தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரையில் நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான மகரநெடுங்குழைக்காதர் கோயிலும் நவகைலாயங்களில் ஒன்றான சிவன் கோயிலும் உள்ளது.
ஆன்மீக சிறப்பு வாய்ந்த தென்திருப்பேரைக்கு திருவிழா காலங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன் ஆகியோரது உத்தரவின் பேரிலும் பேரூராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்த் ஆலோசனையின் படியும் தென்திருப்பேரை பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி குப்பை இல்லா நகரத்தை உருவாக்குவதற்காக, என் குப்பை என் பொறுப்பு என்ற அடிப்படையில் வீடு தோறும் பொதுமக்களிடம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சொல்லில் மட்டுமல்ல செயலிலும் என்ற அடிப்படையில் தென்திருப்பேரையில் ஒட்டுமொத்த மெகா தூய்மை பணி நடந்தது.
தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் மெகா தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார்.
ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம் ஆகிய 3 பேரூராட்சி அலுவலகங்களில் பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மெகா தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
தென்திருப்பேரை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசு, துணை தலைவர் அமிர்த்தவள்ளி, கவுன்சிலர் ஆனந்த், இளநிலை உதவியாளர் சேக் அகமது, மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு மெகா தூய்மை பணியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கியதுடன் அப்பகுதி மக்களிடம் குப்பை இல்லா நகரை உருவாக்கி சுகாதாரத்தை பேணிக் காப்போம் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


