முன்கதை சுருக்கம்
சந்திரன் முத்துகிளியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். ஆனால் அது இயலாது என்கிறார்கள். அதற்கு காரணம் அவனது குடும்பத்தில் சாதி மாறி திருமணம் செய்தது என்கிறார் வாசு. உண்மையை புரிந்து கொள்ள சந்திரன் தனது பூர்வீகத்தினை தேடுகிறான். அதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இதற்கிடையில் பனையில் இருந்து விழுந்து இறந்த லிங்க நாடாருக்கு ஏதாவது அரசு மூலம் நிதி உதவி கிடைக்குமா? என எதிர்பார்த்து வரதன் என்பவரை பார்க்க வந்தான். அவர் இறந்து விடவே அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் தவிக்கிறான். இதற்கிடையில் முத்துகிளி தனது அப்பா ரத்தினத்தினை நெஞ்சுவலி என 108ல் பாளை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருகிறாள். அப்போது சந்திரன் ரத்தினத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறான். அதோடு மட்டுமல்லாமல் அவன் ஒரு பாட்டிக்கு உதவி செய்கிறான். அந்த பாட்டியும் இறந்து விடுகிறார். இதற்கிடையில் சந்திரனின் பூர்வீக கதையை ஆசிரியர் அகஸ்தீஸ்வரன் அவனுக்கு சொல்ல ஆரம்பிக்கிறார். ஆர்வத்துடன் கேட்கிறான் சந்திரன்.
இனி.
அந்த வார்டை பார்த்தான். அந்த பாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தன்னோடு பேசிக்கொண்டிருந்த பாட்டி.
இப்போ போர்வையில் கட்டி வைத்திருக்கிறார்கள்.
“அப்படின்னா . அந்தபாட்டி உயிர் போச்சா”.
அப்படியே அதிர்ந்து போய் நின்றான் சந்திரன்.
“உன்னை மாதிரி நல்ல மனுசனை பாத்திட்டேன். இனிமே உயிர்போனா போகுதுன்னு சொன்னாங்களே” . அந்த பாட்டி. இப்போது வாழ்ந்தது போதும் என்று தன் வாழ்வை முடித்துக்கொண்டார்களா?
“தினமும் என்னை வந்து பாப்பீயா” என கண்ணீர் பொங்க பாசத்துடன் கூப்பிட்டாங்களே அந்த பாட்டி. அவங்களோட உயிர்போச்சா?.
“அய்யோ. இது வரைக்கு நல்ல மனிசனுங்கள நான் பாக்கல. சாப்பாடு வாங்கி தாரேன்னு சொல்லிட்டு காசோட ஓடி போயிடுவானுவ. அதனால நான் பல நாள் பட்டினியா கிடப்பேன்னு” சொன்னாங்களே. இன்னைக்கு தானே நல்லா சாப்பாடு வாங்கி கொடுத்தேன். அது போதுமுன்னு இந்த உலகத்தை விட்டு போயிட்டாங்களா?.
சந்திரன் நொந்து போய் விட்டான்.
கிட்டே போக வேண்டும் . பாட்டியை பார்க்க வேண்டும். என்று அவனுக்கு ஆசை. “கிட்டே போய் பார்த்தாலும் நீ என்னடா செய்ய போறே. உனக்கும் அந்த பாட்டிக்கும் என்ன சம்பந்தம். நீ என்ன முறைக்கொண்டு பாட்டிக்கிட்டே சொந்தம் கொண்டாடுவ”. என்று அவனது உள் மனது சொன்னது.
அதற்குள் மீண்டும் அவசர வார்டில் இருந்து சத்தம் வந்தது. “ரத்னம் அட்டென்டர் யாரு. அவரசமா வாங்க”.
சந்திரன் பாட்டியை மறந்து விட்டு அவசர வார்டுக்கு ஓடினான்.
“மேம் நான் தான்”.
“உள்ளே போங்க. அவரு கூப்பிடுராரு”. என்றார் நர்ஸ்.
உள்ளே ஓடினான்.
“என்னய்யா என்ன ஆச்சி”. சந்திரன் ரத்தினத்தினை நோக்கி ஓடினான்.
“யய்யா வெளியே போவணும். என்னை வெளியே கக்கூஸ் கூட்டிட்டு போய்யா”. ரத்னம் மெதுவான குரலில் பேசினார்.
“சரிய்யா. நீங்க எந்திருக்கணுமுன்னா டிரிப்பை கழற்றி விடணும். இருங்க நர்ஸை கூப்பிடுதேன்”.
சந்திரன் சொல்லும் போதே பின்னாலே நர்ஸ் வந்து விட்டார்.
“தம்பி இதய நோயாளி. பெட்டை விட்டு அசையக்கூடாது. வெளியே எல்லாம் கூட்டிட்டு போக முடியாது. பேசாம அந்த ஸ்கிரினை இழுத்து போட்டுகிடுங்க. வெளியே ஒரு சேர் இருக்கும். அந்த சேரை தூக்கிட்டு வந்து, அதுல உட்கார்ந்து கக்கூஸ் போக சொல்லுங்க. தண்ணீர் கொண்டு வந்து , அதுலேயே கழுவ சொல்லுங்க. அப்புறமாக அதை வெளியே கொண்டு ஊத்திருங்க” என்றார்.
“சரி சிஸ்டர்” என்றான். அந்த அறை அருகே சேர்ந்த படியே ஒரு பொது கழிப்பிடம் இருந்தது. அந்த பொது கழிப்பிடத்தில் இருந்து ஒரு பிளாஸ்டிக் சேரை எடுத்து வந்தான். அந்த சேரில் உட்கார்ந்து கக்கூஸ் போகும் அளவுக்கு ஒரு ஓட்டை போடப்பட்டு, அந்த ஓட்டையின் கீழே ஒரு டப்பா பொருத்தப்பட்டிருந்தது. அந்த சேரை கொண்டு வந்து அவர் அருகில் வைத்தான். மறைவு கிரினை இழுத்துகொண்டு வைத்துவிட்டு, அவரை தூக்கி அப்படியே அந்த சேரில் வைத்தான்.
ரத்னத்துக்கு கண்ணீர் வந்தது, “யார் பெத்த பிள்ளையோ நீ. எனக்கு இப்படி பணிவிடை செய்றீயே”. என்றார்.
“அதை பத்தி நீங்க ஒண்ணும் நினைக்காதீங்க அய்யா. நான் உங்களுக்கு எல்லாமே செய்ய கடமை பட்டவன்” என்றான் சந்திரன்.
“இன்னைக்கு பெத்த பிள்ளையங்களே பக்கத்தில நிக்க மாட்டுகுதுவ. ஆனா நீ எங்கேயோ பிறந்து இங்க வந்து எனக்கு உதவி செய்யுற. உனக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேனோ தெரியலை”. ரத்னம் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் விழுந்தது.
“நீங்க அதெல்லாம் யோசிக்காதீங்கய்யா. என் அப்பா இருந்தா நான் இதெல்லாம் செய்ய மாட்டேனா?”.
அமைதியாக யோசித்தார்.
அதன் பின் கஷ்டப்பட்டு ஸ்டுலில் கக்கூஸ் இருந்தார்.
அவருக்கு இது புதுசு. ஏ.சி காத்து ஒரு பக்கம் அடிக்க. அருகில் பெட்டில் பலர் படுத்துக்கிடக்க, அந்த மறைவுக்கு பின்னால் கக்கூஸ் இருப்பது புது அனுபவம். ஆகவே தர்மசங்கடமாகத்தான் இருந்தது. அதைவிட தர்மசங்கடம். இதை இந்த பையன் தூக்கி சுமந்து, அதை கழுவி வைக்க வேண்டும்.
அதை நினைக்கும் போதே அவரது மனம் மிகவும் கனத்தது. இவன் யார். இவன் மும்பையில் இருந்து எதற்கு இங்கே வந்தான். நம்ம குடும்பத்துக்கு இவன் ஏன் இப்படி உழைக்கிறான். அவர் கண்ணில் இருந்து அதிக நீர் சுரந்தது.
அதை புரிந்து கொண்டான் சந்திரன். “அய்யா ஒண்ணும் நினைக்காதீங்க. நீங்க தைரியமா இருங்க”. என்றான்.
சிறிதுநேரம் கழித்து. அவரை கழுவி பெட்டில் படுக்க வைத்தான். அதன் பின் அந்த சேரை எடுத்துக்கொண்டு போய் கக்கூஸ் ரூம்பில் கழுவி விட்டு விட்டு உள்ளே வந்தான். தொடர்ந்து அந்த மறைப்பை ஓரமாக வைத்துவிட்டு, ரத்னம் மீது போர்வையை மூடினான்.
“அய்யா தூங்குங்க . நான்வெளியே இருக்கேன். ஏதாவது தேவை என்றால் உடனே கூப்பிடுங்க. நான் ஓடியே வந்திருதேன்”. என்றான்.
“சரி” என்று தலையாட்டினார்.
நமக்கு நான்கு பெண் பிள்ளை. பொட்டை பிள்ளையை பெத்தவனுக்கு உதவியே கிடக்காது என்றெல்லாம் ஊர் காரர்கள் திட்டுவார்கள். ஆனால் இந்த பிள்ளை நான் பெற்ற பிள்ளை மாதிரி உதவுகிறான். எதற்காக இந்த பந்தம். ஏன் கடவுள் என்னோடு இந்த பையனை சேர்த்து வைக்கிறான். ஒரு வேளை நம்ம மகள் முத்துகிளியை இவன் திருமணம் செய்ய ஆசைப்படுகிறானா?. அப்படியென்றால் அவளுக்கு இவனை திருமணம் செய்து வைக்க முடியுமா? இவன் குடும்ப சூழ்நிலை அதற்கு ஒத்து வருமா?
என பல குழப்பம் அவருக்கு தோன்றியது.
யோசித்தார். அவன் குடும்ப சூழ்நிலையை விட்டு விடுவோம். முத்துகிளிக்கு நல்ல மாப்பிள்ளை இவனை விட கிடைப்பானா? இதுபோன்ற ஒரு மாப்பிள்ளையை ஏன் விட்டு கொடுக்க வேண்டும். பேசாமல் இவனுக்கு அவளை திருமணம் செய்து வைத்து விடலாம்.
ஏற்கனவே ஓடிபோய் விட்டாள் முத்துகிளி என ஊருக்குள் பேசுகிறார்கள். அப்படி இருக்கும் போது எல்லாம் அறிந்த இவனை தவிர வேறு எந்த மாப்பிள்ளை முத்துகிளியை கட்டி கிடுவார்கள். ஆகவே இவனை கட்டி வைப்பதில் என்ன தவறு என்று ஒரு முடிவுக்கு வந்தார்.
ஆனால் அந்த முடிவையெல்லாம் தவிர்பது போலவே வெளியே வாசு தாத்தா பேசினார்.
“என்னடே ரத்னம் சொல்றான்”.
“ஒண்ணும் இல்லை தாத்தா. அவிய கக்கூஸ் போகணுமுன்னு சொன்னாவ அதுதான்.”
வாசு சிரித்தார். “ஏடே நீ என்னத்தை உதவுனாலும் இந்த -குடும்பத்தில உனக்கு இடம் கிடையாது. சீக்கிரம் ஊருக்கு போய் சேர வழிய பாரு” என்றார்.
இப்போது தான் சந்திரனுக்கு மிகவும் அதிகமாக மனம் கனத்தது.
இந்த சோகத்திலும் பாட்டியை மூடி வைத்திருந்த இடத்தினை பார்த்தான்.
அந்த இடம் காலியாக இருந்தது. அந்த வார்டுக்கு ஓடினான். நர்ஸிடம் “இந்த பாட்டியை எங்கே” என்று கேட்டான்.
“மார்ச்சுவரி கொண்டு போயிட்டாங்க. பாவம் பாட்டி அனாதை. முதியோர் இல்லத்தில இருந்து வந்து தான் சேர்த்தாங்க. நாளைக்கு முதியோர் இல்லத்தில இருந்து யாரும் வந்து பாடியை எடுத்தா உண்டு. இல்லாட்டி அனாதை புணமாக எங்க நிர்வாகமே புதைச்சிரும்” என்றார் நர்ஸ்.
“கடவுளே . என்ன ஒரு அநியாயம்”
திரும்பினான். வாசு சந்திரனிடம் திரும்பவும் பேசினார். “ஏன்டா இப்படி அலையிற . அந்த பாட்டி உடலையும் சொந்த கொண்டாட பாக்கியா?. முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட கூடாதுடா. ஒண்ணு எட்டா கனியா இருக்கிற முத்துகிளிக்கு ஆசைப்படுறே. இல்லாட்டி அனாதையா செத்து கிடக்கிற பாட்டி உடலுக்கு சொந்தம் கொண்டாட ஆசைப்படுற. என்ன பிறவிடா நீ”
அவர் பேச்சு எல்லாமே இவனுக்கு சாட்டையடியாக விழுந்தது. “அனாதை என்றால் யாரும் ஆதரவு தரக்கூடாதா? என்னடா இது உலகம்”. மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
அந்த சமயம் அகஸ்தீஸ்வரன் வாத்தியார் வந்தார். “என்ன வாசு சந்திரனை போட்டு இந்த வதைவதைக்கிற”. என்றார்.
“என் பேச்சு அப்படித்தான் வாத்தியாரே. அவன் ஆசைபடுறான். எல்லாம் எனக்கு தெரியுது. ஆனா அவன் குடும்ப சூழ்நிலை தெரிஞ்சா அவன் இதுக்கு ஆசைபடமாட்டான்”. வாசு பேச்சு விரக்தியாக இருந்தார்.
“அய்யா தாத்தா நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டியளே. என் குடும்பம் சாதி கெட்டதுண்ணு சொல்லுதியளே. எப்படி நான் சாதி கெட்ட குடும்பம் அதை சொல்லுங்க. இல்லாட்டி என் தலையே வெடிச்சிரும் போல இருக்கே”.
சந்திரன் தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்தான்.
ஏய் வாசு அவனை குழப்பாதே. அவன் என்னசொன்னாலும் நம்ம பயத்தான். அவன் குடும்பம் நம்ம சாதிக்கு நல்லது செஞ்சவங்க. ஆனா அவியல நாம தலை முறை தலைமுறையா தரம் தாழ்த்திக்கிட்டு இருக்கோம். என்று சத்தம் போட்டார்.
சந்திரன், “வாத்தியார் அய்யா. தயவு செஞ்சு சொல்லுங்க. எங்க குடும்பத்தை பத்தி சொல்லுங்க. என் தலையை வெடிச்சிரும் போல இருக்கு. தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்க”.
மூன்றுபேரும் அமைதியாக இருந்தார்கள். அகஸ்தீஸ்வரன் வாத்தியார் பேச ஆரம்பித்தார்.
“ஏடேய் உங்க ஊருல ஒரு சாமி இருக்கு. அந்த சாமி உங்க எல்லாத்துக்கும் குல தெய்வம். இந்த குல தெய்வம் மேலே உயிரே வச்சிருப்பாவ எல்லோரும். அந்த தெய்வத்துக்கும் உங்க குடும்பத்துக்கும் ஒரு ஒத்துமை இருக்கு. அந்த தெய்வத்துக்கு வந்த சோதனையில தான் உங்க தாத்தாவுக்கு சோதனை வந்தது. தொடர்ந்து உங்க அப்பாவுக்கு சோதனை வந்துச்சு. கடையில எல்லாரும் உங்க குடும்பத்தை சாதி கெட்ட குடுபமுன்னு பேசுற அளவுக்கு வந்துட்டு. அந்த வரலாறை புறாவும் உங்கிட்டே முதலில சொல்லப்போறேன்.”.
அவர் பேசும் போதே ஆச்சிரியமா கேட்டான் சந்திரன்.
“ஆமாண்டே இந்த சம்பவம் குறித்துதான் உங்க கிட்டே முதலில பேசப்போறேன்”. அகஸ்தீஸ்வரன் சார் சொன்னார்.
“சரி சார்வாள் சொல்லுங்க. எங்க பூர்வீகம் தெரியாமத்தான் நான் இத்தனை நாளும் அலைஞ்சி கிட்டு இருக்கேன். உங்க புண்ணியத்தில அதை நல்லா கேக்கிறேன்.” சந்திரன் அவர் முன்னே உட்கார்ந்தான்.
வாசுவும் வேண்டா வெறுப்பாக அவர் கதையை கேட்க தயாராக இருந்தார்.
“ஏடேய் உங்க தாத்தா, அப்பா எல்லோரும் இந்த ஊருக்க செஞ்ச காரியம் இருக்கே . அந்த காரியத்தைநான் எப்படி சொல்ல . அவிய செஞ்ச காரியம் மகாத்தானது டே. அதை பத்தித்தான் சொல்லப்போறேன்”.
“சரி சார்வாள் சொல்லுங்க”.
வாசு கிட்டே வந்தார். “சரி. அவன் குடும்ப கதை இப்ப பெரிசா எதுக்கு சார்வாள். அதைபத்தி ஏன் கிளறிக்கிட்டு இருக்கிய. பேசமா அவனை பம்பாயிக்குபோக சொல்லுங்க”. சந்திரனுக்கு மனது கஷ்டமாக இருந்தது. ஏன் இந்த தாத்தா நம்ம விரட்டுறதுலே குறியா இருக்காரு.
“ஏடே வாசு உனக்கு வேறே சோலி கிடையாது. நானும் உன்னை பாத்துக்கிட்டுத்தான் வாறேன். நீர் அவனை போட்டு பாடா படுத்துறீரு. யோவ் கொலையாளினாலும் அவன் என்ன கொலை செஞ்சான்னு சொல்லி துன்பப்படுத்தணும். ஆனா சும்மா போட்டு துன்பப்படுத்துன்னா எப்படி?”
– கொஞ்சம் கடினமாகவே பேசினார் அகஸ்தீஸ்வரன். வாசு அமைதியானார்.
சந்திரனுக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்தது. “உண்மைதான். நாம என்ன சாதி கெட்டு போனோம் அது தெரியணுமுல்லா. சும்மா நீ சாதி கெட்டவன் சாதி கெட்டவன்னு சொல்லிக்கிட்டு இருந்தா போதுமா?” பெருமூச்சு விட்டார் வாத்தியார். தொடர்ந்து பேச ஆரம்பித்து விட்டார்.
“உங்க குடும்ப கதையை சொல்றதுக்கு முன்னால இராமயணத்துக்கும் உங்க ஊருக்கும் உள்ள ஒரு தொடர்பை பத்தி முதலில பேசப்போறேன்”.
“இராமயண நிகழ்வா?” சந்திரன் குழப்பத்துடன் இருந்தான். வாசு முகத்திலும் குழப்பம் தெரிந்தது.
அகஸ்தீஸ்வரன் சொன்னார். “ராமாயாண நிகழ்வு நம்ம ஊரில நிறைய இருக்குடே. அதுல ஒரு சம்பவம் உங்க ஊரில நடந்தது. குறிப்பாக சொல்லணுமுன்னா இராமர் வனவாசம் போனது நம்ம ஏரியாவில தான்டே. உனக்கு தெரியும் மாரிச்சன் மாரிச்சன்னு ஒருத்தன், சீதையை மான் ரூபத்தில ஏமாற்றி இராவணன் கடத்தை காரணமாக இருப்பான். அவன் மான் ரூபத்தில சீதா தேவியை ஏமாற்றி கூட்டிட்டு வருவான். சீதாவும் மான் பின்னாலே ஓடி வருவா. ஒரிடத்தில் மான் குப்புற பாய்கிறது. அந்த இடத்துக்கு பேரு குத்தரை பாஞ்சான் . திடீரென்று மான் காணாமல் போவுது அந்த இடம் மாயமான் குறிச்சி . இந்த இடமெல்லாமல் இப்போ தென்காசி மாவட்டத்தில ஆலங்குளம் பக்கத்தில இருக்கு. இலங்கைக்கு ராமன் போருக்கு போகும் போது குரங்கு அணி வகுத்து நின்ற இடம் -குரங்கணி. குரங்கு தட்டு தட்டாக அதாவது வரிசையாக நின்ற இடம் குரங்கன் தட்டு . இந்த இடமெல்லாம் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பக்கத்தில இருக்கு. அது மட்டுமா ராவணன் சிறையெடுத்துட்டு போகும் போது திருவாளியை போட்ட இடம் ஆழிகுடி திரு ஆவளி பாறை. அது ஏன் கிஷ்கிந்தை காண்டமுன்னு சொல்லுவாவளே. அதான் வாலியை வதம் பண்ணின இடம் அதுவும் தாமிரபரணி ஆற்றங்கரையில மணக்கரையில தான் இருக்கு”.
அனைவரும் அமைதியாக கதை கேட்க தயாரானார்கள்.
“இதுபோல் சீதாதேவியை இராவணன் சிறையெடுத்து சென்ற போது அருகன்குளம் என்னும் இடத்தில் வைத்து ஜடாயு வழி மறித்தார். இராவணனுக்கும், ஜடாயுவுக்கும் இடையே பயங்கரமான சண்டை நடந்தது. இந்தச் சண்டை தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. ஆனால் யாருக்கும் வெற்றி தோல்வி கிடைக்கவில்லை. ஏன் என்றால் ஜடாயு கழுகரசன். பெரிய பலசாலி. யாரும் அவரை நேருக்கு நேர் நின்று ஜெயிக்க முடியாது.
எனவே, யாருக்கு எங்கே உயிர் இருக்கிறது என்று சொல்லி விட வேண்டும். அதன் பின் போரிட்டு ஒருவரை ஒருவர் வீழ்த்தி கொள்ளலாம் என்று இருவரும் உடன்படிக்கை செய்தனர். கழுகரசன் ஜடாயு தனது இறக்கையில்தான் உயிர் இருக்கிறது என்று உண்மையை கூறி விட்டார். ஆனால் ராவணனோ தனது கால் சுண்டு விரலில் உயிர் உள்ளது என்று பொய் சொல்லி விட்டான். அடுத்த நிமிடம் சண்டை ஆரம்பித்தது. இராவணனின் கால் சுண்டு விரலை நொடியில் ஜடாயு வெட்டி வீழத்தினார். ஆனால் இராவணன் உயிர் போகவில்லை. சிரித்தான் இராவணன். மிக ஆக்ரோஷமாக சிரித்தான் இராவணன். அதன் பின் ஜடாயுயின் இறக்கையை நோக்கி வாளை வீசினான். உண்மையை சொல்லிய அந்த பலசாலியான ஜடாயுவுக்கு அப்போது தான் சூழ்ச்சி தெரிந்தது. இறக்கையை இழந்து அலறியபடி தாமிபரணியில் விழுந்தது”.
“அய்யோ எவ்வளவு பெரிய துரோகம்”. சந்திரன் வரலாற்றை கேட்டு மெய்சிலிர்த்தான்.
“வழி மறித்த ஜடாயு சாய்ந்தவுடன் அங்கிருந்து சீதா தேவியுடன் வான் வழியே இராவணன் தப்பிவிட்டான். ஆனா குற்றுயிராய் கிடந்த ஜடாயு, சீதாதேவியை தேடி வந்த ராமனிடம், சீதாதேவியை இராவணன் சிறையெடுத்த சென்ற செய்தியை சொல்லி விட்டு தனக்கு திதி செய்யும் படி கூறி விட்டு ஸ்ரீராமன் மடியிலேயே உயிரை விட்டார்”.
ச்சு கொட்டினார் வாசு. அகஸ்தீஸ்வரன் தொடர்ந்தார்.
“அப்படியே அதிர்ந்து போய் விட்டா£ர் ராமன். உடனே தனது அம்பால ராமபிரான் அங்கே ஒரு கிணற்றைத் தோண்டினார். அதிலிருந்து தீர்த்தம் எடுத்த ஜடாயுவுக்கு திதி செய்தார். அதுமட்டுமல்லாமல் ஜடாயு வேண்டுகோளுக்கு இணங்கி லட்சுமிநாரயணராக காட்சியளித்தார்”. நிறுத்தினார் அகஸ்தீஸ்வரன்.
“என்னடா நம்ம குடும்ப வரலாற்றை கேட்ட சார்வால் புராண கதையெல்லாம் பேசிக்கிட்டு இருக்காரு” என சந்திரனுக்கு மனச்சோர்வு தான். ஆனாலும் “இவர் மட்டும் தானே நம்ம குடும்ப கதையை சொல்லப்போறேன்னு சொல்லியிருக்காரு எனவே பொருமையா இருப்போம்” என்று நினைத்தான்.
வாசுத்தான் கேட்டார். “சார்வால் இராமபிரான் ஏன் லட்சுமி நாரயணரா காட்சி தரணும். இராமபிரான் சீதா பிராட்டியா காட்சி தர வேண்டியது தானே”.
“நல்ல கேட்ருறுவே. இந்த பிறப்பில் சீதாதேவி சிறை யெடுக்கப்பட்டதால் சீதா ராமனாக காட்சி தர முடியலை. அம்புடுத்தான்”. சிரித்தார் அகஸ்தீஸ்வரன்.
“சார்வால் இந்த இடம் கூட நம்ம பகுதியில தான் இருக்கா”. சந்திரன் கேட்டான்.
“ஆமாம். திருநெல்வேலி மாவட்டம் அருகன்குளத்தில்தான் காட்சி கொடுத்த இடம் இருக்கு. ஜடாயுக்கு திதி செய்த இடம் “ஜடாயு துறை” ன்னு இப்போதும் அழைக்கப்படுது. ஜடாயுவுக்காக ராமபிரானால் தோண்டப்பட்ட கிணறும் இப்பவும் இருக்கு. இந்த கிணற்றில ஒரு அற்புதம் நடக்குது தெரியுமாடே. மேட்டுல இருக்க இந்த கிணத்துக்கு, ஆழமா இருக்கிற தாமிரபரணி ஆத்து ஊத்து தண்ணீ தான் வருது. சமவெளி பரப்பில் நீர் மட்டம் ஆற்றில் உள்ளதை போல் தான் இருக்கும். ஆனால் ஆற்றங்கரையில் உயரத்தில உள்ள கிணற்றில் உள்ள நீர்மட்டம் ஆற்றின் நீர்மட்டத்தினை விட உயரமாக இருப்பது அபூர்வம்தான். இந்த அபூர்வ கிணறு அருகன் குளத்தில் லெட்சுமி நாரயணர் கோயில் முன்புறம் இருக்குடே”. அகஸ்தீஸ்வரன் ஆச்சரியமாக சொன்னார்.
“அப்படியா நானும் இந்த பக்கத்திலதான் அலையுதேன். இதை பத்தி கேள்வியே படலையே”. வாசு அப்பாவியாக பேசினார்.
“இப்படித்தான் நம்ம ஊரு பத்தி புரியாமலேயே பலவேறு இருக்காவ. அது மட்டுமா? ஜடாயு விழுந்த இடம் தாமிரபரணி ஆற்றங்கரையில மிக பள்ளமா இருக்கு. சுற்றிலும் உள்ள கிராமங்களான தாழையூத்து, கீழநத்தம், பாளையங் கோட்டை எல்லாம் மிக மேடாக உள்ளது. இதுக்கும் ஒரு காரணம் சொல்லுதாவ. மிகப்பெரிய உருவமான கழுகரசன் ஜடாயு இந்த இடத்தில் விழும் போது மிகப்பெரிய பள்ளம் விழுந்துச்சு”. அகஸ்தீஸ்வரன் சொல்லி முடித்தார்.
அவர் சொன்னபடியே அருகன் குளத்தில் உள்ள ஜடாயுத்துறையில் நாம் நின்று பார்த்தால் அந்த இடம் கழுகரசன் ஜடாயு விழுந்ததற்கு சாட்சியாக மிகப் பள்ளமாக காட்சியளிக்கிறது.
“அது மட்டுமா இன்னும் பல சுவடுகள் இங்க இருக்கு”.
“குரங்கணி கோயில். இந்த இடத்தில் தான் இலங்கைக்கு வானரப்படைகள் செல்ல அணி வகுத்து நின்றன. குரங்குகள் அணி வகுத்து நின்ற இடம் குரங்கணி என்று சொல்லுதாவ. இந்த கிராமத்தின் அருகே குரங்கன் தட்டு என்ற பெயருடன் ஒரு கிராமமும் இருக்கு. இவைகளை வைத்து பார்க்கும் போதும், குரங்கணி முத்துமாலையம்மனுக்கு ஏன் அந்த பெயர் வந்தது என்று ஆராய்ச்சி செய்து பார்க்கும் போதும் இந்த இடம் இராமயண நிகழ்வு நடந்த மிக முக்கிய இடமாக கருதப்படுதுடே. சீதாதேவி தனது முத்துமாலையை போட்டு விட்டு சென்ற இடம் குரங்கணிதான். எனவே இங்குள்ள அம்மன் முத்துமாலையம்மன் னு சொல்லுதாவ. இங்கு அணி வகுத்து நின்ற குரங்குகளிடம் அனுமன் மிக தெற்காக வந்து விட்டோம். கொஞ்சம் வடக்கு நோக்கி போய்தான் நாம் இலங்கைக்குப் போகணும் என்று இராமேஸ்வரம் கூட்டிட்டு போயிருக்காரு”.
இது போல ஒரு சம்பவம் தான் இந்த ஊருல உள்ள கோயிலுக்கு இருக்க. அந்த கோயிலு பேரு கள்ளவாண்ட சாமி கோயில். தாமிரபரணி ஆற்றங்கரையில மணல் கரைகளை கொண்ட ஒரு ஊர்தான் மணக்கரை. இங்க நடந்த ஒரு சம்பவம் தான் கிஷகிந்தை காண்டம் நடந்த இடமா கருதுறாவ.”
சந்திரன் நிமிர்ந்து உட்கார்ந்தான். வாசுவும் “என்ன சார்வால் நம்ம ஊரு பக்கத்தில வந்திட்டுய்ய கள்ளவாண்ட சாமி எனக்கு நல்லா தெரியும். அந்த கோயிலுக்கு இராமயணத்துக்கும் தொடர்ப்பு இருக்கா”. என்றார்.
“ஆமாம் இந்த கோயில் தோன்றிய வரலாற்றை முதலில சொல்றேன் கேளுங்க” என்று அந்த நீண்ட நெடிய வரலாற்றை கூற ஆரம்பித்தார் அகஸ்தீஸ்வரன் .
“மணக்கரை கிராமத்தில்தான் கிஷ்கிந்தை காண்டத்தின் முக்கிய நிகழ்வான வாலிவதம் நடந்ததா சொல்லுதாவ.வாலி ரொம்ப பலசாலி. யாராவது அவருக்கு எதிரா நின்னு சண்டை போட்டா அவிய பலம் புறாவும் வாலிக்கு வந்திரும். அதனால எந்த பலசாலி எதித்து நின்னாலும் வாலியை ஜெயிக்க முடியாது. அதனால தான் மணக்கரையில் வாலியை வதம் செய்ய ராம பிரான் மறைந்து நின்னு தாக்கி புடுவாரு. கடைசில வாலி சரிஞ்சி விழுந்து சாக போற நேரத்தில நம்மல ராமன் தான் அம்பு ஏய்து கொன்னு புட்டான் னு தெரிஞ்சவுடனே “கள்ள ராமா” ன்னு ராமனை வாலி சொல்லிட்டு செத்து போயிருவாரு. இந்த இடத்தில் கள்ளத்தனமாக இருந்து வாலியை வதம் செய்த ராமன் கள்ள ஆண்டவர் ஆகிருறாரு. ஆகவே தான் இவரை நம்ம ஊரு பகுதியில கள்ளவாண்டன்னு கூப்பிடுதாவ.
வாலியை வதம் செய்ததற்கு அடையாளமாக இந்த கள்ள வாண்ட சுவாமி எதிரே ஒரு கழு(தூக்கு)மரம் இருக்கு. கள்ளவாண்ட சுவாமி கோயில் ராமர் நினைவாக உருவாகி இருக்காவ நம்ம முன்னோருக. இந்த சுவாமியை ஸ்ரீவைகுண்டம் தாலூகாவில் மட்டும் தான் பாக்க முடியும். மணக்கரையில் இருந்து தான் பிடிமண் எடுத்து இந்த கோயிலை உருவாக்குவ. கள்ளவாண்ட சுவாமி கோயில் எங்கே இருந்தாலும் அதற்கு மூலக்கோயில் மணக்கரை தான். இங்கிருந்து பிடிமண் எடுத்து, முத்தாலங்குறிச்சி, நடுவக்குறிச்சி, ஆறாம்பண்ணை, ஆதிச்சநல்லூர், கருங்குளம், அரசர்குளம், வல்லக்குளம், தீராத்தி குளம், ஸ்ரீபராசங்குநல்லூர், ஸ்ரீராமன்குளம், கிளாக்குளம், பெருமநேரி, கள்ளிக்காடு ஊருல வச்சிருக்காவ. ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் நாடார் சமுதாய மக்கள் மட்டுமே இந்த கோயிலை கும்பிடுதாவ. இந்த சுவாமி மீது மற்ற சாதி மக்களுக்கும் பிரியம் ஏற்பட்டுச்சி. அதனால இந்த கோயிலை எப்படியாவது நம்ம சாதிக்கு கொண்டு போகணுமுன்னு பல சாதி காரங்க ஆசைப்பட்டாவ. இப்படித்தான் உங்க ஊரு கள்ளவாண்டசாமியையும் மத்த சாதி காரங்கள் நம்ம கோயிலா ஆக்கணுமுன்னு திட்டம் போட்டவ”.
“வித்தியாசமான வரலாறே இருக்கே. நான் இதுவரைக்கு கேட்டதே இல்லையே” என வாசு அகஸ்தீஸ்வரனிடம் சொன்னார்.
“ஆமாம் இது ஒரு நீண்ட வரலாறு. இதுல நாடாருங்க முன்னேற்றத்துக்கு ஒரு அடிதளமாவும் இருந்தது. சரி. வரலாற்றுக்கு வருவோம். பக்கத்தில இருந்த சேரிக்காரங்க கள்ளவாண்ட சாமி மேலே உயிரா இருந்தாவ. கோயில் கொடைக்கு அவியளும் வந்து பழியாக காத்து கிடந்தாவ. வேட்டை பானை போடும்போது அவியளும் ஒரு பானையை போட்டாவ. அவியளுக்கு எப்படியாவது இந்த சாமியை பிடி மண் எடுத்து அவிய தெருவுக்கு கொண்டு போவணுமுன்னு ஆசைபட்டாவ. அதுக்கு நம்ம ஊரு பக்கத்தில அக்ரகாரத்தில இருக்கிற பிராமணர்களும் சப்போட்டா இருந்தவ”.
அகஸ்தீஸ்வரன் வாத்தியார் சொல்ல சொல்ல அந்த கதை பிளாஷ்பேக் ஆகாவே விரிந்தது.
அந்த நாள் நிறைமாத பானையேத்து கொண்ட நாள். சித்திரை மாதம் ஊரே அதிகாலை 3 மணிக்கு பனை ஏற கிளம்பி விடுவார்கள். ஊரில் யாரும் இருக்க மாட்டார்கள். அன்றும் அப்படித்தான் ஊரே பனையேற கிளம்பியது. பெண்கள் தங்களது குழந்தைகளை தூக்கி கொண்டு அவர்களும் கிளம்பினார். வயதானவர்களும் தங்கள் பங்குக்கு தங்கள் குடும்பத்துக்கு உதவி செய்ய கிளம்பினர்.
அதிகாலை 3 மணிக்கு அருவாள் தீட்ட கல் தட்டி பொடியாக்கி அதை கொண்டு அரிவாள் தீட்ட ஆரம்பித்தார்கள்.
இந்த ஓசை வித்தியாசமாக இருந்தது. கல் தட்டும் போது டக் டக் என்ற ஓசை கிளம்பியது. அதன் பின் அரிவாள் தீட்டும்போது சர் சர் என்று வரும் ஓசை ஏதோ ஒரு இசைப்பாடலை நினைவு படுத்தியது.
“பனை மரமே பனை மரமே
பக்குவமாய் இரு பனை மரமே
பலன் மேல் பலன் தருமே
பல பல நன்மை தரும் கற்பகதருவே
தினந்தோறும் உனை தேடுமே
பயினி தருவாய், நொங்கு தருவாய்
கருப்பட்டி தருவாய், கற்பக தேன் நீ அம்மா
எங்கள் குல தெய்வம் , பனங்கிழங்கு தருவாய்
நார் தருவாய் நார் பெட்டி நெய்வோம்
ஓலை தருவாய் குடிசை கட்டுவோம்
பெட்டி முடைவோம் பொங்கல் படி கொடுப்போம்
ஓலை சுவடியில் வரலாறு எழுதுவோம்
நீ தரும் பலன் இன்றி யார் வாழ்வார் உலகில்
தாயே எங்கள் தாயே கருணை வைப்பாய்
உழைக்கும் எங்களை காத்தருவாய்”
ராஜ துரை நாடாருதான் இது மாதிரி கவிதையெல்லாம் எழுதுவார். இந்த ஊரிலே ஒரளவு படித்தவர் இவர்தான். அந்த காலத்து மூனாங்கிளாஸ். ஆனால் அறிவு அதிகம். பனை தொழிலாளிகள் உடலை மூலதனமா வைச்சி உழைககிறது. அப்புறம் எதுவுமே சேர்த்து வைககாம எல்லோருககும் வாரி வாரி இறைககிறது இதையெல்லாம் ஆச்சரியத்தோட பார்ப்பாரு.
பனை மீது அவருககு அப்படியரு பற்று . “ஏலே அவ்வளவு பேரும் பனையேற போறது சரி. அக்கம் பக்கத்தில என்ன நடக்குதுன்னு பத்திரமாக பாருங்க. கொஞ்ச நாளா நம்ம கள்ளாண்ட சாமி கோயிலை சுத்தி சில பேரு மர்மமா லாந்திக்கிட்டு அலையிறானுவ”. என்று எல்லோரிடமும் சொல்வார்.
“கோயிலை சுத்தி அலைஞ்சி என்ன மச்சான் செய்யுவனுவ. நாமத்தான் கோயில் சாமானை எல்லாம் ஊருக்கு மத்தியில காவடி கூடத்தில வைச்சி பூட்டியிருக்கோமே”. ராமசாமி நாடார் சந்தேகமாவே கேட்டாரு.
“சரி தான் நாம ஓலை குடிசையில வாழ்ந்தாலும். சுவாமிக்கு மட்டும் காவடி கூடம் நல்ல சிமெண்ட் போட்டு கான்கிரிட் கட்டிடமுல்லா கட்டி வைச்சிருககோம்”. சிரித்தார்.
“மச்சான். இப்பத்தான் பனையில கூட கொஞ்சம் பதனீ கிடைக்கு. அந்த பதனீரை கருப்பட்டியாக்குறதுக்குள்ள நம்ம வீட்டு பொம்பளைய படாத பாடு படுதாளுவ. என்ன செய்ய நம்ம பொழப்பு இப்படி இருக்கு”.
“யோவ். கொஞ்சமாது அறிவு இருக்காவே. நாம என்ன தொழில் செய்யிறோம். பத்ரகாளி தந்த அமிர்தத்தை ஊர் மககளுக்கு கொடுக்கிற தொழில் செய்யிறோம். சாதாரணமான விஜயமாடே. நாம் தெய்வப் பிறவிடே. பத்ரகாளி பிள்ளையடே. இதுக்கெல்லாம் சலிக்க கூடாது ஆமாம். யாருககும் கிடைககாத தேவமிர்தத்தை இந்த பூமிக்கு கொடுக்கோம் தெரியுமுலா”
“சரி மச்சான்” அவர் அமைதியாக கிளம்பினார்.
தொடர்ந்து வீட்டுக்கு இரண்டு பேருவிதமாக முருக்கு தட்டியை தோளில் வைத்துக்கொண்டு, கோமலம் பாய்த்து கொண்டு, தர்நாரை தலை¬யில் வைத்து கொண்டு, இடுப்பில் அரிவாள் பொட்டியை போட்டுக்கொண்டு கிளம்பினர். அனைவர் மார்பிலும் பனை இழைத்த காயம் இருந்தது. அந்த காயம் காய்த்துபோய் கருகருத்து இருந்தது.
அவர்களை தொடர்ந்து பெண்களும் கிளம்பினர். அவர்களின் தோளிலும் கைகளிலும் குழந்தைகளை தூக்கி சுமந்தபடியே சென்றார். இனி மாலை வரை விடிலி காட்டில் தான் இவர்களுக்கு வேலை. சுள்ளி பொறுக்கணும். பதனீர் வாங்கணும். பதனீர் காய்க்கணும். தொடர்ந்து கருப்பட்டி ஊற்றனும், அதை சீர் செய்யணும். கொட்டானுல அடைக்கணும். எவ்வளவு வேலை . அனைத்தையும் இவர்களே செய்ய வேண்டும். இதற்கிடையில் விறகுபொறுக்க எதிர்கரைக்கு போக வேண்டும்.
குழந்தைகள் விடிலி காட்டுல தான் கிடக்கும். பாம்பு, பூரான், தேள் கடித்தாலும் கடித்து விடும். பல குழந்தைகள் விஷம் ஏறி இறந்தும் இருக்கிறது. ஆனாலும் இந்த தொழில் தானே நம்ம குல தொழில் மாற முடியுமா?
கொஞ்சம் கொஞ்சமாக அந்த கிராமமே காலியானது. கிடையில் கிடக்கும் பெரிசுகளை தவிர 99 சதவீதம் பேர் விடிலிகாட்டுக்குள் சென்றனர்.
இந்த வேலையில் தான் சேரிக்கார்கள் அந்த வேலையை காட்ட ஆரம் பித்தனர். இது தான் சரியான தருணம் என நினைத்து கள்ளவாண்ட சுவாமி கோயில் பிடிமண் எடுக்க தாயரானார்கள்.
இதற்காக கொட்டு மேளத்துடன் கோயிலுக்கு வந்தனர். திடீரென் கோயில் பிடிமண்ணை எடுக்க தயரானார்கள். இதற்காக அதிகாலையில் கெட்டி மேளம் முழங்க ஆரம்பித்தது.
விளங்காட்டில் நின்றவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.
“ஏடே நம்ம கள்ளவாண்ட சாமிகோயிலில் கொட்டு அடிக்குடே”.
“எப்படிடே நம்ம எல்லாம் இங்க இருக்கும் போது அங்க யாருடே கொட்டடிக்காவ”.
“ஏதோ நடக்கு. நம்ம குலதெய்வத்துக்கு ஏதோ பிரச்சனை”.
“என்னன்னு தெரியலையே”.
அனைவரும் பனை மரத்தை விட்டு பரபரப்பாக கீழே இறங்கினார்கள்.
பொம்பளையும் ஆம்பிளையும் ஓட்டமும் நடையுமா ஊருக்குள் ஓடி வந்தார்கள்.
“என்ன ஆச்சி. ஏதாச்சு”. அனைவருக்கும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அங்கே நையாண்டி மேளம் கொட்டி பிடிமண்ணை எடுத்துகிட்டு சேரி மக்கள் கிளம்பி கொண்டு இருந்தார்கள்.
ராஜதுரை நாடார் ஓடியே வந்தார்.
அனைவரையும் மறைந்து நின்றார்.
“எங்க வந்து யாரு சாமியை கொண்டு போறீய. விடமாட்டேன்” என்று கர்ஜித்தப்படியே அவர்களை மறைந்து நின்றார்.
“எங்களை கிச்சான் ஐயர்தான் எடுக்க சொன்னார்”. என்று சேரி குடும்பன் சொன்னார்.
“எவரு சொன்னா என்ன. இது எங்க சாமி. எங்க குலதெய்வம். கள்ளவாண்ட சாமி. இந்த சாமியை எங்க உயிர் போனாலும் யாரும் கொண்டு போவ விடமாட்டோம்”.
ராஜதுரை அனைவரையும் மறித்தபடி நின்றார். அதற்குள் மொத்த பனையேறி கூட்டமும் அங்கு வந்து சேர்ந்தது. அடுத்த கட்டம் என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமல் சேரி மக்கள் தவிததனர்.
அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது.
(முத்துகிளி தொடர்ந்து கூவுவாள்)


