வல்லநாடு திருமூலநாதர் கோவில் ஆருத்ரா தரிசன விழா சங்கர் நகர் ஜெயேந்திரா பள்ளி மாணவியின் நாட்டியாஞ்சலி வல்லநாடு ஜன.6- வல்லநாடு சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடந்தது.வல்லநாட்டில் பழமை வாய்ந்த அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழா மிகவும் சிறப்பாக நடந்தது.விழாவினை முன்னிட்டுக் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்தாம் நாளன்று ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. காலையில் யாகத்துடன் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது.
அதன் பின் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அடுத்து கோ பூஜை மற்றும் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.விழாவினை முன்னிட்டு சங்கர் நகர் ஜெயேந்திரா பள்ளி மாணவி சுபஸ்ரீயின் பரதநாட்டியாஞ்சலி நடந்தது சிறுமி யின் பரதநாட்டியாஞ்சலியை விழாவிற்கு வந்த அனைவரும் பாராட்டினர். வல்லநாடு பாரதி பள்ளித் தாளாளர் பாரதி சங்கரலிங்கம் மாணவி சுபஸ்ரீக்குப் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். பூஜைகளைக் கோவில் அர்ச்சகர் சண்முக சுந்தரம் தலைமையில் வெங்கடேச பட்டர், ஹரிபட்டர் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் வல்லநாடு மற்றும் சுற்று கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டு ஆடல்வல்லானின் அற்புத நடன தரிசனத்தைப் பக்திப் பரவசத்துடன் கண்டு களித்தனர் விழா ஏற்பாடுகளைத் திருமூலநாதர் பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்.


