செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான சிவகாமி அம்பாள் பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் தென்தில்லை என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆலயத்தில் வருடம் தோறும் திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். அதே போல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு காலை மாலை நேரங்களில் சிறப்பு பூஜை அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.
இந்த நிலையில் திருவிழாவில் 1008 சங்காபிஷேக நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் 1008 சங்கால் அபிஷேகம் செய்வதற்காக சங்குகளை கோபுரம் வடிவில் அமைக்கப்பட்டு சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதன்பின்னர் நடராஜருக்கு 1008 சங்கால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை நடந்தது.

எட்டாம் நாள் காலை 9 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகள் மூலவர் மற்றும் நடராஜர் பஞ்சமூர்த்திகள் மகா அபிஷேகம் தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு பிரதோஷத்தை தொடர்ந்து யாக சாலை பூஜைகள் பூரணகுதி தீபாராதனை, சுவாமி பச்சை சாத்தி புறப்பாடு சிவ பூதகன வாத்தியம், இசை முழங்க சுவாமி வெளிவீதி உலா எழுந்தருளல் ஆகியவைநடந்தது.
ஒன்பதாம் நாள் அன்று காலை 9 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகள் மூலவர் மற்றும் ஸ்ரீ நடராஜர் பஞ்சமூர்த்திகள் மகா அபிஷேகம் தீபாராதனை. மாலை 6 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகள் பூரணகுதி தீபாராதனை, சுவாமி திருக்கோயில் உள் பிரகார வீதி உலா எழுந்தருளல் தீபாரதனை நடைபெற்றது.

பத்தாம் நாள் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 3 மணிக்கு யாகசாலை பூஜைகள் ஆரம்பமானது. ஸ்ரீ ருத்ர ஹோமம், அதிகாலை 4.30 மணிக்கு அபிஷேகம் , அதிகாலை 5.30 மணிக்கு திரு நடன தீபாராதனை நடைபெற்றது, அதன் பின் காலையில் ஆருத்ர தரிசனம் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு காரைக்கால் அம்மையார் மற்றும் மாணிக்கவாசகருக்கு நடராஜப் பெருமாள் திரு நடனக் காட்சியை அளித்தல் வைபவம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சிவகாமி அம்பாள், நடராஜர் பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பூஜை ஏற்பாடுகளை ஆன்மிக பக்த பேரரவை சார்பில் அர்ச்சகர்கள் பாலா, முத்துராமன் தலைமையில் செய்திருந்தனர். திருவிழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோகுலமணிகண்டன் தலைமையில் அறநிலை துறையினர் செய்து வருகிறார்கள்.


