மத்திய சாலை போக்குவரத்து மற்றும் இந்திய நெடுஞ்சாலை இணை அமைச்சர் ஜெனரல், வி.கே.சிங் நெல்லைக்கு வருகை தந்தார். அங்கே உள்ள தனியார் ஹோட்டலில் பசுமை தமிழ் தலைமுறை நிறுவனர் சுகன் கிறிஸ்டோவர் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் திருநெல்வேலி- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் அடிக்கடி ஓட்டை விழுகிறது. குறிப்பிட்ட 10 வருடத்துக்குள் பல முறை ஓட்டை விழுந்து விட்டது. ஆனால் இந்த பாலத்தினை பழுது பார்க்கிறோம் என பல லட்ச ரூபாயை வீணாக செலவழிக்கிறார்களே தவிர, நிரந்தர தீர்வை ஏற்படுத்த வில்லை. இதற்கிடையில் தற்போது ஓட்டையை அடைக்கிறேன் என்று பாலத்தினை சுற்றி லேமினேசன் செய்து வருகிறார்கள். இது நிரந்தர தீர்வு அல்ல. எனவே தற்போது நடைபெறும் பராமரிப்பு பணியை ரத்து செய்து விட்டு, நிரந்தர தீர்வுக்கு என்ன வழி என கட்டிட வல்லுநர்களை வைத்து ஆலோசனைசெய்து அதன் பின் பணியை துவங்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.
அப்போது பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர்,விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.


