தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செய்துங்கநல்லூர் வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் சிவராமங்கலம் பகுதியைச் சேர்ந்த முருகையா மகன் ராமகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாரிகந்தன் மகன் சத்தியபாலன் என்பதும் அவர்கள் அந்த வழியாக சாலையில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனே போலீசார் ராமகிருஷ்ணன் மற்றும் சத்தியபாலன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ராமகிருஷ்ணன் மீது ஏற்கனவே குரும்பூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 2 வழக்குகளும், சத்தியபாலன் மீது சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


