இந்த நூலுக்கு “அருள் தரும் அபூர்வ ஆலயங்கள் 200” என பெயர் வைக்கும் முன்பு “நான் கண்ட ஆலயங்கள்” என பெயர் வைக்கலாம் என நினைத்தேன். காரணம் இந்த ஆலயங்கள் அனைத்துமே நான் நேரில் சென்று தகவல்களை திரட்டி பல்வேறு முன்னணி வார பத்திரிக்கையில் எழுதியது. தொடர்ந்து “தாமிரபரணி கரை ஆலயங்கள்” என பெயர் வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் நதியை விட்டு கடந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி, நாகபட்டினம், திருவாரூர் என நான் தேடிய ஆலயங்கள் மும்பை கோவா என விரிந்தது. எனவே தான் அருள் தரும் அபூர்வ ஆலயங்கள் 200 என இந்த நூலுக்கு பெயர் வைத்து விட்டேன். இந்த புத்தகம் முழுவதையும் ஆயிரம் பக்கத்தில் முடித்து விடலாம் என்று நினைத்தாலும் கூட அது இயலாமல் ஆயிரத்தினை கடந்துவிட்டது. இந்தியா ஆன்மிக பூமி. இங்கு பல ஆயிரம் ஆலயங்கள் வரலாறோடு இணைந்து காணப்படுகிறது. அங்கெல்லாம் சென்று எழுத வேண்டும் என ஆசை. ஒரு வேளை இந்த நூல் வெளியான பிறகு நான் உலக நாடுகளுக்கு சென்று அங்கு நம் தமிழர்கள் வணங்கும் ஆலயங்களின் வரலாற்றையும் பட்டியலிடலாம். எனவே இந்த நூலை தொடர்ந்து இரண்டாவது பாகம் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.


