவட்ட ஆடசி தலைவர், அறநிலையத்துறை இயக்குனர் , ஸ்ரீவைகுண்டம் செயல் அலுவலருக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாலு கால பூஜையிலும் ராஜகோபுரம் கட்ட வேண்டிய பணிக்கு பிராத்தனை நடந்தது.


