செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பிப்05, 2023ம் தேதி திருச்சியில் நடக்கவிருக்கும் பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநில மாநாட்டை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் சார்பாக செயல்வீரர்கள் செயல்வீராங்கனைகள் கூட்டம் செய்துங்கநல்லூர் வெங்கடேஷ்வரா மஹாலில் வைத்து நடந்தது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அஸார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் யூசுப் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர் சபீர் அலி மாநாட்டின் அவசியத்தை எடுத்துரைத்தனர். இதில் பிப்ரவரி மாதம் 5ம் தேதி திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கான மக்களை அழைத்து செல்வதென்று முடிவு செய்யப்பட்டது.
ஆண்களும், பெண்களும் திரளாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சுலைமான் கிளைகளின் செயல்பாடுகளை கேட்டறிந்தார். மாவட்ட மருத்துவரணி தமீம் அவசர இரத்ததானத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். மாவட்ட துணை செயலாளர் இம்ரான் தீர்மானங்களை முன்மொழிந்தார். பொருளாளர் ரஷீத் மாவட்ட துணை தலைவர் நவாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் பரீத்,மாணவரனி பொறுப்பாளர் அல்தாஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
செய்துங்கநல்லூர் பகுதிகளில் நாய்கள் மற்றும் பன்றிகளின் தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மழை காலங்களில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி பெரும் சிரமத்தை பொதுமக்களுக்கு ஏற்படுத்துகிறது இதை விரைவாக சரி செய்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.
ஆளும் ஒன்றிய அரசு சிறுபான்மை சமுதாய மக்களை ஒடுக்குவதற்காக பொது சிவில் சட்டம் கொண்டுவர முயற்சி செய்கிறது முதற்கட்டமாக நேற்று மாநிலங்களவையில் தனிநபர் மசோதா ஒன்று விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது, வழிகாட்டு நெறி முறைகளில் பூரண மது விலக்கு கொண்டு வர வழிகாட்டபட்டு இருந்தும் மக்கள் உயிரை குடிக்கும் பூரண மது விலக்கு நடைமுறை படுத்த எந்த சட்டமும் இதுவரை கொண்டு வரப்படவில்லை. ஆனால் வழிகாட்டு நெறிமுறையில் உள்ளதாக சொல்லி இஸ்லாமிய சமுதாயத்தை குறிவைத்து பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் வகையில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தால் ஜனநாயக வழியில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும்.
இந்திய நாட்டில் சிறுபான்மை சமூகம் பாசிச சக்திகளால் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகிறது. பசுவின் பெயரால், மதத்தின் பெயரால் முஸ்லிம்கள் கொல்லபடுகின்றனர். பலர் சிறைச்சாலைகளில் தள்ளப்படுகின்றனர். மாணவர்கள் மீது கூட கடுமையான வழக்குகள் பதியப்படுகின்றன. முஸ்லிம் பெண்கள் அப்ளிகேஷன் மூலமாக மானபங்கம் செய்யப்படுகின்றனர். ஹிஜாப் அனிய தடை, ஹலால் இறைச்சி தடை, ஒலி பெருக்கியில் பாங்கு சொல்ல தடை, போராட்டம் நடத்தினால் புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது, என்று சொல்லில் அடங்காத துயரங்களை சுமந்து கொண்டு முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறோம். முத்தலாக தடை சட்டம். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370 ஐ நீக்கியது. ழிமிகி விற்கு சிறப்பு அதிகாரங்கள், அடுத்து பொது சிவில் சட்டம் என்று முஸ்லிம்களை ஒடுக்கும் அனைத்து விஷயங்களையும் பாசிச பாஜக அரசு செய்து வருகிறது. சர்வாதிகாரம் வளர்ந்து வருகிறது, ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்படுகிறது. மதச்சார்பற்ற இந்தியாவின் சுதந்திரத்திற்காக வெள்ளையரை எதிர்த்து முஸ்லிம்கள் நடத்திய நீண்ட நெடிய போராட்டத்தை ஆளும் ஒன்றிய அரசிற்கு இச்செயற்குழு வாயிலாக நினைவு படுத்துகிறோம். முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுடைய உரிமைகள் பாதுக்காக்க பட வேண்டும்.
2023 பிப்ரவரி 5 ம் தேதி பித்அத் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இறைத்தூதரின் போதனைகளை முஸ்லிம்கள் புறக்கணித்து வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்களிடம் மண்டிக் கிடக்கும் அனாச்சாரங்களையும், மார்க்கத்தின் பெயரால் உருவாக்கபட்ட புதுமைகளையும் முழுமையாக கலைந்திட நம்முடைய பிரச்சாரக் களத்தை வீரியப்படுத்த வேண்டும்.
இந்த மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மயிலாடுதுறை மாவட்டடத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இம்மாவட்டத்தின் ஒவ்வொரு பட்டி தொட்டி எங்கும் இந்த பிரச்சாரத்தை கொண்டு செல்வதோடு ஆயிரக்கணக்கான மக்களை இம்மாநாட்டில் பங்கேற்க அழைத்து செல்ல வேண்டும்.
கடந்த ஆட்சி காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவேன் என்று ஜெயலலிதா வாக்களித்தார். அவர் வாழும் காலம் வரை அதற்கான எந்த முன்னெடுப்பையும் அவர் செய்யவில்லை. அவரின் மறைவிற்கு பிறகு அதிமுகவினர் பாஜகவின் அடிமைகளாக மாறி விட்டனர். சிறுபான்மையினரான முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே தமிழக அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை சமுதாயத்தின் மொத்த வாக்குகளையும் பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு..க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7% ஆக அதிகரித்து முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும்.
இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது இன்று வரை முழுமையாக பல துறைகளில் கொடுக்கப்படவில்லை. சுதந்திரத்திற்கு முன்னர் இஸ்லாமியர்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு சென்னை மாகாணத்தில் இருந்து வந்த நிலை மாறி இன்று தங்கள் சதவீதத்திற்கும் மிகக்குறைவாகவே ஒவ்வொரு அரசுத்துறையிலும், அதிகாரத்திலும் இஸ்லாமியர்கள் உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகள் என ஒவ்வொன்றிலும் இஸ்லாமியர்கள் பெற்றுள்ள இடம் என்ன என்பதை அறியும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றவர்களை பொதுப்பிரிவில் சேர்த்து இடஒதுக்கீட்டில் கிடைக்க வேண்டிய வேலையை அரசுப்பணிகள் தேர்வாணையம் உள்ளிட்ட அமைப்புகள் பறித்து சமூகநீதிக்கு எதிராக செயல்பட்டுவருகின்றன, பிசி பிரிவில் இருக்கும் ஒருவர் இஸ்லாத்தை தழுவினாலும், எஸ்.சி. பிரிவில் இருக்கும் ஒருவர் இஸ்லாத்தை தழுவினாலும் அவர் பொதுப்பிரிவில்தான் சேர்க்கப்படுகிறார், தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் இந்து மதத்தின் ஏதோ ஒரு பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட பிரிவிலிருந்து சில தலைமுறைக்கு முன்னால் மதம் மாறியவர்கள்தான் எனவே தற்போது மதம் மாறியவர்களை பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) என அரசு வேலைவாய்ப்புகளில் கருத உரிய உத்தரவிடுமாறு திமுக அரசை இக்கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
என அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் யூசப் கூறுகையில்,
இந்தியாவில் இஸ்லாமியர்களின் உரிமைகளில் ஒன்றிய அரசு கை வைக்கிறது. பாபர் மசூதி விஷயத்தில் பழமைவாய்ந்த பள்ளிவாசல் வழக்கில் ஒரு தீர்ப்பை வழங்கி அதனை முஸ்லீம்கள் ஏற்றுக் கொண்டும், ஏற்றுக்கொள்ளாமலும் நாட்டின் ஒற்றுமைக்காக அதனை மனதளில் கடந்து சென்று விட்டார்கள். அதனை தொடர்ந்து மதுரா என்ற பகுதியில் தொல்லியல் துறை ஒரு வழக்கை தொடர்ந்துள்ளது. அது தொடர்பாக மதுரா நீதிமன்றம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 2 தேதியில் இருந்து 20ம் தேதிக்குள் ஆய்வு செய்து அவர்கள் தெரிவிக்க வேண்டும். அங்கு பள்ளிவாசல் குறித்த தகவல்களையும், ஆக்கிரமிப்புகள் குறித்த தகவலையும் வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. குறுகிய காலத்தில் எப்படி இது சாத்தியமாகும். திட்டமிட்டு பள்ளியை அபகரிக்க வேண்டும் இப்படி செயல்படுகிறார்களா என்று இஸ்லாமியர்கள் மத்தியில் கேள்வி எழுகிறது. அரசாங்கம் கல்வி விஷயத்தில் அதிகமாகவே சிந்திக்கிறார்கள். தமிழக முதல்வர் தற்போது மை ஸ்கூல் பவுண்டேசன் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி அடிப்படை கல்வியை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதை விட முக்கியம் ஒரு மாணவனின் ஒழுக்கம். அதற்கு மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். நற்பண்புகள் சார்ந்த பாடத்திட்டத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தினால் மட்டுமே போதை போன்ற தீய பழக்க வழக்கங்கள் மாணவர்களிடமிருந்து மறையும் என்று அவர் தெரிவித்தார்.


