தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பஜாரில் வசித்து வருபவர் சுடலைமுத்து. இவர் தனது வீட்டின் மேல் தனியாக அறை எடுத்து அதில் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் மற்றும் வீடு கட்ட வரைபடம் வரைந்து கொடுக்கும் அலுவலகமாக உருவாக்கி பணிகளை செய்து வருகிறார். இவர் தற்போது ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டுள்ளதால் குடும்பத்தார்கள் கீழ் வீட்டில் தங்குகிறார்கள். இவர் தனது வீட்டின் மேல் உள்ள அலுவலகத்தில் தங்கி வருகிறார்.
இன்று மார்கழி மாதம் முதல் நாள் என்பதால் சுடலைமுத்துவின் மனைவி அதிகாலை கோவிலுக்கு சென்றுள்ளார். இதனால் குழந்தைகளுக்கு துணையாக அதிகாலையில் சுடலைமுத்து வீட்டில் வந்து படுத்துள்ளார். இதற்கிடையில் வீட்டின் மேல் அறையில் இருந்து புகையாக வருவதாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சுடலைமுத்துவை தட்டி எழுப்பி கூறியுள்ளனர். உடனே சுடலைமுத்து அலுவலகத்தை திறந்து பார்த்தபோது அலுவலகத்தில் உள்ளே தீப்பிடித்து எரிந்தது. உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சுடலைமுத்துவுடன் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினி, லேப்டாப், பிரிண்டர் போன்ற பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.


