தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளராக இருந்த சாருஸ்ரீ திருவாரூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக தினேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் வந்த அவரை மாநகராட்சி அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் தூத்துக்குடி மாநகராட்சியின் ஆணையாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் அனைத்திற்கும் எம்பி, அமைச்சர், மேயர் இவர்களுடன் இணைந்து முன்னுரிமை கொடுப்பேன். மக்களுக்கு மருத்துவரீதியாக தேவைப்படும் உதவிகளை மாநகராட்சி நிர்வாகம் நிச்சயம் செய்யும். அனைவருமே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் அதிகமான நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
தினேஷ் குமார் 2017-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வானவர். திண்டுக்கல் மாவட்டம் கூடுதல் ஆட்சியராக பணியாற்றிய வந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளார்


