மோகன்தாசு கரம்சந்த் காந்தி பிறப்பு – அக்டோபர் 2, 1869 என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.
மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி; தாயார் பெயர் புத்லிபாய் ஆகும். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் , மணிலால், ராம்தாஸ், தேவதாஸ் . மோகனதாஸ் கரம்சந்த் காந்தி, தனது 16வது வயதில் தந்தையை இழந்தார். பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் தாதா அப்துல்லாஹ் கம்பெனி எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார். இறப்பு – ஜனவரி 30, 1948.


