தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளம் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா. இவரது மகன் சங்கர் (வயது33). சங்கர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று மதியம் சங்கரை அவரது சகோதரர் கண்ணன் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனைக்கு பைக்கில் அழைத்து சென்றார். பைக் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் வந்தபோது பைக்கை நிறுத்தச்சொன்ன சங்கர் பைக் நின்றவுடன் அதில் இருந்து இறங்கி திடீரென யாரும் எதிர்பாராதவிதமாக ஆற்றுப்பாலத்தில் இருந்து அணைக்கட்டுக்குள் குதித்தார்.
இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் நிலைய அலுவலர் இசக்கி தலைமையிலான தீயணைப்புபடை வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி சங்கரை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சங்கர் இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவை இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


