அருகில் வந்து அமர்ந்த ராசு குட்டி தலை முடியை வருடினாள்ஆச்சி. தொடர்ந்து கதை சொல்ல ஆரம்பித்தாள்.
“ஏலே ராசுக்குட்டி. அந்த காலத்தில நம்ம ஊருல இருந்து நிறைய பேரு பம்பாயிக்குத்தான் வேலைக்கு போவாவ”.
“அப்போ எங்க அய்யன் கூட அங்கத்தான் வேலைக்கு போனாவ. அவுக வேலைக்கு போவும் போது எங்க அம்மா மூனு நாளைக்கும் 9 வேளைக்கு புளியோதரையும் கடலை துவையலும் அறைச்சு கொடுப்பா. எங்க அய்யனும் அதை வாழை இலையில பொட்டனம் கட்டிக்கிட்டு பாம்பாயிக்கு ரயிலில ஏறிப் போவாவ”.
“அவுக பம்பாய் போவும் போது அங்க ரயில் தண்டவாளம் போடுத வேலை நடந்துக்கிட்டு இருந்துருக்கு. தமிழக் காரங்க உழைப்புல ரொம்ப கெட்டிலே ராசுக்குட்டி. இங்க மட்டுமில்லை, சிலோன், பர்மா, ரங்கூன் ஊருக்கெல்லாம் கப்பலுல போய் வேலை செய்வாவ. சிலோனுல நிறைய தேயிலை தோட்டத்தை இவுக தான் உருவாக்குனாவ. அப்படித்தான மும்பையில் ஐந்து தீவை ஒண்ணாக்கி இப்போ இருக்கிற பம்பாய் பட்டணத்தை உரு£வாக்கினாவ. அதனாலத்தான் வெள்ளை கார துரைக இந்த மாரி கஷ்டமான வேலையை நம்ம ஊருக்காரனுவ கிட்ட நம்பிக்கையோடு கொடுத்தாவ . அதுவும் இங்கீலிஷ்காரங்க நம்ம நாட்டை ஆளும் போது போது பம்பாயில ரயில் தண்டவளர்ம் போட நம்ம ஊரு காரவங்களத்தான் பயன்படுத்துனாவ”.
ராசுக்குட்டி சிரித்தான். “நான் பாட புத்தகத்தில படிச்சிருக்கேன். இந்தியாவில முதல் முதலில ரயில் தண்டவாளம் மும்பையில தான் போட்டுருக்காவ”.
“ஓ. படிச்சியா?”.
“ஆமாம் ஆச்சி. பம்பாயில இருந்து தானா வரைக்குத்தான் முதல் முதலில ரயில் போக்குவரத்து ஆரம்பிச்சிருக்காவ. அதுக்கு ரயில் திட்டம் நம்ம சென்னை பட்டணத்தில தான் உருவாக்கியிருக்காவ. இதையும் நான் படிச்சிருக்கேன்”.
பாட்டி ராசுகுட்டியின் கன்னத்தில் முத்தமிட்டால், “என் ராசா. நல்லா படிச்சிருக்கே . இப்படித்தான் இருக்கணும். நாங்க தான் முட்டாளா இருக்கோம். நீ. நல்லா படிக்கணும். பெரிய கவர்னரா வரனும். அதை தான் பாப்பாத்தி சொல்லியருக்கா”.ஆச்சி சிரித்தாள்.
திரும்பவும் குழம்பம் தீரவில்லை ராசுக் குட்டி வுக்கு.
“ஆச்சி பாப்பாத்தியக்கா பேச்சை எடுக்காதே. அவ என்னை கெட்ட வார்த்தை சொல்லி திட்டிப்புட்டா”. ராசுக்குட்டிக்கு கண்சிவந்தது.
“இல்லடே. அவ உன்னை திட்டலை வாழ்த்தியிருக்கா”.
ஆச்சி தனது பொக்கை வாயை திறந்து சிரித்தாள்.
ராசு குட்டிக்கு எரிச்சலாக இருந்தது.
ஆச்சி கதையை தொடர்ந்தாள்.
“ராசு குட்டி நம்ம நாட்டில முதல் முதலில ரயில் போக்கு வரத்து மும்பையில தான் துவங்கிச்சிச்சுன்னு நீ பாட புத்தகத்தில படிச்சிருக்கியே. அப்போ நம்ம ஊரு மனுசங்க பொழைப்புக்கு பம்பையில வேலை பாத்துகிட்டு இருந்தாவளாம். மும்பையில் இருந்து தானா ன்னு சொல்ற இடத்துக்குதான் ரயில் தண்டவாளம் அமைச்சாவளாம். அங்க நிறைய மக்க நம்ம திருநெல்வேலி காரவங்க தான் வேலை பர்த்துருக்காவ. தண்டவாளத்தை தூக்கிறது. அதை பொறுத்துறதுல நம்ம ஊருக்காரங்க ரொம்ப திறமையா இருந்தாவ. நல்ல திடமான உடம்பு. எவ்வளவு கனமாக இருந்தாலும் தூக்கி கொண்டு வர திறமை இவுக கிட்டத்தான் இருந்தது. அதனால இங்கிலீஷ் காரவுய நம்ம மக்களை நல்லா பயன்படுத்துனாவ”.
.
“சரி. அது இருக்கட்டும் ஆச்சி. பேக்லேண்டுவுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்”.
ராசுக் குட்டி கோபமாக கேட்டான்.
“பொறு பொறு சொல்லுதேன். பாப்பாத்தி உன்னை கெட்ட வார்த்தையால திட்டல வாழ்த்தினான்னு அப்போ தான் உனக்கு புரியும்”.
“ஆமாம் பேக்லெண்டு பெரிய கவர்னரா?”
ராசுக் குட்டியை அணைத்துக்கொண்டாள் ஆச்சி.
“ஆமாண்டா அந்த காலத்தில ரயில் ரோடு போடும் போது மும்பை கவர்னராக இருந்தவருத்தான் பேக்லேண்ட்”.
“என்ன பேக்லேண்டா?”.
“ஆமாம். பேக்லேண்ட் தான் மும்பை கவர்னர். நீ நல்லா உன் புத்தகத்தை படிச்சு பாரு. அவரு நல்ல வளத்தியா இருப்பாரு. பாவம் போல இருப்பாரு. ரொம்ப மந்தமா பேசுவாரு. புறங்கையை கட்டிக்கிட்டு திரு திருன்னு முழிப்பாரு. அவரு பேசுற இங்கீலிஷ் நம்ம ஆளுங்களுக்கு புரியாது. நம்ம ஆளுங்க பேசுற தமிழும் , அரை குறை இந்தியும் அவருக்கு புரியாது. இதனாலயே அவர் பரக்க பரக்க முழிப்பாரு”.
“ஆனா அவரை நம்ம ஆளுங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால மசமசன்னு நின்னுகிட்டு இருப்பவுகளை பார்த்து என்னலே பேக்லண்டு மாரி நிக்க என்று சொல்ல ஆரம்பிச்சாவிய. இப்போ பேக்லண்டும் போய் சேந்துட்டாவ. ஆனா அவுகள நம்ம மக்க மறக்கலை. இன்னைக்கும் நம்ம பக்கத்தில யாராவது அசடு போல நின்னாவுனா அவுகள ஏலே பேக்லேண்டு மாரி நிக்காதலேன்னு சொல்லிக்கிட்டுத்தான் இருக்காவ. இப்ப புரியுதா பாப்பாத்தி உன்னை கெட்ட வார்த்தை சொல்லி திட்டல. கவர்னருன்னு சொல்லியிருக்கான்னு” ஆச்சி பேக்லேண்ட் கதையை சொல்லி முடித்தாள்.
ராசுக்குட்டிக்கு சந்தோசம். வீட்டுக்குள் ஓடினான். தனது 5 வது வகுப்பு புத்தகத்தினை தூக்கி கொண்டு ஓடி வந்தான். அதன் பின் அந்த பக்கத்தினை புரட்டினான். பாட்டி அருகில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தான்.
“உலகத்திலேயே ரயில் போக்குவரத்தில் இரண்டாம் இடத்தினை பெற்று இருப்பது இந்தியாதான். இந்தியா வின் முதல் ரயில் போக்குவரத்து 1853 ஆம் ஆண்டு மும்பைக்கும் தானே என்ற இடத்திற்கும் இடையே துவங்கியது. இந்த இரயில் போக்குவரத்து ஏப்ரல் 14 ந்தேதி துவங்கப்பட்டது. அப்போதைய மும்பை கவர்னராக இருந்த பேக்லண்ட் என்பவர் இதை துவக்கி வைத்தார். ரயில் சேவை துவங்கும்போது 21 குண்டுகள் முழங்க மக்களின் கரகோஷத்தின் மத்தியில் கிளம்பிய இந்த ரயிலில் 14 பெட்டிகள் இருந்தது. 400 பேர் இந்த ரயிலில் பயணம் செய்தனர். மும்பைக்கும் தானேக்கு இடையே உள்ள 21 மைலை 1மணி 15 நிமிடத்தில் இந்த ரயில் வண்டி கடந்தது.
இந்த ரயில்வண்டி துவங்க திட்டமிடப்பட்டது சென்னை மாகனத்தில்தான். 1831முதல் 32 வரை திட்டமிடப்பட்ட இந்த இரயிலுக்கு உரிய பெட்டிகள் பைகுலா என்னும் இடத்தில் உருவாக்கப்பட்டது. 21 மைல் தூரத்துக்கு துவங்கப்பட்ட இந்த ரயில் பாதை தற்போது இமயமலை அடிவாரத்தில் இருந்து கன்னியாகுமரி வரையில் 63 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் பரந்துள்ளது. விரைவில் உலகத்தில் முதலாவது இடத்தினை இந்திய ரயில் நிர்வாகம் பிடிக்க வேண்டும் என்பது நமது இலக்காக உள்ளது”.
என படித்து முடித்தான்.
ஆச்சி சொன்ன இந்த வரலாறு நம்மையும் தான் திகைக்க வைத்தது. ஆனால் ராசுக்குட்டி சந்தோசமாக தெருவுக்கு ஓடினான். “ஏலே மாடசாமி பாப்பாத்தியக்கா என்னை திட்டிலே . என்னை கவர்னருன்னு சொல்லியிருக்கா” என்றான்.
ஆனால் ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அவர்கள் எல்லோரும் பேக்லேண்டு மாரித்தான் திரு திரு என முழித்தார்கள்.
(அது இருக்கட்டும் ஆச்சி சொன்னதுல நம்ம மக்களுக்கு ஒரு அறிவுரை இருக்கு கவனிச்சிங்களா. அந்த காலத்தில் அதாவது 200 வருசத்துக்கு முன்பு நம்ம தமிழர்கள்தான் உலகத்திலேயே பல நகரம் உருவாக காரணமாக இருந்து இருக்கிறோம். அந்த அளவுக்கு உடல் உழைப்பு நம்மிடம் இருந்துள்ளது. ஆனால் இன்று நாம் சோம்பேறி ஆகி விட்டோம் . அதனால அடிப்படை தொழிலை செய்ய நம்ம தமிழ் நாட்டுக்குள்ள பல ஆயிரக்கணக்கான வடஇந்தியர்கள் வந்து விட்டனர். சாலை விரிவாக்க வேலைகள், தோட்ட வேலைகள், கட்டிட வேலைகள், ஹோட்டல் வேலைகள் என பல வேலைகளை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. நம்ம முன்னோர்கள் உழைத்த உழைப்பில் 10 சதவீதம் -கூட நம்மிடம் இல்லை. எனவே வேலைசெய்யும் உரிமையை அவர்களிடம் விட்டு விட்டோம். வருங்காலத்தில் நம்முடைய வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட கூடும்).
*******
மறுநாள் காலையில் எழுந்தான் ராசுக்குட்டி.
இரவு அதிக நேரம் தூக்கியிருப்பான் போல, “அய்யோ நேத்து ராத்திரி ஆச்சி கிட்ட கதை கேட்காம விட்டுட்டோமே”. என்று நினைத்தான். “இந்த அம்மா வேறே . ஆச்சி தூங்க வரும் முன்னமே என்னை தூங்க வைச்சிட்டா” என அழுத்துக்கொண்டான்.
அதன் பிறகு தாமிரபரணி ஆற்றில் நன்கு குளித்தான்.
மார்கழி மாதம் பனியும், தாமிரபரணியின் குளிர்ந்த நீரும் அவன் உடலை உற்சாக படுத்தியது. கண்ணாடி போல் இருந்த தண்ணீரில் முகம் பார்த்தான். அடியில் கிடந்த வெள்ளை நிறத்து மண் இவனை பார்த்து சிநேகம் காட்டியது. ஆகா மணக்கரை மலையில் இருந்து சிவப்பு கலரில் கிளம்பிய சூரியனனின் கதிர் வண்ணங்கள் தாமிரபரணியில் பட்டு பிரதிபலித்து பல வண்ணங்களை காட்டியது.
அப்போது பொடி பையன் மாரிமுத்துவை அவன் அப்பா சந்தானம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார், “ஏலே அம்பளகுண்டியோட(துணி இல்லாமல் வேறு உடலுடன்) ஆத்துல குளிக்காதன்னு சொன்னா கேட்டியா?” என்று காத்தை பிடித்து முறுக்கினார். மாரிமுத்து அலறினான்.
“யோவ் சின்னய்யா. பயலை போட்டு ஏன் அடிக்கிய. கழுத குளிச்சா குளிச்சுட்டு போறாம் வே விடும். சின்ன பையன்தானே” என்றான் பால்கார கொம்பன்.
“ஏலே நீயும் அறிவு இல்லாம பேசாதல. நதி நம்ம தாயி மாறி டே. நதியில குளிக்கும் போது துண்டை கட்டிக்கிட்டு குளிக்கணும். இல்லாட்டி அவ கூட நாம தப்பான உறவு வைக்கிற மாரிடே “என்றார்.
சந்தானத்தை வெறித்து பார்த்தான் கொம்பன்.
“ஆமாலே இன்னைக்கு நமக்கு குடிக்க தண்ணீ தருதவ தாமிரபரணி தாய்தான். நாம திங்கமே நெல்லு. அதை விளைய வைக்க தண்ணீ தருதது தாமிரபரணி தான். ஒரு தாய் எப்படி நம்மள கண்ணீர் வராம காப்பாத்துறாலே அது போல நம்மளை காப்பாத்துறது நம்ம தாய் தாமிரபரணி தான். அவளை நாமும் மதிக்கணும். காப்பாத்துணும். எவனாவது துணி கட்டாம குளிச்சாலோ, வெளிக்கு இருந்துண்டு குண்டி கழுவினாலோ, மோத்திரம் பெய்தாலே ஒரே துண்டுத்தான் வெட்டி புடுவேன் வெட்டி”. சந்தாணம் போட்ட சத்தத்தில் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
ஒருவரும் சத்தம் காட்ட வில்லை. அமைதியானார்கள். அழுதுக்கொண்டிருந்த மாரிமுத்து காதை பிடித்து திருகினார் சந்தானம். “இனிமே ஆத்தில துணி கட்டாம குளிப்பியா?”
அவன், “மாட்டேன். யப்பா என்னை விடு. என் காதை கிள்ளாத வலிக்கு” என்று கூறியபடி அவரிடம் இருந்து தப்பித்து கரையில் கிடந்த கிழிந்த ரவுசரை இடுப்பில் சுற்றிக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினான்.
ராசு குட்டி யோசித்தான். “அடேங்கப்பா நம்ம மக்கள் தான் என்னா பண்பாடு வச்சிருக்காவ”. அவன் மனதில் நன்றாக பதிந்தது. இனிமே நீர் நிலைகளை நாம சுத்தமா வைக்கணும். சபதம் எடுத்துக்கொண்டான். அந்த நாள் சம்பவம் எப்போதுமே அவன் மனதில் நீங்காமல் இடம் பெற்றது.
“பிற்காலத்தில் எல்லா கழிவையும் தாமிரபரணியில் கொட்டி சாக்கடை நீராக்கி விடுவார்கள் என்று அப்போது வாழ்ந்த நல்ல உள்ளங்களுக்கு எங்கே தெரிந்திருக்கப்பேகிறது. இடையில் கொஞ்சம் பக்கத்தினை( சுத்தத்தினை) காணமல் அல்லவா தாமிரபரணியை கெடுத்து விட்டோம்).
****
பள்ளி கூடம விட்டது. பேக்லேண்டு கதையை ஒவ்வொருவரிடம் கூறிவிட்டான் ராசுக்குட்டி. “ஏலே ராசுக்குட்டி இன்னைக்கு உன் ஆச்சி எதும் கதை சொல்லுமாடே” என நண்பர்கள் கேட்டார்கள்.
“சொல்லுவாவ என் ஆச்சி. நிறைய கதை வச்சிருக்கு. நீயும் என் வீட்டுக்கு படுக்க வாடே. நிலாவை பாத்துக்கிட்டே கதை கேட்கலாம்”. என்றான்..
அதன் பிறகு பையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வீட்டுக்கு ஓடி வந்தான்.
வீட்டுக்கு பக்கத்தில் ஒரே கூட்டம். அந்த கூட்டத்தில் வெளியே நின்று பார்த்தான். ஏதோ பஞ்சாத்து ஓடிக்கொண்டிருந்தது.
அப்பா த்தான் பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருந்தார்.
“இங்க பாருடே எட்டப்பன் வேலை எல்லாம் நம்ம இனத்துக்கு செய்யாதே. நம்ம இனம். நம்ம ஊருன்னு பாரு. அடுத்த ஊருக்காரனுவ கிட்ட போய் எட்டப்பன் வேலை பாக்கதே” என்றார் ஒரு பெரியவர்.
அவனுக்கு கோபம் வந்தது.
“யோவ் பெருசு என்னை பாத்தா எட்டப்பன்னு சொல்லுதீற. நாக்கை அறுத்து புடுவேன். எங்க குடும்பம் ஒண்ணும் பொசங்கெட்ட குடும்பமில்லை . காட்டிக்கொடுக்க. நாங்க மானம் மறுவாதையோட வாழுத குடும்பம்”.
எழுந்தான் அந்த இளைஞன். “இங்கப்பாருவே. என்னை எட்டப்பன்னு சொன்னதுக்கு முதலில நீர் கூட்டத்தில கட்டுபடும். இல்லாட்டி இங்க கொலையே நடக்கும்”.
சீறினான்.
ராசுக்குட்டி அங்கே நின்று பார்த்தான்.
அது என்ன எட்டப்பன். எட்டப்பன்னா அவ்வளவு மோசமான பெயரா. இந்த அண்ணன் இப்படி கோப்படுறாரு.
இவனுக்கு பசியெடுத்தது எனவே அங்கிருந்து நகர்ந்தான்.
அம்மா சொர்ணத்திடம் பசி எடுக்குது என்றவுடன் அவள் காபி போட்டுக்கொடுத்தாள்.
குடித்து விட்டு ஆச்சியை தேடினான்.
எட்டப்பன் அவன் யாரு. பாட்டியிடம் கேட்க வேண்டும் என்று மாட்டு தொழுவத்துக்கு சென்றான்.
அங்கேயும் ஆச்சி இல்லை. எங்கே போயிருப்பாள்.
எட்டப்பன். இவன் மண்டையை குடைந்து கொண்டிருந்தார்.
( ஆத்தோரக்கதைகளை ஆச்சி தொடர்ந்து சொல்லுவாள்)


