முன்கதை சுருக்கம்
சந்திரன் முத்துகிளியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். ஆனால் அது இயலாது என்கிறார்கள். அதற்கு காரணம் அவனது குடும்பத்தில் சாதி மாறி திருமணம் செய்தது என்கிறார் வாசு. உண்மையை புரிந்து கொள்ள சந்திரன் தனது பூர்வீகத்தினை தேடுகிறான். அதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இதற்கிடையில் பனையில் இருந்து விழுந்து இறந்த லிங்க நாடாருக்கு ஏதாவது அரசு மூலம் நிதி உதவி கிடைக்குமா? என எதிர்பார்த்து வரதன் என்பவரை பார்க்க வந்தான். அவர் இறந்து விடவே அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் தவிக்கிறான். இதற்கிடையில் முத்துகிளி தனது அப்பா ரத்தினத்தினை நெஞ்சுவலி என 108ல் பாளை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருகிறாள். அப்போது சந்திரன் ரத்தினத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறான். இதற்கிடையில் சந்திரனின் பூர்வீக கதையை ஆசிரியர் அகஸ்தீஸ்வரன் அவனுக்கு சொல்ல ஆரம்பிக்கிறார். ஆர்வத்துடன் கேட்கிறான் சந்திரன்.
இனி.
52. தேடி வந்த உதவிகள் தெறித்து ஓடிய எதிரிகள்
பனை தொழில் செய்துகொண்டிருந்தவர்கள், யோசித்துக்கொண்டிருக்கும் போதே ராஜதுரை வேகமாக அங்கிருந்து ஊரை நோக்கி ஓடினான்.
ஆனால் அதற்குள் அந்த தீபந்த கூட்டம் ஊருக்குள் நுழைந்துவிட்டது.
அந்த கூட்டத்தில் ஒருவன் மேற்கே உள்ள வீட்டு கூரையில் தீ வைக்க, அந்த தீ மள மளவென்று பற்றி எரிந்தது. மற்றொருவன் மற்றொரு மூலையில் தீ வைத்தான். ஒருவனோ தீ பந்தத்தினை நடுவில் உள்ள கூரை வீட்டுக்கு மேலே எறிந்தான். எங்கிருந்து தீ பந்தம் வருகிறது என்றே தெரியாமல் நாலு பக்கமும் அந்த கூட்டம் தீ பொறியை பறக்க விட்டது. ஏற்கனவே காய்ந்து போய் இருந்த ஓலை குடிசை அந்த தீயில் பற்றி எரிய ஆரம்பித்தது.
ராஜ துரை ஓடி வரும் போது அந்த கும்பல் முழுவதுமாக கிராமத்துக்கு தீ வைத்து முடித்திருந்தனர். இவனை பார்த்தவுடன் தப்பித்து ஓட ஆரம்பித்தனர். ஏற்கனவே இவனின் கம்பு சுற்றலை நன்கு அறிந்தவர்கள். எனவே விட்டால் போதும் என ஓடினர்.
ராஜ துரை விட வில்லை. ஓடிப்போடி அந்த கும்பலை தாக்க ஆரம்பித்தான். ஆனால் அந்த கும்பல் இவனை எதிர்த்து தாக்க முயற்சிக்கவில்லை. இவனின் வெறித்தனமாக தாக்குதலில் இருந்து தப்பித்தால் போதும் என்று ஓடினர்.
ஒருவன் கீழே விழுந்தான். அவன் காலை பிடித்து முறித்தான் ராஜதுரை. மறு கனம் துடி துடித்து போனான் அவன்.
அவனால் எழுந்து நடக்க முடியவில்லை. “ஏ. ஆத்தா என் காலை முறிஞ்சி புட்டானே” என கூக்குரல் இட்டான். அவனின் குரலை கேட்டு அதிர்ந்த மற்றவர்கள் நின்றனர். இது தான் சமயம் என காட்டுத்தாக்கலில் ஈடுபட்டான் ராஜ துரை. அவர்களால் இவனிடம் தப்பித்து ஓடவும் முடியவில்லை. கூட வந்த கூட்டாளியை விட்டு விட்டு செல்ல மனமும் வரவில்லை. தீ வைத்தவர்கள் அய்யரின் காவலாளிகள் என இவனுக்கு தெரிந்தது. எனவே அவர்கள் அனைவரையும் சும்மா விட்டு விடக்கூடாது என ஓங்கி உதை விட்டான். அனைவரும் ஆற்றுமணலில் புரண்டு தப்பிக்க ஓடின்ர். கால் முறிந்தவனோ, கூச்சல் கூப்பாடு போட்டுக்கொண்டே இருந்தான்.
“என்னை விட்டுட்டு போயிடாதிங்க. என்னை தீயில தூக்கி போட்டுருவான்” என் மரண கத்தல் கத்தினான்.
அதே நேரம். அடித்தாங்கமல் கத்திக்கொண்டே அந்த கும்பல் இருட்டுக்குள் ஓடினர்.
அப்போது தான் ஊருக்குள் இருந்து அந்த சத்தம் கேட்டது.
அந்த சத்தம் பொன்னு நாடாருடையது. “ஏலே மூல வீட்டு தாத்தா மூடியமா மேல வீட்டில படுத்து கிடந்தாரே. அவரை காப்பாத்துங்கல” என கத்தினார்.
உண்மைதான். மூல வீட்டு தாத்தா உடலுக்கு முடியாமல் கடந்த 6 மாதம் படுத்த படுக்கையாகவே இருந்தார்.
ராஜ துரை காதில் பொன்னு நாடார் சத்தம் விழுந்தது. எனவே இவர்களை விட்டு விட்டு, தாத்தாவை காப்பாற்ற ஓடினான்.
இதுதான் சமயம் என இருட்டுக்குள் மறைந்து கிடந்தவர்கள் வெளியே ஓடிவந்தனர். கால் முறிந்தவனை தூக்க முயற்சித்தனர். அவனால் காலை கீழே ஊன முடியவில்லை. ஆத்தா என கத்தினான். எப்படி தூக்க, என நினைத்த ஒருவன் தனது எட்டு மூல வேஷ்டியை அவிழ்த்து விரித்தான். அதன் மீது அவனை கிடத்தினான். அதன் பின் பாடையில் கட்டி தூக்குவது போல் அவனை தூக்கி கொண்டு ஆற்றுக்குள் இறங்கி ஓட ஆரம்பித்தனர்.
ராஜ துரை மூல வீட்டுக்கு ஓடியே வந்தான்.
அந்த வீட்டில் தீ மேல் பகுதியில் பிடித்து எரிந்து கொண்டிருந்தது. நல்ல வேளை வீட்டுக்குள் பரவவில்லை. இவன் கதவை திறந்தான். இவனை உள்ளே செல்ல விடாமல் தீ சுவாலை வாசல் வரை வந்து நின்றது.
அந்த நெரும்பை இவன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. உள்ளே ஓடினான். அங்கே தாத்தா கட்டிலில் படுத்து கிடந்தார். சுற்றி நெருப்பு, அருகில் வைத்திருந்த கருப்பட்டி கொட்டான் ஒரு புறம் தீபிடித்து நெருப்பு சுவாலையாக வடிந்து கொண்டிருந்தது. அதன் அருகே குலுக்கையில் இருந்த நெற் விதைகள் தீ பிடித்துக்கொண்டிருந்தது. அது எல்லாம் இவன் கண்ணுக்கு தெரியவில்லை.
தாத்தாவை அப்படியே சேர்த்து அனைத்துக்கொண்டான். அதற்குள் கட்டிலில் தீ பிடிக்க ஆரம்பித்தது. அவரை தூக்கி கொண்டு வீட்டுக்கு வெளியே ஓட ஆரம்பித்தான். மொத்த கூரையும் எரிந்து உள்ளே தாழ்வாரத்தில் விழுவதற்கு முன்பே வெளியே வந்தான். ஆனாலும் கூரை நெருப்பு இவர்கள் மேலே விழுந்தது. அதை தட்டி விட்டு வெளியே வந்தான். ஆனாலும் தாத்தா துணி மீதும் இவன் மீதும் நெருப்பு பற்றி எரிந்தது. அதற்குள் கதவு தானே பூட்டி விட்டது. எனவே ஒரு உதை விட்டான் ராஜ துரை. மறு நிமிடம் எரிந்து கொண்டிருந்த நெருப்போடு கதவு பறந்து போய் விழுந்தது. இவன் நெருப்பு சுவாலையுடன் வெளியே ஓடி வந்தான். மற்றவர்கள் இவன் மீதும் தாத்தா மீது தண்ணீர் ஊற்றினர். அந்த நெருப்போடு தாத்தாவை வெளியே கொண்டு வந்த அவன் அவலை பெண்ணுக்கு வாழ்வளித்த கிருஷ்ணபரமார்த்தா போலவே தோன்றினான். மற்றவர்கள் தாத்தாவை தாங்கி பிடித்து அருகில் உள்ள மரத்து மூட்டுக்கடியில் கொண்டு கிடத்தினர்.
“அப்பாடா காப்பாத்தியாச்சு” என பெரும் மூச்சி விட்டான், ராஜ துரை. ஆனாலும் மேலும் நான்கு பெரிசுகள் எந்த வீட்டில் இருக்கிறார்கள் என கண்டு பிடிக்க முடியவில்லை. காக்காச்சி அக்கா மவ முனிசெல்வி தலை பிரவேசத்துக்கு வந்து இருந்தாளே ,அவளும் குழந்தையும் எப்படி இருக்கோ என அவள் வீட்டை நோக்கி ஓடினான் ராஜதுரை. ஆடி மாத காற்று வேறு சுழற்றி எரிந்தது.
ஆடிகாற்றில் அம்மியும நகரும் என்பார்களே . இங்கு நெருப்பு வேகமாக அனைத்து வீடுகளையும் சுற்றி வளைத்தது. எந்த வீட்டுக்குள்ளும் நுழைய முடியவில்லை.
ஆனால் ஒரு குரல் கேட்டது. “முனிசெல்வி குழந்தையோட வெளிய வந்துட்டா. வீட்டுக்குள்ளே போகாதே” என்றார் பொன்னு நாடார்.
பெருமூச்சி விட்டபடி திரும்பினான்.
அடுத்த அரை மணி நேரத்தில் அனைத்து வீடுகளும், கருப்பட்டி கொட்டான்களும் எரிந்தன. ஆனால் கள்ளவாண்டசாமி புண்ணியத்தில் எந்த உயிருக்கும் ஆபத்து இல்லை.
கிட்டத்தட்ட 10 நிமிடத்தில் அனைவரும் நிராயுத பாணியாக மாறி விட்டார்கள். உழைப்பு இல்லை. அடுத்து விளைச்சலும் விளை நெல்லு இல்லை. உடுத்து கொள்ள வைத்திருந்த வேஷ்டி சேலை கூட எரிந்து சாம்பலாக விட்டது. என்ன செய்வது ராஜ துரை கண்கள் சிவந்தது. “ஒருத்ன் காலைதானே உடைத்தேன். அந்த பயலுவ ரத்தத்தையும் குடிச்சிருக்கணும்”
இவனுக்கு வந்த அத்தனை பேர் முகமும் தெரியும். பலிக்கு பலி. அத்தனை பயலுவ ஜோலியையும் முடிச்சி புடணும். உடனே கிளம்பணும் என நினைத்தான். ஆனால் இந்த இடத்தோட நிலமை வேறு மாதிரி ஆகி விட்டது.
விடிலி காட்டுக்குள் இருந்த மொத்த பனையேறிகளும் இங்கே வந்து விட்டனர். ஒரே கூச்சல் குழப்பம், பெரிய அளவில் பணம் எதுவும் சேர்த்து வைக்கவில்லை. ஆனால் உடுத்த மாற்று துணி எதுவுமே இல்லை. எல்லாமே எரிந்து நாசமானாதே. தங்களது கண் முன்னாலே எரியும் வீட்டை பார்த்து குமுறினர்.
ராத்திரி முழுவதும் அனைவரும் மன « வதனையில் அமர்ந்தனர். தங்கள் வீட்டில் ஏதாவது மிஞ்சி இருக்கிறதா என ஆசையோடு போய் பார்த்து விட்டு,ஒன்றுமில்லை என்றவுடன் கூப்பாடு போட்டனர். அதிகாலை வரை சில வீடுகள் எரிந்து கொண்டே இருந்தது. கூடிய மட்டும் தீயை அணைத்து விட வேண்டும் என்று முயற்சி செய்த இளைஞர் அழுத்து சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டனர்.
காலை 5 மணி இருக்கும் செய்துங்கநல்லூர் ஏட்டையா வந்தார்.
“ஏலே இங்கே பாருங்க. எவன் தீயை வச்சான். சொல்லுங்க. அவனுவல நம்ம சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லி முட்டுக்கு முட்டு தட்டி உள்ளே போட்டு புடுதேன். சொல்லுங்கலே” என்றார்.
எல்லோரும் ராஜ துரையை காட்டினார். “எஜமான் ராஜ துரைதான் முதலில வந்தான். அவன் தான் தீ வச்சனுவல பாத்தான். அவனுவ கூட சண்டையெல்லாம் போட்டான். ஆனால் தப்பி ஓடிட்டானுவ”. அப்பாவியாக ஒரு இளைஞன் கூறினான்.
ஏட்டையா ராஜதுரை அருகில் வந்தார், “ஏலே அவனுவ யாருல, உனக்கு அடையாளம் தெரியுமா?” என்றார்.
அமைதியா இருந்தான் ராஜதுரை.
அய்யரை காட்டி கொடுத்து விடலாமா?. ஒரு நிமிடம் யோசித்தான். வேண்டும். காட்டிக்கொள்ள வேண்டும். ஆனால் இப்போது இல்லை. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். ஆன்னா வுன்னா இவனுவ வந்து நம்ம குடிசலுக்கு தீ வைச்சிட்டு போறானுவ ஒரே நாளுல நம்மாளுக உழைப்பு போகுது, சேமிப்பு போகுது இதுக்கு சரியான முடிவு கட்ட வேண்டும். என்ன செய்யலாம்.
யோசித்தான்.
“என்னல யோசிக்க. உனக்கு ஆளு தெரியுமா?”
“இல்லை ஏட்டையா, எவனுவன்னு தெரியலை. ஆனா அவனுவல நான் இதுவரைக்கு பாக்கல” தீர்க்கமாக சொன்னான் ராஜதுரை.
“ஏலே எருமைமாடு மாறி இருக்க அவனுவ பின்னால ஓடியிருக்க . அவனுவ காலை ஒடிச்சி இருக்க வேண்டாமா?” ஏட்டையா கோபமாக கேட்டார்.
காலை ஒடித்துத்தான் விட்டிருந்தான். அவனுவளை ஆயுசுக்கும் நொண்டியாக்கிதான் விட்டிருந்தான். ஆனாலும் வேண்டாம். போலிசுக்கு சொல்ல வேண்டாம். நிரந்தர தீர்வு காணவேண்டும்.
எப்படி?
ராஜதுரையை கனவை கலைத்தார், ஏட்டையா. “சரி. பக்கத்து கிராமத்தில இருக்க அய்யமாருக்கிட்ட சொல்லி உங்களுக்கு ஏதாவது சாப்பாடு போட உதவி செய்ய சொல்லுதேன்”.
சட்டென்று மறைத்தான் ராஜதுரை. “வேண்டாம் ஏட்டையா பிச்சை எடுத்தாலும் எடுத்துக்கிறோம். அவியகிட்ட கையேந்த வேண்டாம்”.
“பொறவு சோத்துக்கு என்னலே செய்வீய. பிச்சை எடுக்க போறியாக்கும்”.
“ஏட்டையா. இது என்ன செம்பறி ஆட்டம் கூட்டமுன்னு நெனைச்சியளா. சாஞ்சா சாஞ்ச பக்கம் சாயா. இது வெள்ளாட்டு கூட்டம் ஏட்டையா. யாருக்கிட்டேயும் கையேந்த மாட்டோம். நெஞ்சுல தைரியம் இருக்கு. உடம்புல வலுவிருக்கு. உழைச்சி சாப்பிடுவோம். ஆமா. இது சாணர் கூட்டம். சான்றோர் கூட்டம். எங்க கைதான் எப்போதும் மேலே நிக்கும். பட்டினி கிடந்து செத்தாலும் சாவோம். எவன் கிட்டேயும் கையேந்த மாட்டோம்”. தீர்க்கமாக சொன்னான் ராஜதுரை.
“ம். சொல்வியலே. கேட்டா பொன் நாடார், பொருள் நாடார், பதவியும் நாடார்ன்னு சொல்வியலே. உங்க கூட்டம் உண்மையில பெரிய கூட்டம் தான். எவனுவ உங்களை அழிக்கணுமுன்னு நினைச்சாலும் பல மடங்கு பெரிசா வளர்ந்து தான் நிக்கிய. ம். எனவே வியப்பாத்தான் இருக்கு. ஆனாலும் தப்பு செஞ்சனை கண்டு பிடிக்கணும். எனக்கும் மனச்சாட்சி இருக்கு. அதனால சர்க்கிள் இன்ஸ்பெக்டரை கூப்பிட்டு வந்து எப்.ஐ.ஆர் போடப்போறேன்”
என்று கூறி விட்டு ஏட்டையா எரிந்து கிடந்த வீட்டில் ஒவ்வொரு இடமாக சென்றார். வீடுகளை கணக்கெடுத்து சேதம் எவ்வளவு இருக்கும் என கணக்கு பார்க்க ஆரம்பித்தார். அந்த நேரத்தில் வி.எம் கல்யாண சுந்தரம் பிள்ளை வந்தார். சே. ஈவு இரக்கம் இல்லாத பயலுவ. உடலை மூலதனமாக வைச்சி உழைக்கிற இந்த பனையேறி கூட்டத்து வயித்தில அடிச்சிருக்கானுவலே. இவனை விளங்குவானுவலா”. பேசிக்கொண்டே அவர் பங்குக்கு அவரும் கணக்கெடுத்தார். அவருக்கு உடனே கலெக்டர் ஆபிசுக்கு கணக்கு சொல்லுனும் . கலெக்டர் சி.டி.ஐ.ஓங்கலே விளங்காதவன் . இந்த மாதிரி உழைப்பாளிகளுக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளா வந்து நிற்பான். என்பது நன்றாக தெரியும்.
குடும்ப மார்கள் ஓடி வந்தனர். தங்கள் வீட்டில் உள்ள கஞ்சி, கருவாட்டு குழம்பு எல்லாவற்றையும் கொண்டு வந்தார்கள். அய்யா நாடக்கமாரு சாப்பிட்டாவலோ. இல்லையோ தெரியலையே. பிஞ்சு குழந்தைகள் என்ன நிலமையில இருக்கோ என அங்கலாய்த்தனர்.
சிறு குழந்தைகளை கூப்பிட்டு அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க ஆரம்பித்தார்கள். வீட்டில் இருந்து அவுல், பொறி எல்லாம் கொண்டு வந்தார்கள்.
“அய்யோ காலையில அவுல் கொண்டு வந்து நாடாரு கிட்ட பானக்கருப்பட்டி வாங்கி அவுக வீட்டு பிள்ளைகளுக்கும் கொடுத்து நம்ம வீட்டு பிள்ளைகளையும் சாப்பிட வைக்கணுமுன்னு நினைச்சேனே. அதுக்குள்ள எல்லாத்தையும் எரிச்சு புட்டானுவலே படுபாவி பயலுவ. அவனுவ விளங்குவானுவலா. தீ வைச்ச கை குட்டம் பத்தித்தர்ன போவும்” சாபம் போட்டாள் வள்ளியம்மாள் குடும்பச்சி.
பிள்ளைகளிடம் சாப்பிட அவுலை கொடுத்தனர்.
“வெங்கப்படாம சாப்பிடுங்கய்யா. வீடு போச்சேன்னு கவலை பாடதீங்க. எங்க சேரியில நீங்க எல்லோரும் தங்கிடலாம்”. என அழைத்து நின்றனர்.
பொன்னு நாடார் மனைவி ஒரு ஓரத்தில் இருந்து ஒப்பாரி வைத்தார்.
ராஜ துரை வந்தான்.”யக்கோ. ஜானகி அக்கா. அழக்கூடாது. நீ ஏன் அழுத. ஒரு உயிர் போகல கள்ளவாண்டசாமி நம்மள காப்பாத்தி தந்திருக்காரு. மச்சான் பொருளை சம்பாத்தியம் பண்ணிகிடுவாரு. நீ அழாத. இன்னையோட இதுக்கு ஒரு முடிவு கட்டணும்”.
“என்ன அய்யா செய்ய போறே. அந்த பயலுவல கொலை பண்ண போறீயா?”.
“ம். கூம்”. இருபுறமும் தலையாட்டினான்.
“அப்பும் அவனுவ வீட்டுக்கும் இதுபோலபோய் தீ வைக்க போறீயா?”.
“ம்.கூம்”. மேலும் தலையாட்டினார்.
“அப்போ என்னத்தான் செய்யப்போறே”.
“நம்ம கூட்டம் சான்றோன் கூட்டம். பலி வாங்குற குணம் நமக்கு கிடையாது. ஆனா சாதிக்கிற கூட்டம். இனிமே எவனும் நம்ம வீட்டில தீ வைக்க கூடாது. அதுக்காக ஒரு திட்டமே வைச்சி இருக்கேன்”
“அதுக்கு என்ன செய்ய போறே. ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி போய் வீடு கட்ட சொல்றீயோ”. ஜானகி கண்ணை உருட்டிக்கொண்டு கேட்டாள்.
“ம். கூம். இதே இடத்தில . இந்த இடத்தில் இன்னும் ஆறு மாதத்தில நாம் வீடு கட்டுறோம். அந்த வீட்டை ஒரு மயிராண்டியும் அழிக்க முடியாது”. தீர்க்கமாக சொன்னான் ராஜ துரை.
ஜானகிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் ராஜ துரை பேசும் பேச்சு அவளுக்கு ஆறுதலை தந்தது.
அப்போது நடைபயணமாக ஒரு அயலூர் கூட்டம் அந்த இடத்துக்குள் வந்தது.
அவர்கள் அனைவரும் ஜெபகூட்டம் நடத்துவர்கள் போலவே இருந்தனர். அவர்க-ளுக்கு பின்னால் இரண்டு மாட்டு வண்டியும் வந்து நின்றது. அதில் நிறைய பாத்திரங்களும் சில பொருள்களும் இருந்தன.
அவர்களை கேள்வியாக பார்த்தனர் மக்கள். என்ன அப்படி பாக்கிய. நாங்க கொங்கராயகுறிச்சியில தான் நேத்து ராத்திரி இருந்தோம். இங்க தீ பிடிச்சு எரியிறதை பார்த்தோம். என்ன ஏதுன்னு புரியலை. எதுவும் வைக்கப்படப்பு எரியுதோன்னு இருந்தோம். காலையில கேள்வி பட்டோம். அதனால நாங்க உங்களுக்கு உதவ வந்திருக்கோம்.
ராஜதுரைக்கு அவர்கள் வித்தியாசமாக இருந்தனர். “நீங்க யாரு. எங்களுக்கு உங்களுக்கும் என்ன சம்பந்தம். இதோ இருக்கிறார்களே இந்த சேரி மக்கள். இவர்கள் எங்கள் சகோதர்கள். அவங்களுக்கு ஒண்ணுன்னா நாங்க நிப்போம். எங்களுக்கு ஒண்ணுன்னா அவங்க நிப்பாங்க. ஆனால் நீங்க யாரு அய்யா. உங்களுக்கும் எங்களுக்கு என்ன தொடர்பு,”
ராஜ துரையிடம் வந்தனர். “நாங்கள் பாயைங்கோட்டையில இருக்கிற கிருஸ்தவ மிஷினர் ரேணியஸ் அய்யரோட ஊழியர்கள்”
ராஜதுரை அவர்களை ஏறிட்டு பார்த்தான்.
“நாங்க கொங்கராயகுறிச்சியில கிறிஸ்தவ ஆலயம் கட்டிக்கிட்டு இருக்கோம். எங்க அய்யர்வால் ரேணியஸ் தான் அதுக்கு எல்லா ஏற்பாடும் செய்து கொடுத்தார். அவர் ஏற்பாடில் தான் நாங்க வேலை செய்யிறோம்”
ரேணியஸ் அய்யரை பற்றி ஏற்கனவே கேள்வி பட்டிருக்கிறான் ராஜ துரை. அவர் ஒரு கிறிஸ்தவ மிஷனரி தாமிரபரணி நதிக்கரையில் நிறைய கோயில்கள் பள்ளிகூடம் கட்டியிருக்கிறார். இந்த பகுதியில் கிறிஸ்தவர்களாக மாறிய நாடார்களை கட்டி வைத்து அடித்தனர் ஆதிக்க சாதிகள். சில குடியிருப்புக்கு தீ வைத்தனர். அதையெல்லாம் கண்டு வெகுண்டு எழுந்தவர். பாதிக்கப்பட்ட நாடார் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து, அவர்களுக்கு பாதுகாப்பு தந்தவர் ரேணியஸ் அடிகளார் தான். அவரை மக்கள் பாசமாக ரேணியஸ் அய்யர் என்று கூப்பிடுவார்கள். கொங்கராயகுறிச்சி ஊர் தாமிரபரணி ஆற்றில் மணல் சூழ்ந்த ஒரு அருமையான கிராமம். இந்த ஊரில் ஆற்று வெள்ளம் புகுந்து இங்கு வாழ்ந்த பனையேறி கிராமமே வெள்ளத்தில் மூழுகி தத்தளித்தது. குடியிருப்புகள் அழிந்தது. அந்த குடியிருப்புகளை மீண்டும் உருவாக்கி வானுயற கோபுரம் கட்டிக்கெர்ணடிருப்பவர் ரேணியஸ் அய்யர்தான். அவரிடம் தொண்டாற்றுபவர்கள் இவர்கள். நிச்சயம் இவர்களிடம் கள்ளம் கபடம் இருக்காது. நமக்கு உதவுவார்கள் என்ற எண்ணம் தோன்றியது. ஆனாலும் ஊர் மக்களிடம் கேட்காமல் எதுவும் செய்ய முடியாது.
எனவே அமைதியாக இருந்தான்.
இதற்குள் உலக்கநாடார் வந்தார். “என்னய்யா நீங்க எங்கிருந்து வாரீய்ய”.
“அய்யா கொங்கராயகுறிச்சி சர்ச்சு கட்டுற வேலையை பாத்துக்கிட்டு இருக்கோம். நேத்து ராத்திரி தீ பிடிச்சி எரிஞ்சதை பாத்தோம். அதான் எங்களால வேண்டிய உதவி செய்ய வந்திருக்கோம்”. என்றார் அதில் மூத்தவர்.
உலக்க நாடார் கூப்பிட்டார், “முத்து நாடார். யோவ் மச்சான் இங்க வாருமே. நமக்கு எதுவும் வேண்டாம். அவியயெல்லாம் உதவி செய்யுறோமுன்னு சொல்லுவாவ. வீடு கட்டிதாரேன் பள்ளி கூடம் கட்டிதாரேன், சொல்லுவாவ. உடனே நீங்க எங்க மதத்துக்கு வாங்கன்னு கூப்பிடுவாவ. தேவையாவே. அவிய வந்தாவுலா. பாத்தாவுலா. ஜெபம் பண்ணினாவுலான்னு போகச்சொல்லும் வே”. என்றார்.
ராஜ துரைக்கும் அது தான் சரியென்று பட்டது. கள்ளவாண்ட சுவாமிக்காக வந்த சண்டை. சாமி நமக்கு ஏதோ உதவ போறாவ. அதனாலத்தான் இந்த சம்பவம் நடந்து இருக்கு. இப்படி இருக்கும் போது நாம எதுக்கு மதம் மாறணும் தேவையில்லை.
ராஜ துரை அவர்களிடம் வந்தான்.
“யய்யா. நீங்க எங்களை தேடிவந்தது ரொம்ப சந்தோசம். எங்களை அப்படியே யோசிக்க விடுங்க. நாங்க யோசிக்கிறோம். இதுல இருந்து எப்படி மீளன்னு யோசிக்கோம். உங்க உதவி தேவைன்னா கூப்பிடுதோம்”. என்றார்.
சிரித்தார் பெரியவர், “என்ன தம்பி நாங்க உங்களை மதம் மாறச் சொல்றீவோமுன்னு நினைக்கியலா. அப்படியெல்லாம் சொல்ல மாட்டோம். நாங்களும் பனையேறி கூட்டம் தான். நாங்களும் முதலூர் , அன்பின் நகரம், கடாட்சபுரம், மெஞ்ஞானபுரம் போன்ற ஊரை சேர்ந்தவியத்தான். எங்க ஊருல நாங்க கிறிஸ்தவமதத்துக்கு மாறி இருக்கோம். ஆனா அதுக்காக நாங்க உங்களை மதம்மாறச்சொல்ல மாட்டோம். மனிதாபிமானமா உங்களுக்கு உதவ சொந்த காரவியளாத்தான் வந்திருக்கோம். நாங்க எங்க சொந்த காரவியளுக்கு உதவ விட மாட்டியலா?”
ராஜ துரை அமைதியாக இருந்தான்.
ரேணியஸ் அடிகளாரை பற்றி இவனுக்கு நன்றாக தெரியும்.
ஐரோப்பிய நாட்டில் இருந்து தமிழகம் வந்து இங்குத் தமிழ் கற்றார். அதற்கு பின் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார். இதற்காக பட்டி தொட்டியெல்லாம் குதிரையில் அலைந்து திரிந்தவர். தாமிரபரணி கரையைச் சுற்றி உள்ள கிராமங்களில் பள்ளிக்கூடம் திறந்தவர். இவர் திருப்பணி, தமிழ்ப்பணி. கல்விப் பணியாற்றி யவர்.
இவர் குதிரையில் பாபநாசம் போகும் போது திருநெல்வேலியில் பார்த்த நெல்லையப்பர் ஆலயம் போல ஒரு ஆலயம் கட்டவேண்டும் என்று நினைத்து ஊசி கோபுரம் கட்ட அடிக்கல் போட்டிருக்கிறார்.
நெல்லை அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுகிறார்.. தாமிரபரணி நதிக்கரையில் சீவலப்பேரியில் ஆரம்பப்பள்ளி ஒன்றை அமைத்தவர்.
திருநெல்வேலிக்கு அவர் வரும் போது 32 பள்ளிகள் இருந்தன. அவரது முயற்சியில் 68 பள்ளிகளாக உயர்ந்தன. குதிரையில் வந்து ரேனியஸ் அய்யர் அம்பாசமுத்திரம். வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி போன்ற பகுதியில் ஆலயங்கள் உருவாக காரணமாக இருந்தார். கல்விப் பணி மூலமே மதத்தைப் பரப்ப இயலும். அதே சமயத்தில் தாழ்ந்த சமுதாய மக்களை நல்ல நிலைக்குக் கொண்டு வரலாம் என்பதை மனதில் கொண்ட ரேனியஸ் அடிகளார் பள்ளிகளை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்கு வகித்தார்.
அந்தப்பள்ளிக்கு அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவுக்குள் ஐக்கியமானவர்களை ஆசிரியர்களாக நியமித்து அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றினார். அதற்காக ஆசிரியர் பயிற்சி பள்ளியும் துவங்கினார். பெண்கள் சமுதாயம் ஆசிரியராக உயரவும் ரேனியஸ் அடிகளார் முதலில் ஏற்படுத்திய ஆசிரியர் பயிற்சி பள்ளிகளே முக்கியக் காரணம். இதனால் தான் நாடார் பெண்களும் ஆண்களும் கல்வியில் முன்னேறி இருக்கிறார்கள். ஆசிரிய பணியிலும், கிறிஸ்தவ ஊழியத்திலும் முன்னணியில் இருக்கிறார்கள். இவர் முயற்சியில் பல புதிய குடியிருப்பு உருவாகி இருக்கு.
களக்காடு ஏர்வாடி இடையே உள்ள மாவடி நெருஞ்சி விளை, தோப்பு, நல்ல மரம் ஆகிய கிராமங்களில் தனி கிறிஸ்தவ கிராமம் உருவாக்க எண்ணினார் ரேனியஸ் அடிகளார். இதற்காக ஜெர்மன் நாட்டில் உள்ள ரஷ்யா மாநில ஆளுநர் டோனாவுக்கு எழுதிக்கேட்டு அதன் மூலம் கிடைத்தத் தொகையைக் கொண்டு கிறிஸ்தவ புது கிராமம் ஒன்றை உருவாக்கினார். அதற்கு ஆளுநர் டோனா பெயரிலே டோனாவூர் எனப் பெயர் வைத்தார் அதுவும் ராஜ துரைக்கு நன்றாக தெரியும்.
நெடுவிளை அம்மன் கோவில் திருவிழாவின் போது பூசாரி மகனைக் கருநாகம் தீண்டிவிட்டது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தச் சிறுவனை ரேனியஸ் அடிகளார் முதலுதவி செய்து காப்பாற்றினார். அதன் பிறகு அங்கு நற்செய்தியைப் போதித்தார். பின் நெடுவிளை என்ற சிறுபட்டி கிராமத்திற்கு மெஞ்ஞானபுரம் என்று பெயர் வைத்தார்.
வசவப்பபுரத்தில் ரேனியஸ் அடிகளார் வந்த போது அங்குள்ள பிராமணர்கள் எங்கள் ஊருக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் கல்விக்கூடம் வேண்டும் என்றனர்.
அங்கு திண்ணைப் பள்ளிக்கூடம் ஆரம்பித்து அதற்குச் சாஸ்திரி என்பவரை ஆசிரியராக நியமித்தார். எல்லாமே சரிதான்.
பூவாணி பக்கத்தில் உள்ள கிராமம் தீ வைத்து கொழுத்திய போது, அதில இருந்து தப்பித்து வந்தவர்களுக்கு சாந்தி நகர், சமாதான புரம் உருவாக்கி வைத்தவர் இவர்தான். அதற்காக இன்று எரிந்து கொண்டிருக்கும் இந்த ஊருக்கு வந்து இருக்கிறார்களோ?
“ஆனால் அதற்காக நாம் மதம் மாற முடியுமா?”
யோசித்தான் ராஜ துரை.
ராஜதுரை யோசிப்பது அனைவருக்கும் நன்றாக தெரிந்தது. அவன் தான் அந்த ஊரில் ஒரளவு விவரமாக இருக்கிறான் என்பதும் வந்திருந்தவர்களுக்கு தெரிந்தது.
பெரியவர் பேசினார், “தம்பி எரியிற வீட்டில் பிடுங்கிற கூட்டம் இல்லை நாங்க. நாங்க உங்களுக்கு உதவ தான் வந்திருக்கோம். உங்களுக்கு நாங்க முகாம் போட்டு சாப்பாடு கொடுக்க போறோம். தயவு செய்து மதங்களை காட்டி எங்களை துறத்திடாதீங்க. எங்க அப்பாவும் உங்க மதம்தான் நாங்க இப்ப தான் மதம் மாறியிருக்கோம். எங்களுக்கு மதத்தோட, மனிதாபிமானம் தான் ரொம்ப முக்கியம்”.
அனைவரும் அமைதியாக இருந்தனர்.
அதற்குள் வந்தவர்கள் வண்டியில் இருந்து பெரியபெரிய அட்டை பெட்டியை இறக்கினார்கள். அதில் இருந்து பல பொருள்களை எடுத்தனர். டெண்ட் கொட்டகை போட ஆரம்பித்தார்கள். அவர்கள் கொண்டு வந்திருந்த பாத்திரத்தில் ஒரு பக்கம் வைத்து உலை வைக்க ஆரம்பித்தனர். தலைச்சுமையாக கொண்டு வந்திருந்த அரிசி பருப்பு கொண்டு கூட்டாஞ்சோறு உருவாக்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை அருகில் உள்ள சேரி மக்கள் செய்ய ஆரம்பித்தனர். இதற்கிடையில் திடமான ஆண்கள் அருகில் இருந்து உடை விறகுகளை கொண்டு வந்து போட்டனர். ஆங்காங்கே மிஞ்சிய கருப்பட்டியை எடுத்து வந்து முதலில் கடுங்காப்பி போட்டு குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தனர்.அதன் பின் குழந்தைகளையும் தாய்மார்களையும் அந்த டெண்ட் கொட்டகைக்குள் உட்கார வைத்தனர். பல உடைகளை எடுத்து வந்து ஒவ்வொருவருக்கு மாற்று துணி கொடுக்க ஆரம்பித்தனர்.
எதுவுமே இல்லை என்று நடுக்காட்டில் விடப்பட்டவர்களுக்கு ஏதோ உறவுகள் வந்தது போலவே இருந்தது. சாதி மதம் பேதமின்றி அவர்களுக்கு உதவி கிடைத்தது. ஆனால் இதையெல்லாம் பக்கத்து அக்கிரஹாரத்தில் இருந்த சிவராமன் அய்யருக்கு தெரியவந்தது. இதனால் கோபம் அதிகரித்தது.
இதற்கிடையில் கால் உடைந்து கிடந்த காவல்காரன் ஒளிந்து கிடந்து, அதிகாலையில் அய்யர் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அவன் வலி தாங்க முடியாமல் “ஆத்தோ” என அபயக் குரல் கொடுத்துக்கொண்டிருந்தான்.
“கத்தாதவே ஒரு கதையையும் ஒழுங்கா செஞ்சியளாவே. அவன் கிட்டே காலை கொடுத்து எங்கப்பன் குதில இல்லைன்னு காட்டிட்டு வந்திருக்கிய. யாரு தீ வைச்சான்னு அவன் கிட்ட பதிவு பண்ணிட்டு வந்திருக்கவே. உன்னை என்ன செய்ய. முறுக்கு மீசை வச்சா மட்டும் போதாது. அறிவும் வேலை செய்யணும்.
“சாமி. ஏசாதிய சாமி. எனக்கு வலி தாங்க முடியலை. என்னை காப்பாத்துங்கள். இல்லை உங்க கையால அரளி விதை அரைச்சு தாங்க குடிச்சிட்டு செத்து போறேன்”.
“அவனை கொல்லுங்கவே. அம்மி கல்லை தலையில தூக்கி போட்டு கொல்லுங்கவே. இவாளுவ அரளி விதை ஒரு கேடா” அய்யருக்கு கோபம் வந்தது.
“சாமி உங்களுக்கு ஏண்டுகிட்டு தான போனோம் . அதுக்கு எங்களை கொல்ல போறியளாக்கும். இது உங்க பகைத்தான். எங்களுக்கும் அவனுவளுக்கும் எந்த பகையும் கிடையாது. உங்கள கை கூலியா போய் நாங்க மாட்டிக்கிட்டோம். எங்களை யாரு சாமி காப்பாத்துவா”. மற்றவர்களுக்கும் கோபம் வந்தது.
அவர்களின் கோபத்தினை பார்த்தவுடன் சிவராமன் அய்யர் தனது சத்தத்தினை குறைத்து கொண்டார்.
“என்னை என்ன செய்ய சொல்லுத. இவன் காலில முறிவு ஏற்பட்டுச்சோ, சுளுக்கு ஏற்பட்டுச்சோ தெரியலை. அதைசரி பண்ணணுமுன்னா, பண்டாரவிளை நாடார் கிட்டே தானே போணும். நாம இந்த ஊரு நாடாருக்கு கிட்டே சேட்டை பண்ணிட்டு, அவன் ஏற்படுத்தின சுளுக்கை எடுக்க அந்த சாணப்பயலுவ கிட்டேல்லா போணும். அதுதான்வே எனக்கு எரிச்சலா இருக்கு”.
“சாமி ஒரு பழமொழி சொல்லுவா. உங்களுக்கு தெரியுமா? கோன கையி காரன் நாடார் வீட்டுக்கு போனா நல்ல கையா மாறும்”. மீசையை முறுக்கிய படி காவலர் ஒருவன் பேசினான்.
“எப்படியும் இவனை பண்டார விளைக்குத்தான் கொண்டு போணும்”.
“எப்படி கொண்டு போவிய”.
“அந்த ஊருல இருந்து எப்படி தூக்கிட்டு வந்தோம் அந்தமாரி தொட்டில் கட்டித் தான் கொண்டு போணும்”
“சரி அங்க போய் களரி விளையாட்டுக்காரன்தான் காலை உடைச்சிருக்கான்னு கேள்வி கேட்டா என்ன செய்வீவவே”.
“அப்படியெல்லாம் கேட்க மாட்டாவ. அவுக எல்லாம் மானம் மரியாதைக்கு கட்டு பட்டவிய. நம்மள மாதிரி இல்லை சாமி. எதிராளியே வந்தாலும் வைத்தியம் பாத்து சரியாக்கி விட்டுறுவாவ”.
அய்யருக்கு சுர் என்று கோபம் வந்தது. “அப்படின்னா நாம எல்லாம் மானம் மரியாதை கெட்டவியன்னு சொல்லுதீயோ”.
அவர் கண் சிவந்தது.
“இல்லை சாமி”.
என் கண்ணுல விழிக்காதீங்க. ஓடுங்க, அவனை தொட்டில் கட்டிட்டு போவியளோ, பாடை கட்டிட்டு போவியளோ. எனக்கு தெரியாது. என் கண்ணுல முழிக்காதீங்க”.
“முழிக்கல.ஆனா செலவுக்கு பணம் தரணுமுல்லா. பணம் இல்லாம நாங்க எப்படி போவ முடியும்”
கோபத்துடன் உள்ளே சென்ற சிவராமன் அய்யர் பணத்தினை கொண்டு கொடுக்கிறார்.
“சாமி. அந்த ஊருல கிறிஸ்தவ மிஷினரிங்க வந்து கொட்டகை போட்டு இருக்காவ. சோறு பொங்கி எல்லோருக்கும் கொடுக்காவ”.
“ஆமா. கிழிக்காவ. இன்னும் கொஞ்ச நேரத்தில போலிசும் வருவா. எல்லோரை பொறுக்கி போட்டுட்ட போவா. போங்கவோய். ஓடிப்போய் எங்கயாவது மறைஞ்சு தொலைங்க வே.
பயத்துடனே அங்கிருந்து தொட்டில் கட்டி கால் உடைந்த காவலாளியை தூக்கி கொண்டு பண்டார விளை நோக்கி நடையை கட்டினர்.
******
ராஜதுரை உடைந்து போய் அமர்ந்திருந்தான்.
100 வீடு இருந்த இடம். அரை மணி நேரத்தில் குப்பை மேடு ஆகி விட்டது. சாம்பல் நிறைந்த பூமியாகி விட்டது.
சந்தோசம், உழைப்பு , உறக்கம் இது தான் உலகம் என கழிந்த அந்த புண்ணிய பூமி 10 நிமிடத்தில் ஆந்தைகள் அலரும் கூடாரமாகி விட்டது.
ராஜதுரை அமைதியாக நடந்தான். வந்த மக்கள் போட்டிருந்த கூடாரத்துக்குள் நுழைந்தான்.
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மக்கள் புலம்பிக்கொண்டேஇருந்தார்கள். அனைவரும் அனைத்தையும் ஒரே நேரத்தில் தொலைத்து இருந்தார்கள்.
ஊழியக்காரர்கள் கடுங்காப்பி போட்டுக்கொண்டு வந்து, ஒவ்வொருவரிடமும் கொடுத்தார்கள்.
காப்பி சாப்பிட ஒருவருக்கும் பிடிக்க வில்லை. போர்வை , தலையணை என ஒவ்வொன்றாக தனித்தனியாக கொண்டு கொடுத்தார்கள் மிஷினரிகள். அதையெல்லாம் பெற்றுக்கொள்ள அந்த மக்களுக்கு மனம் வரவில்லை.
தாங்கள் வைத்திருந்த பொருள்களை விட இது விலை கூடிய பொருள்கள் தான். ஆனாலும் கவலை இல்லை. தாங்கள் உழைத்த காசில் வாங்கிய அந்த பொருள்கள் எல்லாம் எரிந்து சாம்பலாகி விட்டது. அது தான் மனதுக்கு பெரிய மன உழைச்சலாக இருந்தது.
மாரியம்மை அக்காள் கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்ந்து ஒரு சின்னாலம் பட்டு வாங்கி வைத்திருந்தாள். ஒரே ஒரு நாள் கோயில் கொடைக்கு மட்டும் உடுத்தியிருந்தார். பார்த்தவர்கள் எல்லாம் நல்லா இருக்கு. நல்லா இருக்கு என்று கூறினார்கள். அதன் பிறகு அவள் அதை உடுத்தவே இல்லை. நல்லா மடிச்சி டிரங் பெட்டிக்குள்ள வச்சிருந்தார். அந்த பட்டு எரிந்து போய் இருந்தது. இதைபோலவே ஒவ்வொரு புடவையிலும் துணியிலும் ஒவ்வொரு கனவுகள் இருந்தன. அந்த கனவுகள் எல்லாம் நெருப்பில் பொசுங்கி போய் விட்டது.
நாம இந்த மண்ணில் பனையேறியாக பிறந்தது பாவமா?. என்ன செய்தோம். எங்க சாமியை கொடுக்க மாட்டோம் என்று சொன்னோம். அதை தவிர என்ன தப்புசெய்தோம். எத்தனை பேருக்கு பனை விடிலிக்கு வந்தால் தர்ம பதினிதானே கொடுப்போம். பசி என்று வந்தவருக்கு இல்லை என்று சொன்னதே கிடையாதே. அதற்குத்தான் இந்த பரிசா.
ராஜதுரை கால்கள் பின்னியது. யானையின் பலம் யானைக்கே தெரியாது என்பார்கள். அதுபோலத்தான் இந்த இனத்தவர்கள் பலம் அவர்களுக்கே தெரியாமல் தான் உள்ளதா? இந்த கூட்டம் உழைப்பில் காட்டும் வேகத்தினை எதிரி மீது காட்டினால் அவர்கள் தாங்குவார்களா?
குட்ட குட்ட குனிவதால் தான் நம்மை மேலும் மேலும் குட்டுகிறார்கள்.
பனை ஓலையில் நாம் பாய் முடைகிறோம், பெட்டி முடைகிறோம். வர்ணம் தீட்டி அதை பெரிய பணக்காரர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பாய் முடைபவர் வீட்டில் படுக்க பாய் இருக்காது.
எத்தனை காலம் தான் இந்த சமூகம் இந்த நிலையில் வாழ்வார்கள். எப்போது மாறும் காலம்.
ராஜதுரை அங்குள்ளவர்களை பார்த்த காரணத்தினால் மனது வெம்பினான்.
கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
அதை விட்டு வெளியே வந்தான்.
ஒரிடத்தில் சிறு குழந்தை ஒன்று அழுது கொண்டே நின்றது.
கிட்டே போனான். “என்ன பாப்பா ஏன் அழுறே”
“மாமா என் பொம்மை வேணும்”.
“என்ன பொம்மை”
“திருச்செந்தூர் போகும் போது எங்க அப்பா வாங்கி கொடுத்தாவ. அந்த பொம்மை வேணும்”.
ராஜ துரைக்கு கண்ணீர் மூட்டியது. “பொம்மையை எப்படி மீட்டுக்கொடுப்பேன். நெருப்போடு நெருப்பாய் போய் விட்டதே”.
இந்த குழந்தை பொம்மையையே உயிராக அல்லவா நினைத்து இருக்கு.
“பாப்பா உனக்கு வேறே ஒண்ணு வாங்கி தாரேன்”. ராஜதுரை குழந்தை அருகில் மண்டியிட்டு உட்கார்ந்தான்.
“வேண்டாம். எனக்கு அந்த பொம்மை தான் வேணும்”.
அடம்பிடித்தது குழந்தை. ராஜதுரைக்கு மனம் கேட்கவில்லை. அப்போது அங்கே வந்த குழந்தையின் தாய் அந்த குழந்தையை அடித்தாள்.
“இருக்க இடமே இல்லாம போயிட்டு, தெருவில கிடக்கோம். பொம்மை வேணுமாம் பொம்மை”.
குழந்தை அழுகையை விட வில்லை. அந்த பிள்ளையை தர தரவென்று இழுத்துக்கொண்டு சென்றாள் அந்த தாய்.
“அக்கா வேண்டாம். பிள்ளைய அடிக்காதீங்க”. ராஜதுரையின் சத்தம் அந்த தாயிக்கு கேட்கவில்லை.
ராஜதுரை அருகே ஒரு மிஷினரி வந்தார். “தம்பி காப்பி குடிங்க. இன்னும் கொஞ்ச நேரம் ரவை உப்புமா ரெடியாயிடும்” என்றார்.
அவரை பார்த்தான். அவர் யாரோ எவரோ கரிசனமாய் கொடுக்கிறார். வேண்டாம் என்று சொன்னால் அவரை அவமதித்த மாதிரி இருக்கும். வாங்கி கொண்டான்.
“அய்யா, சொன்னா தப்பா நினைக்க கூடாது. நேத்து இரவு சம்பவம் நடந்திருக்கு. விடிய வந்திருக்கியளே”.
சிரித்தார். “தம்பி இப்ப நிறைய இடத்தில குடியிருப்புக்கு தீ வைக்கிறது சகஜமாயிட்டு. நிச்சயம் பாதிக்கப்படுறது இந்த மாதிரி அப்பாவி ஜனங்கத்தான். அவியளுக்கு உதவவே இது மாதிரி ஒரு அமைப்பு வைச்சிருக்கோம். இராத்திரி எங்கேயாவது நெருப்பு சுவாலை தெரிஞ்சுதுன்னா மறு நாள் காலையிலேயே அந்த ஊருக்கு உதவி பண்ண போயிருவோம். எங்க ஊழியத்தில தேவையானவருக்கு வயிற்று பசியை போக்கிற திட்டமும் ஒண்ணாகும்”. என்றார்.
எவ்வளவு பெரிய பணி. இந்த பணியை எவ்வளவு அருமையாக செய்கிறார்கள்.
“இன்னும் கொஞ்ச நேரத்தில் ரேணியஸ் அய்யர் வந்திருவார். அவரு கூட மருத்துவ குழுவும் வரும். ஒரு வேளை கலெக்டரை கையோடு கூட்டிட்டு வந்தாலும் வந்திருவாரு”. என்றார்.
அவர் சொன்ன மாதிரியே 1 மணி நேரத்தில் வெள்ளை குதிரை ஒன்றில் அமர்ந்து மிடுக்காய் ரேணியஸ் அய்யர் முன்னால் வர மருத்துவ குழு, பின்னால் கூட்டமாய் குதிரைகளில் வர, அனைவரும் அந்த இடத்துக்குள் நுழைந்தனர்.
குதிரையில் இருந்து ரேணியஸ் அய்யர் இறங்கினார். நல்ல வளர்த்தியாக இருந்தார். ஒல்லிய தேகம், முகத்தில் தாடி மறைத்து இருந்தது. வெள்ளை அங்கி அணிந்து இருந்தார். கறுப்பு கயிறை இடிப்பில் கட்டியிருந்தார். வேகமான இறங்கியவர் டெண்ட் கொட்டகை நோக்கி வந்தார்.
“என்னப்பா எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்திட்டியளா?”
“கொடுத்துகிட்டு இருக்கோம் சாமி”
“தீ புண் யாருக்காவது இருக்கா”
“இல்லை சாமி. எல்லாரும் இயேசு புண்ணியத்தில காயமில்லாம தப்பிட்டாங்க”.
“ம். கூம். யாரு செஞ்ச காரியம் இது, யாருக்காவது தெரியமா?”
அனைவரும் என்ன சொல்வது என்பது தெரியாமல் அதிர்ச்சியில் நின்றனர்.
(முத்துகிளி தொடர்ந்து கூவுவாள்)


