தூத்துக்குடி புத்தக கண்காட்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் வாசிப்பாளர்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார். 24 மணி நேரம் தொடர் வாசிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதே போல் வாசிப்பாளர்களுக்கு டோக்கன் வழங்கி, அதை சேகரித்து இறுதி நாளில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதே போல் நூல் வாங்குவோருக்கு இலவசமாக மரக்கன்று மற்றும் துணிப்பை வழங்கும் திட்டத்தினையும் அறிமுகம் செய்திருந்தார். இதற்காக மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவனம் மூலமாக புத்தகம் வாங்குவோருக்கு இலவச மரக்கன்று மற்றும் துணிப்பை வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் லோக பாலாஜி சரவணன், மாவட்ட வன அலுவலர் அபிசேக் டோமர், சப் கலெக்டர் கௌரவ் குமார், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில் கனிமொழி எம்.பி மரக்கன்றுகளை வழங்கினார். அப்போது அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ மாவட்ட சேர்மன் பிரம்மசக்தி உள்பட பலர் இருந்தனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு மரக்கன்றை வழங்கி இலவச மரக்கன்று வழங்கும் திட்டத்தினை கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார். அதன் பின் கிராம உதயம் மேலாளர் வேல் முருகன், தனி அலுவலர் ராமசந்திரன் மற்றும் ஊழியர்கள் நூல் வாங்கியோருக்கு இலவசமாக மரக்கன்று மற்றும் துணிப்பையை வழங்கினர். அனைவரும் ஆர்வத்துடன் மரக்கன்றுகளை வாங்கிச்சென்றனர். இதே போல் இறுதி நாளான 29 ந்தேதியும் நூல் வாங்குவோருக்கு இலவச மரக்கன்று வழங்க திட்டமிட்டுள்ளனர்.


